ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை…!! கட்டுரை

Read Time:21 Minute, 1 Second

article_1480575627-fidel-03வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும்.

தனது 90 ஆவது வயதில் கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கியூபாவைத் தலைமையேற்று வழிநடாத்திய ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த வாரம் காலமானார். அவரது மரணம் பலவகையான உணர்வுகளையும் எதிர்வினைகளையும் வாதங்களையும் தோற்றுவித்துள்ளது. ஏனைய அரசியல் தலைவர்கள் போலன்றி ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவும் அவரது வாழ்வைப்போலவே முக்கியமானது. அசாத்தியங்களைக் கனவு காண்பதன் ஊடு, இயலாது என நினைத்ததை, அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாகச் செய்து காட்டிய பெருமை காஸ்ட்ரோவைச் சாரும்.
1959 இல் புரட்சியின் மூலம் கியூபா என்கிற ஒரு குட்டித்தீவில் நடந்துவந்த சர்வாதிகார ஆட்சியை அகற்றி, அந்நாட்டின் தலைவராகி, உலக அரசியல் அரங்கின் முக்கியமான அரங்காடியாக உருவெடுத்து, உலகின் தவிர்க்கவியலாத ஓர் அரசியல் தலைவராக நிலைத்தல் என்பது தற்செயலானதல்ல.

ஃபிடல் காஸ்ட்ரோவின் வருகை அமெரிக்க-சோவியத் ஒன்றியக் கெடுபிடிப்போர் உச்சத்தில் இருந்த இருமைய உலக நிலவரத்தின் கீழ் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து கெடுபிடிப்போரின் உணர்ச்சிகர அரசியல், எதிர்ப்புணர்வுக்குள் ஆட்பட்டு, அடையாளம் இழக்காமல் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக காஸ்ட்ரோ நிலைத்தது நினைவுகூரப்பட வேண்டியது.

20 ஆம் நூற்றாண்டின் தவிர்க்கவியலாத அரசியல் ஆளுமையாக ஃபிடல் காஸ்ட்ரோவின் இடம் தனித்துவமானது. மேற்குலகுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது அவரது அரசியல் முக்கியத்துவத்துவத்தின் முக்கியமான உரைகல்லாகும்.

இருமைய உலகம் முனைப்புடன் இயங்கிய காலத்தில் ஓர் அரங்காடியாக உள்நுழைந்து, அதில் சோவியத் யூனியனின் அரசியலுடன் தோள் நின்று, சோவியத் யூனியனின் மறைவையும் அதைத் தொடர்ந்த, ஒருமைய உலகின் ஏகாதிபத்தியத்தையும் சந்தித்து, அதைத் தொடர்ந்த ஒருமைய உலகின் தேய்வையும் பலமைய உலகின் எழுச்சியையும் தனது ஆட்சிக்காலத்தில் கண்டு, உலக அரசியல் இத்தகைய பாரிய மாற்றங்களைச் சந்தித்த போதும், அனைத்துக்கும் முகங்கொடுத்து கியூபாவை முன்னேறிய அபிவிருத்தியை நோக்கி நகர்த்திய பெருமை அவரைச் சாரும். இதனாலேயே ஃபிடல் காஸ்ட்ரோ வரலாற்றால் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

ஒரு புரட்சியை வெல்வது என்பது வேறு; அப்புரட்சியின் பின் நாட்டை ஆளுவது என்பது வேறு. புரட்சியை வெல்வதிலும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் மக்கள் நலநோக்கில் நடாத்திச் செல்வது கடினமானது. இந்தவிடத்தில் தான் காஸ்ட்ரோ, சேகுவேராவில் இருந்து வேறுபட்டு நிற்கிறார். கியூபப் புரட்சியின் பின்னர் மிகவும் பின்தங்கிய ஒரு மூன்றாமுலக நாட்டைச் சமூகச் சீர்திருத்தங்கள் மூலமும் தொலைநோக்குக் கொள்கைகளின் ஊடும் சமூகப்-பொருளாதார நீதியை கியூபர்களுக்குப் பெற்றுக்கொடுத்தார் காஸ்ட்ரோ. சேகுவேரா சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்; உலகின் பல பகுதிகளில் புரட்சிகளுக்கு முயன்றார். காஸ்ட்ரோவோ, கியூபாவை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பினார்.

கெடுபிடிப்போர் காலத்தில் எண்ணற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும் கொலை முயற்சிகளையும் தொடர்ந்தும் காஸ்ட்ரோ சந்தித்து வந்தார். ஆனால், அவரது வெளியுறவுக் கொள்கையும் அதுசார்ந்து அவரால் எட்டப்பட்ட வெற்றிகளும் அவரது நிலையை உலக அரசியலில் உயர்த்தின.

1975 இல் அங்கோலாவின் இடதுசாரி ஜனாதிபதியாக இருந்த அகஸ்தீனோ நித்தோவின் ஆட்சியைக் கவிழ்க்க, தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசாங்கம் படைகளை அனுப்பிய வேளை, அங்கோல அரசுக்கு ஆதரவாகக் கியூபப் படைகளை அனுப்பி தென்னாபிரிக்கப் படைகளை விரட்டியதன் மூலம் நித்தோவின் ஆட்சியைத் தக்க வைக்க உதவினார். இதேபோல, 1977 இல் எத்தியோப்பாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஏனைய மேற்குலக நாடுகளின் உதவியுடன் சோமாலியா முனைந்தது. எத்தியோப்பாவில் இடம்பெற்றுவந்த மங்கிட்சு மரியம் தலைமையிலான இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இவ்வாக்கிரமிப்பு இடம்பெற்றது. காஸ்ட்ரோ கியூபத் துருப்புகளை எத்தியோப்பாவுக்கு ஆதரவாக அனுப்பி ஆக்கிரமிப்பை முறியடித்ததன் மூலம் மங்கிட்சு மரியத்தின் ஆட்சி நிலைக்க வழி செய்தார். 1970 களில் ஆபிரிக்காவின் இரண்டு முக்கிய நிகழ்வுகளின் காரணகர்த்தாவாக இருந்ததன் ஊடு, உலக அரங்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான தலைமைப் போராளியாகவும் காஸ்ட்ரோ திகழ்ந்தார்.

ஆபிரிக்கக் கண்டத்தில் மிகவும் முக்கியமான புரட்சிகர விடுதலை விக்கிரகமாக காஸ்ட்ரோ மாறியிருந்தார். ஆபிரிக்காவெங்கும் நடந்த காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை அவர் ஆதரித்தார். தென்னாபிரிக்காவின் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ், சிம்பாவேயின் ஆபிரிக்க மக்கள் ஒன்றியம், நமீபியாவின் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான நிபந்தனையற்ற ஆதரவு ஆபிரிக்க நாடுகளின் விடுதலைக்கு பேருதவியாக இருந்தது. தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசாங்கம் நமீபியாவைக் கைப்பற்றியிருந்த நேரம், கியூபப் படைகளை அனுப்பி நமீபியாவின் தனித்துவத்தைக் காப்பாற்றப் போராடினார். 1988 இல் தனது படைகளை விலக்கி நமீபியாவுக்கு சுதந்திரத்தை வழங்கத் தென்னாபிரிக்கா உடன்படும் வரை கியூபப் படைகள் நமீபியாவில் இருந்தன.

கியூபாவுக்கு அருகில் உள்ள தென்னமெரிக்கக் கண்டத்தில் புரட்சிகர சக்திகளின் பிரதான உந்துசக்தியாக காஸ்ட்ரோ இருக்கிறார். கொலம்பியா, நிகரகுவா, குவாட்டமாலா, எல் சல்வடோர் போன்ற நாடுகளின் புரட்சிகர இயக்கங்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்கும் வெற்றிக்கும் பின்னால் காஸ்ட்ரோவின் தடம் ஆழமாகப் பதிந்துள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தனது வாழ்நாள் முழுவதும் எதுவித சமரசமுமற்று எதிர்த்து வந்தமையே அவருக்கான தனித்துவமான இடத்தை உயர்மதிப்பை அளித்துள்ளது. 1990 களின் பின் அமெரிக்க மைய உலக அரசியல் ஒழுங்கில் அமெரிக்காவால் அனைத்தையும் செய்ய முடியும் என்ற நிலையிலும் கியூபாவில் ஓர் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள அமெரிக்காவால் முடியவில்லை. மோசமான பொருளாதாரத் தடைகள், தனிமைப்படுத்தப்படல், தொடர்ச்சியான கொலை முயற்சிகள் என அனைத்தையும் தாண்டி அவரது நிலைப்பானது, உலக அரசியலில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகின. காஸ்ட்ரோவின் தடம் 20 ஆம் நூற்றாண்டுக்குள் மட்டுப்படுத்தப்பட்டல்ல. 21 ஆம் நூற்றாண்டு மலர்ந்த போது, தென்னமெரிக்கக் கண்டத்தில் ‘இளஞ்சிவப்பு அலை’ என்று அழைக்கப்பட்ட இடதுசாரித் தலைவர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வுகள் நடந்தேறின. அதிலும் குறிப்பாக காஸ்ட்ரோவை வழிகாட்டியாகக் கொண்ட பொலிவியாவின் ஈவோ மொறாலஸ், வெனிசுவேலாவின் ஹீயுகோ சாவேஸ் ஆகியோரின் வருகை தென்னமெரிக்காவெங்கும் பாரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தன. இவ்வகையில் தனது வாழ்நாள் முழுவதும் புரட்சிகர சக்திகளின் தோழனாக வாழ்ந்தமையே வரலாற்றில் தவிர்க்கவியலாத இடத்தை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கியுள்ளது.
கியூபாவின் அயலுறவுக் கொள்கை சார்ந்து இலங்கைத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு காஸ்ட்ரோவும் கியூபாவும் துரோகமிழைத்து விட்டதாகச் சொல்லப்பட்டு வருகிறது.

இவ்விடயம் சார்ந்து சில விடயங்களைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும். அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, மெக்சிக்கோ ஆகியவை ஜ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்ற முனைந்தபோது, இலங்கை அரசாங்கம் அதைத் தவிர்க்கும் விதமாகக் கொண்டுவந்த தீர்மானத்தைக் கியூபா ஆதரித்தது. மேற்குலகு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற நினைத்தது தமிழ் மக்கள் மீதான அக்கறையாலோ மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கவோ அல்ல; மாறாக, இலங்கை அரசாங்கத்தைத் தனக்குப் பணிவான அரசாக மாற்றவே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேற்குலகின் தீர்மானமானது தனது நலன் சார்ந்ததேயன்றி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலை சார்ந்ததல்ல. ஒருவேளை மேற்குலகத் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும், இலங்கை மேற்குலக நலன்களைப் பேண ஒத்துழைக்குமிடத்து தீர்மானம் எவ்விதமான செயல் வடிவத்தையும் எடுத்திருக்காது. இந்த யதார்த்தத்தை இப்போது நாம் காண்பதோடு அத்தீர்மானத்தின் நோக்கமும் வெளிவெளியாகத் தெரிய வருகிறது.
அதேமனித உரிமைக் கவுன்சிலில் ஜ.நாவோ எந்த மேற்கு நாடுமோ உண்மையிலேயே விரும்பியிருந்தால் இலங்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிற போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைகளைத் தொடக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை. ஏனெனில், அவர்களது நோக்கம் அதுவல்ல.

இவை, முதற்கண் கணிப்பிலெடுக்கப்பட வேண்டிய விடயங்கள். கியூபாவின் நிலைப்பாட்டுக்கு வருவோம். நீண்டகாலமாக மனித உரிமைகளின் பெயரில் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் விடயங்களில் அமெரிக்கா தொடர்ச்சியாகத் தலையிட்டு வந்துள்ளது. ஒரு பக்கம் தனக்கெதிரான ஆட்சிகளை கவிழ்ப்பது, தனக்கெதிரான ஆட்சிகள் உள்ள நாடுகளில் பிரிவினைவாதத்தைத் தூண்டித் தலையிடுவது என இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா பல காலமாய்ப் பல அநியாயங்களைச் செய்துள்ளது. எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்களை உலகமெங்கும் செய்யும் ஒரு நாடாகவும் சர்வதேச சட்டங்களை துளியும் மதிக்காத நாடான அமெரிக்கா எவ்வாறு இன்னொரு நாட்டுக்கெதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்? மனித உரிமைகள் பற்றி யார் பேசுவது என்கிற கேள்வி இங்கு மிகவும் முக்கியமானது. இவ்வடிப்படையில் கியூபாவின் நடவடிக்கை, வெறுமனே இலங்கை என்பதற்கப்பால் அமெரிக்க நோக்கங்களைத் தூர நோக்கில் மதிப்பிட்டு எடுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கையென்றே எண்ணத் தோன்றுகிறது.

பாதிக்கப்பட்டோர் என்ற வகையில், தமிழர் கியூபா மீது மனத் தாங்கலடைவது விளங்கிக் கொள்ளக் கூடியது. ஆனால், எந்தத் தமிழ்த் தலைமையாவது இதுவரை அமெரிக்காவினதும் பிற மேற்கு நாடுகளதும் கொடுமைகட்குட்பட்ட நாடுகட்கு ஆதரவாக இல்லாவிடினும் அனுதாபமாகவாவது குரல் கொடுத்ததுண்டா? இன்னமும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பின்னால் அலைகிற போக்கல்லவா தொடர்கிறது. உலகின் மிகப்பெரிய ஒடுக்குமுறையாளர்களிடமா நாம் நியாயத்தையும் நீதியையும் வேண்டிக் கையேந்தி நிற்கப் போகிறோம்.

நாம் என்றுமே நட்பை நாடாதவர்களிடம் நிபந்தனையற்ற ஆதரவைக் கோருகிறோம். நம் ஆதரவை வலிந்து வழங்கினோரின் துரோகங்களை மட்டுமன்றிக் கொலை பாதகங்களையும் மன்னித்து விடுகிறோம். தமிழருக்கெதிராக ராணுவ உதவி வழங்கிய நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, சில ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் என்பன முதன்மையானவை. பாக்கிஸ்தானும் சீனாவும் ரஷ்யாவும் வெகுதுரம் பின்னால் வருவன. கியூபாவோ இலத்தின் அமெரிக்க இடதுசாரி ஆட்சிகளோ நமக்கு எக் கேடும் செய்யாதவை என்பது கவனிக்கத் தக்கது.

ஃபிடல் கஸ்ட்ரோவின் மரணம் யாருடைய விருப்பின் பெயரிலும் நிகழவில்லை. 600க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளையும் தாண்டி உயிரோடிருந்தவரை முதுமை அழைத்துச் சென்றுவிட்டது. அவரது மரணத்தின் பின்னர் எழுதப்படுகின்ற அவதூறுகள் அவரின் அதிஉயர் மதிப்பபைக் கோடிட்டு நிற்கின்றன. 90 வயதில் இயற்கையெய்திய செய்தியை கொண்டாடுகிறார்கள் என்றால் அவர் எப்படிப்பட்ட சிம்மசொப்பனமாக இருந்தார் என்பதை விளங்குவதில் சிரமங்கள் இரா.

தாரளவாதத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடாத்தி வந்த ஃபிடல் கஸ்ட்ரோ 22ஆண்டுகளுக்கு முன் ஜ.நா. வின் பொன்விழா கொண்டாடப்பட்டபோது, மேற்குலகினதும் குறிப்பாக அமெரிக்காவினதும் எதிர்ப்பையும் மீறி ஏழு நிமிட உரையொன்றை நிகழ்த்தினார்.

அதில் உலகமயமாக்கலையும் நவீன தாராளவாத பொருளாதாரக் கொள்கையையும் ‘சத்தமில்லாத அணுகுண்டு’ என விமர்சித்தார். மிகவும் புகழ்பெற்ற அவ்வுரையில் அவர் கேட்ட கேள்விகள் இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு இன்றும் மிகவும் பொருந்தி வருவனவாயுள்ளன.

இனி, தேசிய தொழிற்றுறைக்கு என்னநிலை ஏற்படும்? அவர்கள் எதை யாருக்கு ஏற்றுமதி செய்வது? உலகின் பெரும் பகுதியில் கோடிக்கணக்கான மக்கள் வறுமை, பசி, வேலையின்மையில் வாடிக் கொண்டிருக்கையில் இத்தகைய நுகர்வுச் சாதனங்களை வாங்கப் போவது யார்? அனைவரும் தொலைக்காட்சி, தொலைபேசி, குளிர் சாதனப்பெட்டி, கார், கணினி, வீடு என இப்படி அனைவரும் ஒவ்வொன்றையும் வாங்கும் வரை காத்திருப்பதா? அல்லது வேலையின்மைக்கான நிவாரணம் பெறுவதற்காகக் காத்திருப்பதா? பங்குச் சந்தையில் ஊக பேரத்தில் ஈடுபடுவதா? அல்லது ஓய்வூதியத்தை பத்திரப்படுத்துவதா?

இத்தகைய கேள்விகளை இன்று இலங்கையர்கள் கேட்கிறார்கள்; மூன்றாமுலக மக்கள் கேட்கிறார்கள்; ஒடுக்கப்பட்டவர்கள் கேட்கிறார்கள். எவரையும் வரலாறு தனது சொந்த விதிகளின் படி கணிப்பிலெடுக்கும். அதன்படியே அவரவர் வரலாற்றால் நினைக்கப்படுவர். காஸ்ட்ரோவும் அதற்கு விலக்கல்ல; உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக தளராத போராளியாக, போராடுவோருக்கு ஆதரவாக எப்போதும் ஓங்கி ஒலிக்கும் குரலாக, வரலாற்றால் காஸ்ட்ரோ நினைக்கப்படுவார். அவர் சொன்னது போலவே வரலாறு அவரை விடுதலை செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் போகும் அளவு கடுமையான வலிக்கு தீர்வு சில நிமிடங்களில்…!!
Next post ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!!