மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி…!! கட்டுரை
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர் நாளை அனுஷ்டித்தனர். இந்தமுறை எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத்தான் பார்த்து விடுவோம் என்று கேலியாகப் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களும் மாவீரர்களை நினைவுகூர முடியாது; அதற்கு இடமளிக்கப்படாது என்று எச்சரித்த அமைச்சர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுள்ளனர்.
இராணுவ அச்சுறுத்தல்களால் சில ஆண்டுகளாக அடங்கிக் கிடந்த மக்களின் உணர்வுகள், கனகபுரத்திலும் முழங்காவிலிலும் வன்னிவிளாங்குளத்திலும் உடுத்துறையிலும் பெரிய பண்டிவிரிச்சானிலும் ஆட்காட்டிவெளியிலும் விம்மலாகவும் கதறலாகவும் வெடித்துக் கிளம்பியதைக் காணமுடிந்தது.
பெற்றவர்களும் உற்றவர்களும் பொதுமக்களுமாக மாவீரர்களுக்கு விளக்கேற்றுவதற்கு தன்னிச்சையாக ஒன்று கூடிய காட்சியை யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.
மாவீரர் துயிலுமில்லங்களை அழித்து, அவற்றின் தடயங்களையே இல்லாமல் செய்தும், அவற்றின் மீது படைத்தளங்களை நிறுவியும் ‘இனியென்ன செய்ய முடியும்’ என்பது போன்று கேள்வி எழுப்பிய முன்னைய ஆட்சியாளர்களையும் படைத்தரப்பையும் இப்படியொரு நிகழ்வு நிச்சயம் கூனிக்குறுகவே செய்திருக்கும்.
பெரும்பான்மையின மக்களுக்கும் பெரும்பான்மையின அதிகார வர்க்கத்துக்கும் இந்த மாவீரர் நாளின் ஊடாக ஒரு செய்தி தமிழ்மக்களால் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்டுகள் பல கடந்தாலும் மாவீரர்களை நினைவு கூரும் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்பதே அதுவாகும்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடைப்பிடித்த இராணுவ அடக்குமுறைகளின் ஊடாகவோ அல்லது, தற்போதைய அரசாங்கத்தின் இனநல்லிணக்கம், சமாதான சகவாழ்வு என்ற அணுகுமுறைகளின் ஊடாகவோ, தமிழ் மக்களின் உள்ளுணர்வுகளைக் குழிதோண்டிப் புதைத்து விட முடியாது என்ற தெளிவான செய்தி இந்த மாவீரர் நாளின் ஊடே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள், தமிழ்மக்கள், தமிழர்களின் அரசியல் இலட்சியம் என்பன தொடர்பாகப் பெரும்பான்மையின மக்கள் மற்றும் பெரும்பான்மையின அதிகார வர்க்கத்திடம் இருக்கின்ற தெளிவற்ற கருத்துகளைப் போலவே, மாவீரர் நாள் தொடர்பான விடயத்திலும் தெளிவான பார்வை இல்லை.
மிக அண்மையில் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அபிவிருத்தியில் வடக்கு மக்கள் ஒதுக்கப்பட்டதால் தான் ஆயுதமேந்திப் போராடும் நிலை ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் போராட்டம், வெறுமனே அபிவிருத்திக்கானது என்ற கருத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமன்றி, பெரும்பான்மையின அரசியல் தலைமைகளிடமும் இருக்கிறது.
தமிழ் மக்கள், தமது உரிமைகள் பறிக்கப்பட்ட போதும், அவை மறுக்கப்பட்ட போதும் தான் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
அகிம்சைப் போராட்டங்களும் அரசியல் போராட்டங்களும் தோல்வியுற்ற நிலையில் தான் தமிழர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்களே தவிர, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆயுதமேந்தவில்லை; போராடவில்லை.
புலிகளின் ஆயுதப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிராக, அரசாங்கங்களாலும் சிங்கள அரசியல் தலைமைகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளின் விளைவு என்பதே உண்மை.
விடுதலைப் புலிகளின் கொள்கைக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் வேறுபாடு இருப்பது போன்றும் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் இருந்தே, விடுதலைப் புலிகளின் கொள்கை உருவாக்கம் பெற்றது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
விடுதலைப் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவீரர் நாளையும் அவர்களுடன் இணைந்து போராடிய மாவீரர்களையும் இன்றும் தமிழ் மக்கள் நினைவு கூருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம், புலிகளின் கொள்கையின் மீது தமிழ்மக்களுக்கு இருந்த உடன்பாடுதான்.
இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டதால் தான் தமிழ் மக்கள் ஆயுதமேந்தினார்கள் என்பது போன்ற கற்பனாவாதங்களின் மீது அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.
மாவீரர் தினத்தை நினைவு கூருவது, சட்டவிரோதம் என்றும், அதற்கு அனுமதிக்கப்படாது என்றும், தடைகளைப் போட முனைந்திருந்தாலும், வெளிப்படையாக இறங்கி அதனைத் தடுக்கும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்காதிருந்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமே.
இந்த விடயத்தில் அரசாங்கம் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தமை முக்கியமானதொரு திருப்பம்தான்.
ஆனாலும், அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற பெரும்பான்மையின இனவாதிகளாலும் தம்மை முற்போக்குவாதிகளாக் காட்டிக்கொள்ளும் பிற்போக்குவாதிகளாலும் தமிழ் மக்களின் உணர்வுகளை இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
மாவீரர்களை நினைவு கூர்ந்தால், மீண்டும் புலிகள் வந்து விடப் போகிறார்கள் என்பது போன்று இவர்கள் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் கட்டமைப்புகளும் இல்லை; அதன் தலைமையும் இல்லை; அப்படியிருக்க மீண்டும் புலிகள் வருவது அதுவும், இத்தகைய இராணுவக் கட்டுக்காவலையும் மீறி எழுந்து வருவது ஒன்றும் சாத்தியமான விடயமல்ல.
ஆனாலும், இதுபோன்ற விடயங்களைச் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பூதாகாரப்படுத்தி, அரசியல் நடத்துவதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
இராணுவப் புலனாய்வாளர்கள் தம்மை உற்று நோக்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டும், துயிலுமில்லங்களை நோக்கி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அணி அணியாக வந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது.
அந்தத் துயிலுமில்லங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது. அவர்களின் உறவுகள், நண்பர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கிகளினாலும் காவலரண்களினாலும் கடந்த சில ஆண்டுகளாகத் தடுக்கப்பட்டிருந்த தமது உணர்வுகளை, இந்த முறையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுதான், துயிலுமில்லங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு.
துயிலுமில்லங்களில் தமது உறவுகள் புதைக்கப்படாதவர்களும் கூட, அங்கு கூடினார்கள் என்றால், அதற்குக் காரணம் தமக்காக உயிர் கொடுத்தவர்களுக்கு நன்றிக்கடனைச் செலுத்த வேண்டும் என்ற எண்ணமே காரணமாக இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் துயிலுமில்லங்களில் தமது கவலையையும் ஆற்றாமையையும் கொட்டிப் புலம்புகின்ற வாய்ப்பு இம்முறை கிடைத்த போது, அதனைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
நிலைமாறுகால நீதியில், காயங்களை ஆற்றுதல் முக்கியமான ஒரு விடயம்.
தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை ஆற்றுவதற்கு இதுபோன்ற ஒன்றுகூடல்கள் அவசியம். இதனை உளவியல் நிபுணர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் வலியுறுத்திய போதும் முன்னைய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
தமது உறவுகள், பிள்ளைகள் எங்கு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்களோ, அந்த இடங்களைச் சிதைத்து, அதன் மீது வெற்றிக்கொடி நாட்டினார்கள்.
ஆனால், இத்தகைய செயல்களின் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளையும் தமது உறவுகளின் நினைவுகளையும் அழித்து விடலாம் என்ற கற்பனை இப்போது சிதறடிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னராவது, பெரும்பான்மையின மக்களினதும் தலைமைகளினதும் அதிகார வர்க்கத்தினதும் அணுகுமுறைகளில் மாற்றங்கள் இருக்க வேண்டும்.
அண்மையில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த நிசாந்த சிறிவர்ணசிங்க, “பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலமும் மாவீரர் தினத்தை நினைவு கூருவதன் மூலமும் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர்? தமிழ் மக்களுக்கு பிரபாகரன் போன்ற ஒரு தலைமை வேண்டுமா? அவர்கள் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றனரா” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்?
விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் தாம் எத்தனையோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் தமிழ் மக்கள் அவர்களை நினைவு கூருவது ஏன் என்ற குழப்பம், பெரும்பான்மையின அரசியல் தலைமைகளுக்குள் ஏற்பட்டுள்ளது என்பதையே இந்தக் கேள்விகளின் மூலம் உணர முடிகிறது.
மீண்டும் பிரபாகரனை அவரது தலைமையை தமிழ் மக்கள் விரும்புகின்றனரா என்று எழுப்பிய கேள்வியின் உள்ளர்த்தம் வேறு விதமானது; என்றாலும், தமிழ் மக்கள் அத்தகைய ஒரு விருப்பை இன்னமும் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரும்பான்மையின அரசியல் தலைமைகளே.
தமிழ் மக்களுக்கான நீதியை, அவர்களின் உரிமைகளை வழங்க மறுத்து வருவதன் விளைவே இது. பெரும்பான்மையினத் தலைமைகளின் தவறுகளே தமிழர்களை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலையை ஏற்படுத்தியது.
பெரும்பான்மையினத் தலைமைகளின் தவறுகளின் விளைவுதான் விடுதலைப் புலிகளின் தோற்றமும் பிரபாகரனின் உருவாக்கமும்.
இனிமேலும்கூட, தமிழ் மக்களின் குறைகளைப் போக்காமல் அவர்களுக்கான நீதியையும் உரிமைகளையும் வழங்காமல் பிரபாகரனைக் கொண்டாடுவதையும் மாவீரர்களை நினைவு கூருவதையும் குறைகூறுவதையே பெரும்பான்மையினத் தலைமைகள் செய்து கொண்டிருக்குமேயானால் தமிழ் மக்களிடம் இருந்து இன்னும் இன்னும் அவர்கள் அந்நியப்படுவார்களே தவிர, நெருங்கி வர முடியாது.
Average Rating