அழகென்ற சொல்லுக்கு அமுதா..!! விமர்சனம்
நடிகர் ரிஜன் சுரேஷ்
நடிகை ஆஷிதா
இயக்குனர் நாகராஜன்
இசை ராஜின் மஹாதேவ்
ஓளிப்பதிவு கல்யாண்ராம்
வடசென்னையில் வாழக்கூடிய நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது இதுதான் அவருடைய பொழுதுபோக்கே. இவரை மாதிரியே இவருடைய நண்பர்களுடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.
அதேபோல், நாயகனுக்கு ஒரு குணாதிசயமும் உண்டு. அது என்னவென்றால், எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இப்படியாக, அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் இளநீர் குடித்துக் கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் அழகை பார்த்து சிரித்து விடுகிறாள்.
அந்த சிரிப்பை பார்க்கும் நாயகனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அன்றுமுதல் அவளை பின்தொடர்வதையே வேலையாக இருந்து வருகிறார் நாயகன். தன் பின்னாலேயே சுற்றுவதால் நாயகி, பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவளை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறாள். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.
ஒருபடி மேலே போய் நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடம் போய் புகார் செய்கிறார். அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தும் நாயகன் எதற்கும் அடங்கிய பாடில்லை. கடைசியில், நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி என்ன முடிவெடுத்தாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க வடசென்னையில் நடக்கிறது. வடசென்னையில் வாழக்கூடிய சில இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜன். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் எந்த பெண்ணை எப்படியாவது டார்ச்சர் செய்து, அவளை காதலிப்பதற்கு ஒத்துக் கொள்ள வைக்கும் இளைஞனின் அலுச்சாட்டியத்தை இப்படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வில் முதல் வெற்றி பெற்றுவிட்டார். மேலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருப்பதும் நன்றாக தெரிகிறது.
நாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் ரஜினி ஸ்டைலில் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து கேள்வி கேட்பது, இவருடைய டார்ச்சர் தாங்க முடியாத போலீஸ்காரர் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பது என படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.
வசனங்கள் பேசும் ஸ்டைலிலும் இவர் ரசிக்க வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தியிருக்காரா? அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா? என்பதுபோல் இருக்கிறது. நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.
படத்தில் நாயகனுக்கு நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரியாத மாதிரி இருக்கும். ஆனால், நாயகனின் கோமாளித்தனமான கதாபாத்திரத்தை உணர்ந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்து மகிழலாம்.
ரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ அழகு.
Average Rating