தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்ததை எதிர்த்து விஷால் வழக்கு…!!
சென்னை ஐகோர்ட்டில், நடிகர் விஷால் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக 2006-ம் ஆண்டு அறிமுகமானேன். தற்போது வரை 23 படங்களில் நடித்துள்ளேன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளேன். இந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் என் தந்தை 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். என் மூத்த சகோதரனும் உறுப்பினராக உள்ளார்.
கடந்த ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், நடிகர் நாசர் தலைவர் பதவிக்கும், நான் பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டோம். எங்களுக்கு எதிராக நடிகர் ராதாரவி அணி போட்டியிட்டது. இந்த தேர்தலில், ராதாரவி அணிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
இதில், ஏற்பட்ட முன்பகையினால், என்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து எஸ்.தாணு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை குறித்து வாரப்பத்திரிகை ஒன்றுக்கு போட்டியளித்தேன். அப்போது இந்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருந்தேன். அந்த கருத்துகள் கூட அவதூறானது இல்லை.
இதுபோன்ற கருத்துகளை ஒருவர் தெரிவிக்கும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் அதை ஒரு விமர்சனமாக எடுத்துக்கொண்டு, முன்பை விட சிறப்பாக செயல்படவேண்டும் என்று எண்ணவேண்டும்.
ஆனால், சங்கத்தை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்தற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் 2-ந் தேதி எனக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நோட்டீசு அனுப்பியது. நானும் இதற்கு செப்டம்பர் 8-ந் தேதி விளக்கம் அளித்து கடிதம் அனுப்பினேன். அதில், நான் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் உள்நோக்கம் இல்லாதது என்று கூறியிருந்தேன்.
ஆனால், என்னை தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து 3 மாதம் இடைநீக்கம் செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உள்நோக்கமானது. தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நான் பங்கேற்கக்கூடாது என்பதற்காக இந்த இடைநீக்கம் உத்தரவை உள்நோக்கத்துடன் பிறப்பித்துள்ளனர்.
மேலும், தயாரிப்பாளர் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நடிகர் கருணாஸ், நான் தெரிவித்த அதே கருத்தை மற்றொரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், அவர் மீது தயாரிப்பாளர் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை மட்டும் இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவர் எஸ்.தாணுவுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை டிசம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Average Rating