கண்ணுல காச காட்டப்பா…!! விமர்சனம்
நடிகர் அரவிந்த் ஆகாஷ்
நடிகை சாந்தினி
இயக்குனர் மேஜர் கெளதம்
இசை திவாகர் சுப்ரமணியம்
ஓளிப்பதிவு அரவிந்த் கமலநாதன்
தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் ஊழல் செய்ததில் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. மலேசியாவில் இருக்கும் அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாலாஜியின் உதவியை நாடுகிறார் அமைச்சர். பாலாஜி மலேசியாவில் இருக்கும் அந்த பணத்தை வாங்கி, கொலம்பியாவில் இருக்கும் வங்கியில் போட்டு வெள்ளையாக்க முயற்சி செய்கிறார்.
இதற்காக அந்த பணத்தை வாங்குவதற்காக விச்சுவை மலேசியாவுக்கு அனுப்புகிறார். மலேசியாவில் விச்சுவுக்கு உதவி செய்ய கிளப் டான்சரான சாந்தினியை பாலாஜி நியமிக்கிறார். அங்கு, இவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.20 கோடி கிடைக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் வேளையில், சிறு சிறு திருட்டு வேலைகள் செய்யும் கல்யாண் மாஸ்டர், யோகி பாபுவுக்கு இவர்களிடம் இருக்கும் பெரும்தொகை பற்றிய தகவல் கிடைக்கிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணத்தில் அதை கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.
அதேநேரத்தில், வாழ்க்கையில் எந்த முன்னேற முடியாத விரக்தியில் இருக்கும் நாயகன் அரவிந்த் ஆகாஷும், அவரது தாத்தாவான எம்.எஸ்.பாஸ்கரும் திருட்டு தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று முடிவெடுக்கின்றனர். இவர்களுக்கும் விச்சுவின் கைவசம் இருக்கும் ரூ.20 கோடி பற்றிய தகவல் கிடைக்க, அதை கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில், விச்சுவை மலேசியாவுக்கு அனுப்பிய பாலாஜி விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறான். இதையறியும் விச்சு, தன்னை அனுப்பியது பாலாஜிக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த பணத்தை அவரே கைப்பற்ற நினைக்கிறார். இறுதியில், அந்த பணம் அமைச்சர் வசம் சென்றதா? அல்லது கொள்ளையடிக்க நினைத்த கும்பல் கைப்பற்றியதா? அச்சுவே அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டாரா? என்பதை மீதிக்கதை.
படத்தின் நாயகன் அரவிந்த் ஆகாஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும், காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். இவருடைய தாத்தாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு காமெடி படத்துக்குண்டான நடிப்பை வரவழைத்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
படத்தின் காமெடிக்கு மிகப்பெரிய பலமே யோகி பாபுதான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ஒரே சிரிப்பலைதான். குறிப்பாக இறுதிக் காட்சியில் இவருடைய காமெடி வயிற்றை புண்ணாக்குகின்றன. இவருடன் வரும் கல்யாண் மாஸ்டரும் யோகி பாபுவுக்கு இணையாக காமெடியில் கலக்கியிருக்கிறார்.
கிளப் டான்ஸராக வரும் சாந்தினி அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான கவர்ச்சியுடன் வலம் வந்திருக்கிறார். அரசியல்வாதியாக வருபவர், விச்சு விஸ்வநாத், பாலாஜி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் மேஜர் கவுதம் தனது முதல் படத்திலேயே எல்லோரும் ரசிக்கும்படியும், கலகலப்பாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவர்களுக்கு பெரிய தொகையை திருடும் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் யோசிப்பார்கள் என்பதை படம் முழுக்க கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்.
திவாகர் சுப்பிரமணியமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேசமயம் பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு மலேசியாவை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘கண்ல காச காட்டப்பா’ மகிழ்ச்சி.
Average Rating