வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு…!!
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 தொழிலாளர் கள் உடல் சிதறி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“வெற்றிவேல் எக்ஸ்புளோசில் பிரைவேட் லிமிடெட்” என்கிற பெயரில் 2001-ம் ஆண்டு இந்த வெடிமருந்து தொழிற்சாலை திறக்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் 300 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள்அனைவரும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள்.
நேற்று காலையில் வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. பயங்கர சத்தத்துடன் வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீப்பிழம்பும் ஏற்பட்டது.
இதில் 18 தொழிலாளர்கள் சிக்கி பலியானார்கள். இவர்களின் உடல்களும் வெடித்து சிதறி தூள் தூளானது.
இது பற்றி தகவல் கிடைத்ததும், திருச்சி கலெக்டர் பழனிசாமி, மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜுலு, டி.ஐ.ஜி. அருண், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
மீட்பு குழுவினர் அருகில் செல்ல முடியாத அளவுக்கு ரசாயன நெடி வீசியது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது. கடுமையான போராட்டத்துக்கு பின்னரே, மீட்பு குழுவினரால் வெடிமருந்து ஆலைக்குள் நுழைய முடிந்தது.
அங்கு பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய் கிடந்தது. பலரது உடல்கள் தலை இல்லாத முண்டமாகவே கிடந்தது. கை, கால்களும் உருக்குலைந்து போய் கிடந்தன. இச்சம்பவம் தொடர்பாக உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கினர்.
உப்பிலியாபுரம் போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை வாங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். வெடிமருந்து தொழிற்சாலையில் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றிய சிலரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வெடிமருந்து தொழிற் சாலையின் 2-வது யூனிட்டில், ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டுடன், பென்டா எரித்ரோட்ரல், மெட்டா நைட்ரேட் பவுடருடன் சாம்பலை சேர்த்தே வெடிமருந்து தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது பசை போன்ற பொருள் உருவாகி குழாய் வழியாக இன்னொரு யூனிட்டுக்கு கொண்டு செல்லப்படும்.
அப்போது அதன் உறை வெப்பநிலை 24 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை உயரும் போது அதனை குறைப்பதற்கு குளிரூட்டி மூலமாக கண்காணிப்பார்கள். அதில் ஏற்பட்ட குறைபாடுதான் விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Average Rating