ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -98) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

Read Time:14 Minute, 44 Second

timthumbஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!!
•தாயகம் காக்க ஊருக்கு நூறுபேர்

•ஐந்து நாட்களில் 2 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள்.

இரண்டு கைக்குண்டுகள்

1987 ஆகஸ்ட் 18

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்தின் அழகான கட்டிடத்துக்குள் ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பாராளுமன்றக் கட்டிடத்துக்குள்தான் நடைபெறும்.

ஜனாதிபதிதான் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் காரசாரமான விவாதங்கள் எழக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் ஜே.ஆர். தயாராக வந்திருந்தார்.

ஜே.ஆர்., பிரேமதாசா, லலித் அத்துலத்முதலி மற்றும் அமைச்சர்கள், ஆளும் கட்சிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும் கூட்டம் ஆரம்பமானது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் முதலாவது கைக்குண்டு வீசப்பட்டது.

பயங்கரமான சத்தத்துடன் வெடித்தது. ஜே.ஆர். இருந்த பக்கமாகவே கைக்குண்டு வீசப்பட்டது. ஆனாலும் ஜே.ஆர். இருந்த இருக்கை அருகே விழாமல் முன்னாலேயே விழுந்து வெடித்து விட்டது.

வெடித்த இடத்தில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.

கைக்குண்டு வெடித்ததும் எல்லோரும் ஒரு கணம் திகைப்பில் உறைந்து போனார்கள்.

ஜே.ஆர் அருகில் இருந்த பிரேமதாசா ஒரு நொடி அதிர்ந்து போனாலும் மறு நொடியே உராகிவிட்டார்.

தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்த பிரேமதாசா அருகில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆரின் கையைப் பிடித்து இழுத்தார்.

இழுத்தபடியே ஒரு மேசைக்குப் பின்னால் ஜே.ஆரை அழுத்தி இருக்க வைத்துக்கொண்டு தானும் குனிந்து மறைந்து கொண்டார்.

அதே நேரம் ஜே,ஆரின் இருக்கையை நோக்கி இரண்டாவது கைக்குண்டு வீசப்பட்டது. இம்முறை குறி தப்பவில்லை. ஆசனமருகே வெடித்துச் சிதறியது.

ஆசனத்தில் இருந்திருந்தால் ஜே.ஆர் தப்பிக்க சந்தர்ப்பமே இருந்திருக்காது.

பிரதமர் பிரேமதாசா அவரை இழுத்து மறைத்து துரிதமாகச் செயற்பட்டதால் ஜே.ஆர். உயிர்தப்பினார்.

ஜனாதிபதி ஜே.ஆரை பத்திரமாகப் பதுங்க வைத்துவிட்டு பிரேமதாசா பதுங்கிக் கொண்டதால் இரண்டாவது கைக்குண்டு வெடிப்பால் பிரேமதாசாவின் உடலில் சிறு காயங்களை ஏற்படுத்தியது.

ஜே.ஆரின் உடலில் மட்டும் சிராய்ப்புக் காயங்கள் கூட இல்லை.

செய்ததறியாது தனது இருக்கையில் திகைத்திருந்த ஜே.ஆரை, பிரதமர் பிரேமதாசா இழுத்து மறைத்திருக்கா விட்டால் 1987 ஆகஸ்ட் 18ம் திகதிதான் ஜே.ஆர் மறைந்த தினமாகியிருக்கும்.

ஜே.ஆர் மறைவு

இந்த அரசியல் தொடரில் ஜே.ஆரைக் கொல்லத் தீட்டப்பட்ட சதி பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். பூரணமாக அதனை விபரிப்பதற்கு முன்னரே ஜே.ஆர் கடந்த வாரம் 1.11.96ல் மறைந்துவிட்ட செய்தி முந்திக்கொண்டு வந்துவிட்டது.

ஜே.ஆர். ஒரு தீர்க்கதரிசி, நேர்மையாளர், ஐக்கிய இலங்கை உருவாக அயராது உழைத்தவர். அவர் ஒரு சகாப்தம் என்றெல்லாம் துணிந்து பொய் சொல்லமாட்டேன்.

1977 இனக்கலவ நேரத்தில் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று நிராயுதபாணிகளான மக்களை நோக்கி அவர் விட்ட சவால் செவிகளில் இன்னமும் ஒலிக்கிறது.

ஒருவர் மறைந்து விட்டால் அந்த மரணத்துடன் சேர்த்து அவரது குறைகளையும் மறந்துவிடவேண்டும் என்பது சம்பிரதாயம்.

ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் காரணமாக இருந்தமையை மறந்துவிட முடியவில்லை. அதனால் அந்த சம்பிரதாயத்தோடு உடன்படமுடியவில்லை.

எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற விடயத்தில் அதற்கான எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சாமல் ஜே.ஆர் செயற்பட்டதை பாராட்டலாம்.

எதிர்ப்புகள் எழுகின்றன என்று பூச்சாண்டி காட்டாது, அந்த எதிர்ப்புக்களை ஒடுக்கியது அரசியல் துணிச்சலுக்கு அடையாளம் எனலாம்.

லலித் போராட்டம்

பாராளுமன்ற கட்டிட கைக்குண்டு வெடிப்பில் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி படுகாயமடைந்தார்.

மாத்தளை மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபேவிக்ரம கொல்லப்பட்டார். பாராளுமன்ற ஊழியர் சேனாதீர என்பவரும் பலியானார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த லலித் அத்துலத்முதலி மரணத்தோடு கடுமையாகப் போராடவேண்டியிருந்தது. டாக்டர்களின் தீவிர முயற்சி அவரது உயிரைக் காப்பாற்றியது.

கைக்குண்டு வீசியது ஜே.வி.பி என்றாலும், லலித் குண்டுவெடிப்பில் கொல்லப்படவில்லையே என்று தமிழ் அமைப்புக்களும் வருந்தவே செய்தன.

புலிகள் இயக்கத்தின் கொலைப்பட்டியலில் அப்போது முதல் இடத்தில் இருந்தவர் லலித் அத்துலத்முதலி.

மருத்துவமனையில் படுக்கையில் இருந்துகொண்டு லலித் எழுதிய குறிப்பில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

“பாராளுமன்றத்திலிருந்து மருத்துவமனை நோக்கி மோட்டார் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. எனது எண்ணங்கள் விரிகின்றன. முடிவு தவிர்க்க முடியாதது. அது அண்மித்துக் கொண்டும் இருக்கலாம். விரைவாகவும் இருக்கலாம். நான் அதற்குத் தயாராகவே இருக்கவேண்டும்.

எனக்கு மிக நெருக்கமான மனைவி, குழந்தை, மருமகன், மருமகள், சகோதரன், சகோதரிகளைப் பற்றிய கவலை இருக்கிறது”

தான் ஒருவேளை இறந்து விடக்கூடும் என்று கருதியே லலித் அந்தக் குறிப்பை எழுதினார்.

ஆகஸ்ட் 18ல் பாராளுமன்றக் கட்டடத்தில் கைக்குண்டு வீசிய பின்னர் ஜே.வி.பி. தனது நடவடிக்கைகளை துரிதமாக்கியது. ஆகஸ்ட் 19ம் திகதி களுத்துறை மாவட்டத்தில் உள்ள மொறகொல்ல மரக்கூட்டுத்தாபனத்தில் இருந்த வானொலித் தொலைத் தொடர்புக் கருவிகள் ஜே.வி.பியினரால் எடுத்துச் செல்லப்பட்டன.

ஆகஸ்ட் 28ம் திகதி ஜே.வி.பியினரின் செய்தி மடலான “தேசப்பிரேமி” வெளியானது.

‘தேசப்பிரேமி’யின் முதல்வெளியீட்டில் ஒருவருக்கு முதல் மரியாதை தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜீவ்காந்தியைத் தாக்கியவரான ரோகன டி சில்வாவைத்தான் தேசப்பிரேமி பாராட்டி இருந்தது.

இதே காலத்தில் ரோகன டி சில்வா மீது விசாரணை நடைபெற்றது.

ரோகன டி சில்வா

“ராஜீவ் காந்தியை ஏன் கொல்ல நினைத்தாய்?” என்று கேட்கப்பட்டபோது, ரோகன டி சில்வா சொன்ன பதில் இது:

“இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பிரபாகரன் வடக்கு-கிழக்கின் தலைவாகிவிடுவார். அப்படி நடந்தால் ராஜீவுக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது போல, பிரபாகரனுக்கும் நான் மரியாதை செலுத்த வேண்டியிருக்கும்.”

வன்முறைகள்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக 1987 ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 2ம் திகதிவரை மட்டும் தென்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், வன்செயல்களின் எண்ணிக்கை 2527.

உத்தியோகபூர்வ தகவலின்படி 16 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். 529 அரசாங்க மற்றும் கூட்டுத்தாபனக் கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட பஸ்வண்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 187 தொலைத்தொடர்புக் கம்பங்கள் சேதமாக்கப்பட்டன.

331 துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்டன. 561 கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன.

ஜே.வி.பி. அசுர வளர்ச்சிபெறத் தொடங்கியது.

நாகொட பொலிஸ் பிரிவில் தங்கஸ்வலயில் ஒரு இராணுவ முகாம் இருந்தது.

அந்த இராணுவ முகாமுக்குள் இருந்து தகவல்களைத் திரட்டியது ஜே.வி.பி. இராணுவத்தில் ஜே.வி.பி. ஆதரவாளர்களும் இருந்தனர். இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களுக்கு ஜே.வி.பி.க்கு சாதகமாக இருந்த பிரதான அம்சம் அதுதான்.

செப்டம்பர் 28ம் திகதி தங்கஸ்வல இராணுவ முகாமை ஆயுதம் தாங்கிய ஜே.வி.பி. உறுப்பினர்கள் 15 பேர் வரை சுற்றிவளைத்தனர்.

கிடைத்த விபரங்கள் துல்லியமாக இருந்தன. அதனால் கச்சிதமாகத்திட்டமிட்டு முகாமை விழுந்துவிட்டார்கள்.

அதிகம் சண்டைபோடவேண்டியும் இருக்கவில்லை. ஒரு இராணுவவீரர் மட்டும் எதிர்ப்புக்காட்ட முற்பட்டார். அவர் கொல்லப்பட்டார்.
ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த நடவடிக்கைகளால் ஜே.வி.பி.யின் வளர்ச்சி கிடுகிடுவென்று உயர்ந்தது. இளம் வயதினரான ஆண்களும் பெண்களும் ஜே.வி.பி. இயக்கத்தில் சேருவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

கூட்டமைப்பு

சிறீலங்கா சுதந்திரக்கட்சி, தினேஷ் குணவர்தனாவின் தலைமையிலான மகாஜன எக்ஸத் பெரமுன, ஆகிய கட்சிகளும் ஜே.வி.பி.யும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டன.

அந்தக் கூட்டமைப்புக்கு ‘மௌபிம சுரக்கீம வியாபாரய’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழில் அதர் அர்த்தம்;: “தாயகத்தை பாதுகாப்பதற்கான இயக்கம். ஆங்கிலத்தில் சுருக்கமாக எம்.எஸ்.வி” என்று அழைக்கப்பட்டது.

இக்கூட்டமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று பௌத்த குருமார்கள் வழி காட்டினார்கள்.

ஒவ்வொரு சிங்களக் கிராமத்திலும் நூறு சிங்கள இளைஞர்களைத் திரட்டுவது என்று எம்.எஸ்.வி. தீர்மானித்தது.

‘ஊருக்கு நூறுபேர்’ என்று திட்டம் மூலமாக திரட்டப்படும் உறுப்பினர்களை தன்னோடு சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் ஜே.வி.பி.யின் நோக்கம்.

இந்த நோக்கத்தை அறிந்துகொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா 1987 நவம்பரில் எம்.எஸ்.வி.க்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சி வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டார்.

இந்திய அமைதிப்படை IPKF என்று அழைக்கப்பட்டது.

அதனை வைத்து ஜே.வி.பி. சூட்டிய பெயர் இது. ‘INDIAN PEOPLE KILLING FORCE’ (மக்களைக் கொல்லும் இந்தியப்படை).

பாராளுமன்றக் கட்டிடத்துக்குள் கைக்குண்டு வீசப்பட்டதை அடுத்து இந்திய கடற்படைக் கப்பல் கொழும்பு கடற்பகுதியில் வந்து நங்கூரமிட்டு நின்றது.

ஜே.ஆருக்கு நம்பிக்கை கொடுப்பது போன்ற செயலே அதுவாகும்.

‘யோசிக்க வேண்டாம். பிரச்சனை வந்தால் உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்பது போன்ற சமிக்ஞை.

புதுடில்லியோடு நேரடியாக உடனடியாகத் தொடர்புகொள்ளும் வசதியும் ஜே.ஆருக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது.

ஜே.வி.பி.யின் வளர்ச்சியும், நடவடிக்கைகளும் ஒப்பந்தத்தை நெருக்கடிக்கு உள்ளாக வேண்டும். ஒப்பந்தத்தின் கதி அதோ கதியாகவேண்டும்.

மீண்டும் தமிழீழப் போர் மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்- பிரபாகரன்

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!!
Next post ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்? வெடித்தது புதிய சர்ச்சை..!!