75 வயது முதியவர், 13 வயது சிறுமி `காதல்’ திருமணம்
பீகாரில் பேரன், பேத்தி எடுத்த 75 வயது முதியவர் ஒருவர், 13 வயது சிறுமியை காதலித்து கைப்பிடித்து உள்ளார். “சிலருக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. இது பீகாரைச் சேர்ந்த 75 வயது முதியவர் விஷயத்தில் முற்றிலும் உண்மை ஆகி இருக்கிறது”.
75 வயது முதியவர்
பீகார் மாநிலம், பூர்ணியா மாவட்டத்தில் உள்ள அகதோலா கிராமத்தை சேர்ந்தவர் அன்சார் அன்சாரி. 75 வயதை தொட்டிருக்கும் இவர், ஒரு அரைகுறை கால்நடை வைத்தியர். இவருக்கு மெகரூன்னிசா என்ற மனைவியும், 2 மகன்களும், ஏராளமான பேரன், பேத்திகளும் உள்ளனர்.
இதே ஊரை சேர்ந்தவர் தில் முகமது. இவரும் ஒரு அரைகுறை வைத்தியர்தான். இதனால்தானோ என்னவோ, இவரும் அன்சார் அன்சாரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
காதல் நெருப்பு பற்றியது
அன்சார் அன்சாரி தனது நண்பரை பார்க்க அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது தில் முகமதுவின் மகள் ரூபினா காத்தூனை (வயது 13) கண்டார். உடனே பார்த்த மாத்திரத்தில் இரண்டு பேரையும் காதல் நெருப்பு பற்றிக்கொண்டது.
பேத்தி வயதில் உள்ள சிறுமி மீது காதல் கொள்கிறோமே என்று அன்சாரியும் நினைக்கவில்லை. ஒரு தாத்தா மீது மையல் கொள்கிறோமே என்று ரூபினா காத்தூனும் நினைக்கவில்லை. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்க (!) ஆரம்பித்தனர்.
வீட்டில் எதிர்ப்பு
நாளொருமேனியாக வளர்ந்து வந்த இந்த வினோத காதல் தில் முகமதுவுக்கு தெரிய வந்தது. அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டினார். அவரது மனைவி ஷாசாதி பேகமும் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து காதலர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு காதலன் அன்சார் அன்சாரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதல் ஜோடி இதை பொருட்படுத்தவில்லை.
திருமணம்
இந்நிலையில் கடந்த 20-ந்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முஸ்லிம் மத குரு ஒருவர் இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அன்சாரியை முழு சம்மதத்துடன் மணப்பதாக ரூபினா கூறினாள்.
திருமணம் முடிந்ததும் மணமகள் ரூபினா காத்தூன் தாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். அவர் இன்னும் ஒன்றிரண்டு நாளில் மணமகன் வீட்டுக்கு செல்வார் என்று உறவினர்கள் கூறினர்.
மனைவிக்கு மாரடைப்பு
அன்சார் அன்சாரி திருமணம் செய்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்டதும், அவரது மனைவி மெகரூன்னிசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பூர்ணியா சர்தார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அன்சார் அன்சாரியின் வயது கடந்த திருமணத்தை அவரது மூத்த மகன் முஜீப் அன்சாரி (வயது 45) கண்டித்து உள்ளார். என் தந்தை செய்த காரியம் தவறானது. இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பரபரப்பு தகவல்
இதனிடையே, இந்த வினோத திருமணத்துக்கு கிராம மக்கள் வேறொரு காரணத்தை கூறுகின்றனர். அன்சார் அன்சாரிக்கு தில் முகமது கடன் கொடுக்க வேண்டும். இதைக் கட்ட முடியாமல் திணறிய அவர், அதற்கு ஈடாக தனது மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார் என்று தெரிவித்தனர்.
ஆனால் மணமகள் ரூபினா காத்தூன் இதை மறுத்து உள்ளார். என்னை யாரும் வற்புறுத்தவில்லை. என்னை பார்த்ததும் அன்சார் அன்சாரி தனது காதலை தெரிவித்தார். நானும் அதை ஏற்றுக் கொண்டேன். எனது முழு சம்மதத்தின் பேரில்தான் திருமணம் நடந்துள்ளது என்று அவர் கூறினார்.
ம்…. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு…!