அமெரிக்க கள்ள சந்தையில் புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்முதல்-13 பேர் நிïயார்க் நகரில் கைது
அமெரிக்காவில் கள்ள சந்தையில் விடுதலைப்புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முயன்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா கடந்த 1997-ம் ஆண்டு தடை விதித்தது. விடுதலைப்புலிகளுக்கு தமிழர் மறுவாழ்வு அமைப்பு (T.R.O) என்ற இயக்கம் நிதி திரட்டி வருவது பற்றி அமெரிக்கா ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கள்ள சந்தையில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முயற்சி நடந்தது. இதுதொடர்பாக 13 பேரை அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆயுத கொள்முதல்
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலில் இலங்கை விமானப்படை இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்களை தகர்க்கக்கூடிய ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை வாங்க கைதான கும்பல் முயன்றது. இவை தரையில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்க வல்லவை. 50 முதல் 100 ஏவுகணைகளை வாங்க அவர்கள் முயன்றனர்.
மேலும் 500 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் வாங்கவும் அவர்கள் முயன்றனர். இதற்காக, அமெரிக்காவில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பலர் ரூ.4 கோடிக்கு மேல் தருவதாக ஒப்புக்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரில் பெரும்பாலானோர் கனடா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியாவில் பிறந்த நாச்சிமுத்து சாக்ரடீஸ் என்பவரும் அடங்குவார். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. கைதான 13 பேரும் இந்த வார இறுதியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். நாச்சிமுத்து சாக்ரடீசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பிடிபட்டது எப்படி?
கைதான 13 பேரையும் போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஒரு போலீஸ் அதிகாரி, நாச்சிமுத்து சாக்ரடீசை சந்தித்தார். சாக்ரடீசுக்கு நம்பிக்கை வரும் விதத்தில் பேச்சு கொடுத்தார்.
இதில் மயங்கிய சாக்ரடீஸ், விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவது பற்றிய விசாரணை குறித்த ரகசிய ஆவணங்களை தருமாறும் கேட்டுக்கொண்டார்.
லஞ்சம் கொடுக்க முயற்சி
இந்த காரியங்களை செய்து கொடுப்பதற்காக, அந்த அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க முயற்சி நடந்து வருவது தெரிய வந்தது. அதில் தொடர்புடைய மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 13 பேரும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுத உதவி மற்றும் நிதி உதவி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக எந்த சதியிலும் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.