மனைவி சம்பாத்தியம்.. மகிழ்ச்சியான வாழ்க்கை….!!
திருமணத்திற்கு தயாராகி பெண் தேடும் இளைஞர்களில் ஒரு பகுதியினர், தங்களுக்கு வேலைக்குப் போகும் பெண் தேவை என்று சொல்கிறார்கள். அவர்கள் அப்படி எதிர்பார்க்கும் அளவுக்கு இன்று பொருளாதார தேவை முக்கியமானதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆண்கள் எதிர்பார்ப்பதுபோன்று அவர்களுக்கு வேலைக்குப் போகும் மணப்பெண்கள் கிடைக்கிறார்கள். கல்யாணம் நல்லபடியாக நடக்கிறது. இரண்டு சம்பளமும் வீட்டிற்கு வருகிறது. ஆனால் அதன் மூலம் நிம்மதி கிடைக் கிறதா?
இரண்டு சம்பளம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் பல வீடுகளில் கவலையை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையை வளப் படுத்துவதற்கு பதிலாக, பிரச்சினையை ஏற்படுத்தி குடும்பத்தையே போர்க்களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
பெண்களின் நிர்வாகத் திறமையின் மீது ஆண்களுக்கு எப்போதும் சந்தேகம் இருக்கும். பெண்கள் வீண் செலவு செய்கிறார்கள் என்ற நினைப்பும் அவர்கள் மனதில் இருந்துகொண்டிருக்கும். திருமணத்திற்கு பின்பு மனைவி தனது முழு சம்பளத்தையும் தன்னிடம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கும்.
ஆனால் அதுவரை சுதந்திரமாக செலவழித்த மனைவிக்கோ அது பெரிய எரிச்சலை உருவாக்கும். தான் செய்யும் ஒவ்வொரு செலவையும் கணவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, சம்பாதிக்கும் மனைவிகள் விரும்புவதில்லை. அப்படி சொல்ல வில்லை என்றால், மனைவி செய்யும் ஒவ்வொரு செலவும் தண்டச் செலவு என்று விமர்சிக்கும் போக்கு கணவரிடம் உருவாகும்.
குறிப்பாக அழகு நிலையம் செல்வது, அழகு சாதனைப் பொருட்கள் வாங்குவது, ஆடை அணிகலன்கள் வாங்குவது, தன் தோழிகளுடன் வெளியிடங்களுக்குச் செல்வது, தன்வழி உறவினர்களுக்கு செலவழிப்பது இவை எல்லாம் ஆண்கள் விரும்பாத செலவுகள் என்ற பட்டியலில் இருந்துகொண்டிருக்கிறது.
கணவரிடம் தனது சம்பளத்தை அப்படியே தர விரும்பாத மனைவிகள் பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. பலவித சந்தேக வளையங்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மனைவியின் பணம் எப்படி செலவாகிறது, என்ற கேள்வி கணவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே அந்த கேள்வியை கேட்டுவிடுவதில்லை. கேள்வியை கேட்டு, பதிலைப் பெறாமல் கசப்பை மனதில் வளர்த்துக்கொண்டு மனைவி மீது நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
காலப்போக்கில் அது காரணமில்லாமல் வளர்ந்து, ஒருநாள் பூதாகர மாக வெடிக்கும். அப்போது குடும்பம் தடுமாறிப்போகும். இதனால் நடக்கும் விவாகரத்துகள் ஏராளம். புத்திசாலிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் பலர் இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு காணமுடியாமல் பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மனைவியின் வருமானத்தை கணவர் பெறுவதும், அதை குடும்பத்தின் தேவைக்காக செலவிடுவதும் தவறல்ல. ஆனால் அளவுக்கு மீறி அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதுதான் தவறு. பெண்கள் அவர்களது தேவைகளை அவர்களே நிறைவேற்றிக்கொள்வது நல்லதுதான் என நினைத்து அமைதியாக இருப்பதுதான் ஆண்களுக்கு அழகு.
அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் தலையிடாமல், அவர் களது சம்பளத்தை அவர்களே கையாள அனுமதிப்பது கணவன், மனைவி இருவருக்குமே நல்லது. பெண்களும் பண விஷயங்களில் கணவரின் ஆலோசனைகளை பெறுவது மிக சிறந்தது.
பெண்கள் செலவுகளில் அதிக அக்கறைகாட்டாமல், சேமிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. அவர்களுக்கென்று தனி சேமிப்பு இருக்கவேண்டும். பெண்களால் எல்லா காலமும், எல்லாவிதமான வேலைகளையும் செய்துகொண்டிருக்க முடியாது. அவர்களது வேலைக்கு இடையூறு வரலாம். வேலைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகலாம். அப்போது எல்லா தேவைகளுக்கும் கணவரிடம் எதிர்பார்க்கும் நிலை உருவாகிவிடக்கூடாது.
அதுவரை தனது வருமானத்தில் தாராளமாக செலவு செய்துவிட்டு, அதன் பின்பு கணவரிடம் எதிர்பார்ப்பது ஒருவித மனஅழுத்தத்தை உருவாக்கத்தான் செய்யும். அதுமட்டுமல்ல கணவரது வருமானம் திடீரென்று தடைபட்டுபோனால்கூட அதை சமாளிக்க மனைவி சேமிப்பது அவசியமானதாக இருக்கிறது.
சில கூட்டுக்குடும்பங்களில் அனைவரின் சம்பளமும் வீட்டின் மூத்த நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்பு அவரவர் தேவைக்கு பணம் பெற்றுக்கொள்ளும் நிர்வாக நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தகைய குடும்பங்களில் சம்பாதிக்கும் பெண்களுக்கு எதிர்காலத்தை பற்றிய கவலை ஏற்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணம் தனக்கு தேவைப்படும்போது கைகொடுக்காமல் போய்விடுமோ? என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். அவர்களது அச்சத்தை போக்கி, அவர்களது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன்பு தனது சம்பளத்தை எல்லாம் தனது தாயாரிடம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது மாமியாரிடம் அவ்வளவு மன ஈடுபாட்டோடு கொடுப்பதில்லை. அதற்கு காரணம், பிறந்த வீட்டார் மேலிருக்கும் நம்பிக்கை புகுந்த வீட்டினர் மேல் உருவாகாமல் இருப்பதே! அந்த நம்பிக்கையை தந்து பெண்களை அன்னியோன்யமாக உறவாடச் செய்வது புகுந்த வீட்டாரின் கடமை.
நம் உழைப்பு மதிக்கப்படுகிறது. நமது வருமானம் சேமிக்கப்படுகிறது. நமது எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் வந்தால்தான் பெண்கள் மகிழ்ச்சியாக பணிக்கு செல்வார்கள். மகிழ்ச்சியாக குடும்பத்தையும் கவனிப்பார்கள். இல்லாவிட்டால் வேலையையும், குடும்பத்தையும் அவர்கள் பாரமாக நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating