தொழிலில் நஷ்டம்: மனைவி, 2 மகள்கள் கழுத்தை இறுக்கி கொலை…!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வீடு, வீடாக சென்று தவணை முறையில் பொருட்களை கொடுத்து பணம் வசூலித்து வந்தார்.
இவருக்கு ஜமுனா (40) என்ற மனைவியும், ஐஸ்வர்யா (16), அபிநயா (11) ஆகிய மகள்களும் இருந்தனர். ஐஸ்வர்யா 11-ம் வகுப்பும், அபிநயா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் முருகனை பார்க்க அவருடைய தம்பி கண்ணன் நேற்று காலை முருகனின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்குள் முருகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். ஜமுனா, ஐஸ்வர்யா, அபிநயா ஆகியோர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய முருகனை மீட்டு, தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு:-
வீட்டு உபயோக பொருட்களை தவணை முறையில் கொடுத்து வந்த முருகன் பணத்தை வசூலிக்க முடியாமல் தொழிலில் நஷ்டம் அடைந்தார். இதனால் வேதனை அடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் காலையில் மகள்கள் 2 பேரும் பள்ளிக்கூடம் சென்றனர். வீட்டில் தனியாக இருந்த மனைவி ஜமுனாவை, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து முருகன் கொன்றார். பின்னர் மனைவியின் உடலை வீட்டுக்குள் போட்டு பூட்டிவிட்டு உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டார்.
மதியம் பள்ளிக்கூடம் சென்று மகள் அபிநயாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவரையும் மகள் என்று பாராமல் முருகன், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்தார். அப்போது முருகன், துப்பட்டாவால் ஐஸ்வர்யாவையும் கழுத்தை இறுக்கி கொன்றார்.
மனைவி, 2 மகள்களை கொன்று விட்டு முருகன் வீட்டுக்குள் விடிய, விடிய கண்விழித்து இருந்தார். அதிகாலையில் கத்தியால் தனக்குதானே கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காலையில் முருகனை தேடி, அவருடைய தம்பி வந்ததால் காப்பாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
முருகன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘எனது குடும்பத்தினர் சாவில் சந்தேகம் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்தேன். எனக்கு தரவேண்டிய பணத்தை தராதவர்கள் நன்றாக இருக்கட்டும். மோசடி செய்தவர்களால் எனது குடும்பத்தையே கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டு விட்டேன். நான் ஆசையாக வளர்த்த மகள்கள், அன்பிற்குரிய மனைவியை கொலை செய்த என்னை கடவுள் மன்னிக்க மாட்டார். நாங்கள் இறந்தவுடன் எங்களின் உடல்களை மருத்துவ கல்லூரிக்கு கொடுத்து விடுங்கள்’ என்று எழுதி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating