புலிகள் இயக்கத் தமிழினியின், “திருமணமும் -மரணமும்”: (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36) -இறுதிப்பாகம்-

Read Time:9 Minute, 13 Second

timthumbநான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது.

வவுனியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டும் பரந்தனுக்குச் சென்ற எனது தாயார் குறைந்த செலவில் ஒரு தற்காலிக இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிக்கத் தொடங்கினார்.

எனது சகோதர சகோதரிகள் திருமணமாகி, குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் நிலையில் நானும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென எனது தாயார் வற்புறுத்தத் தொடங்கினார்.

எனது கடந்தகால வாழ்வில் திருமணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து நான் சிந்தித்தது கிடையாது. அதற்காகத் திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்ற வைராக்கியமும் இருக்கவில்லை. என்னையும் எனது கடந்தகாலத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆண் துணை அமைந்தால் திருமணம் செய்துகொள்வதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபங்களும் இருக்கவில்லை.

ஜெர்மனியிலிருக்கும் எனது நண்பியொருவரும் தங்கையும் எனக்காக மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் மிகவும் குழப்பமடைந்திருந்தேன்.

தமிழ்ச் சமூகம் ஒரு பெண்ணைச் சிறிய வயதிலிருந்தே திருமணத்திற்கு ஏற்றவகையில்தான் வளர்த்தெடுப்பது வழக்கமானது.

எதற்கெடுத் தாலும் “நீ ஒரு பொம்பிளைப்பிள்ளை, இப்படித்தான் இருக்க வேணும்” என்கிற திணிப்புகள் எனது குடும்பத்தவர்களால் என்மீது மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக நிறைந்த அன்பும் சுதந்திரமுமாக வளர்க்கப்பட்டிருந்தேன். நாட்டுக்கான விடுதலையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் போராட்டத்தில் இணைந்துகொண்டேனே தவிர எனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பெரியவர்களை என்றுமே மனம்நோகப் பண்ணியது கிடையாது.

இயக்கத்தில் இருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன.

எனக்குத் தரப்பட்டிருந்த கடமைகளுக்கு அப்பால் தேவையற்ற உணர்ச்சிகள் என்னை ஆட்கொள்ளாதவண்ணம் எனக்கு நானே சில வரையறைகளை ஏற்படுத்தியிருந்தேன்.

என்னுடைய சீருடைத் தோற்றத்தைப் பார்த்த பலர் என்னை அகங்காரம் கொண்ட, திமிர் பிடித்த பெண்ணாகக் கருதி விமர்சித்ததும் உண்டு.

“இதுகள் பதவிப் பொறுப்பு ஆசையில கலியாணம் கட்டாமல் இருக்குதுகள்”, “இதுகளை பாத்தால் ஆரும் கலியாணம் கட்டுவாங்களே” என எமது தோழிகளிடமே எம்மைப் பற்றிக் கூறியவர்களும் இருந்தனர்.

வேறு சிலர் இரகசியமாகப் புத்திமதி சொல்லுவார்கள். “பொடியங்களை ஓவர்டேக் பண்ணி மோட்டார் சைக்கிள் ஓட்டுறது சரியில்லை”, “இப்பிடி மேடையில ஏறி நிண்டு கையை ஆட்டிஆட்டிப் பேசுறது சரியில்லை.” எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற பல பெண் போராளிகளுக்கும் இப்படியான அனுபவங்கள் நிச்சயமாக உண்டு.

இயக்கத்தின் வேலைச் சுமைகளுக்கு மத்தியில் காதோடு வரும் வார்த்தைகளைக் காற்றோடு விட்டுவிட்டுப் போய்க்கொண்டேயிருந்தோம்.

திருமணத்தின்போது கணவர் ஜெயக்குமரனுடன்

இப்போது சமூக வாழ்வில் எனது எதிர்பார்ப்புகளுக்கேற்ற ஒரு துணை அமையும் என நான் பெருத்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கவில்லை.

நிர்ப்பந்தத்திற்காக மனைவி என்ற பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, வீடுவாசல் பெருக்கி, விதவிதமாகச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கோவிலுக்குப் போய் விரதம் பிடித்து, ஒரு பொம்மையாக என்னால் வாழ முடியுமா எனத் தெரியவில்லை.

அதற்காக வாழ்வின் பாதியாகக் கருதும் கணவனுடன் எடுத்ததற்கெல்லாம் ஈகோ போட்டி போட்டு எஞ்சியிருக்கிற எனது மனநிம்மதியை இழந்துபோகிற சக்தியும் என்னிடம் கிடையாது.

சீதனம் கொடுத்து ஒரு கணவனை வாங்கிக்கொள்ளும் அளவுக்கு எனது குடும்பத்தில் வசதியில்லை.

ஆழமான புரிந்துணர்வு கொண்ட ஒரு நட்புள்ளத்துடன் அளவற்ற அன்பைப் பகிர்ந்துகொண்டு, இறுதிவரை சேர்ந்து வாழ முடிந்தால் அதுவே பெருத்த நிம்மதி எனக் கருதினேன்.

எனது புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோரையும் போலவே நானும் விடுலையை எண்ணி மகிழ்ச்சியுடனும் சமூக வாழ்வு பற்றிய பயத்துடனும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.

2013ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தியாறாம் திகதி எனது கணவரான திரு. ஜெயக்குமரன் என்னுடன் முதன்முதலாகத் தொலைபேசியில் பேசத் தொடங்கினார்.

உண்மையில் அன்று அவர் என்னுடன் பேசுவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து பேசினோம். கடிதங்கள் எழுதிக்கொண்டோம்.

ஒளிவு மறைவில்லாத அவருடைய இயல்பான, எளிமையான குணமும், எனது கடந்த காலம் பற்றியதும், எதிர்காலம் பற்றியதுமான அவரின் புரிதல்களும் நான் அவரை ஆழமாக நேசிக்கக் காரணமானது.

திரு. ஜெயக்குமரனுடன் நான் பழகத் தொடங்கியதும் எனது தனிப்பட்ட உணர்வுகளில் காதல், குடும்பவாழ்வு என்பன பற்றிய பல புரிதல்கள் ஏற்பட்டன.

2013.06.26ஆம் திகதி வவுனியா புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி மேஜர் நாமல் அவர்கள் என்னை எனது தாயாரிடம் ஒப்படைத்தார். நீண்ட வருடங்களுக்குப் பின்பு சமூகத்தில் சுதந்திரமாக விடப்பட்டிருந்தேன்.

ஆனால் அந்தச் சுதந்திரத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை. 2013இல் நடந்த வட மாகாணசபைத் தேர்தலில் பங்கெடுப்பதற்காகவே நான் விடுதலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

சிறிதுகாலம் எந்த வேலைப் பளுவும் மனதை அழுத்தாமல் அமைதியாக ஒதுங்கியிருக்க வேண்டும் போல் இருந்தது. என்னால் எனது நண்பர்களுக்கும் நேச உள்ளங்களுக்கும் எவ்விதமான இடைஞ்சல்களோ பாதுகாப்பு அச்சுறுத்தல்களோ ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

2013.09.28ஆம் திகதி எனது பதிவுத் திருமணம் மிகவும் எளிமையாகச் சொற்ப எண்ணிக்கையான உறவுகளுடன் இனிதே நடந்தேறியது.

நான் எதிர்பார்த்ததை விடவும் எனக்கு ஆத்மார்த்தமான அன்பான துணையாக அமைந்த எனது கணவர் பலவழிகளிலும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்.

என்னைக் கட்டிப்போட்டிருந்த குற்றவுணர்ச்சிகளிலிருந்து வெளியே வரவும், சுற்றியிருக்கும் உலகத்தைச் சவாலோடு எதிர்கொள்ளும் துணிச்சலையும் எனது வாழ்க்கையில் மீண்டும் வரச்செய்தார்.

முற்றும்.. தமிழினி-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு நேரத்தில் என்ன உணவுகளை சாப்பிடலாம்?
Next post உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஆவணங்களை தீ வைத்து எரித்த மர்ம கும்பல்…!!