திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பதிவு ரத்து ஏன்? – தலைவர், பொதுச்செயலாளர் விளக்கம்…!!
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் பதிவு ரத்து குறித்து விளக்க அளிக்கை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைப் பற்றி முரண்பாடான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய காலத்தில் இ-பார்ம்களை பதிவு செய்யாததால் சங்கப்பதிவு ரத்தாகியுள்ளது. இதைப்பற்றி தகவல் தெரிந்தவுடன் எங்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்கே.செல்வமணி, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்.
அப்போது இ-பார்ம்களை புதுப்பிக்காத நினைவூட்டல் கடிதங்களும், இ-பார்ம்களை புதுப்பிக்கவில்லை என்ற சோகாஸ் நோட்டீசும் எங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்கள். மேலும், அந்த முகவரியில் அதுபோல் ஒரு சங்கமே இல்லை என கடிதங்கள் திரும்பி வந்து விட்டதால் சங்கப்பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில், அந்த கடிதங்கள் அனைத்தும் எங்கள் சங்கம் வடபழனியில் இயங்கி வந்த பழைய வாடகை அலுவலக விலாசத்திற்கு சென்றுள்ளதென தெரியவந்தது. எங்கள் சங்க அலுவலகம் புதிய விலாசத்திற்கு மாறியபின்பு 2013-ல் ஊதிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிலாளர் நல ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அத்துடன் 2013 -ஆம் ஆண்டு ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கான அழைப்பு கடிதங்கள் அனைத்தும் தற்போது நாங்கள் இயங்கிவரும் வளசரவாக்கம் அந்தோணி சாலையில் உள்ள புதிய அலுவலக விலாசத்திற்கு வந்துள்ளன.
ஆனால் தற்போது 2016-ல் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்கள் நாங்கள் வடபழனியில் இயங்கி வந்த பழைய சங்க அலுவலக விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தவறினை சுட்டிக்காட்டி நினைவூட்டல் கடிதம் மற்றும் சோகாஸ் நோட்டீஸ் இதுவரை எங்கள் நிர்வாகத்திற்கு வரவில்லை என தெளிவுப்படுத்தினார் பொதுச்செயலாளர்.
24.11.2016 அன்று எங்களது சங்க செயற்குழு கூடி நடந்த தவறுகளை விளக்கமாக எழுதி எங்கள் சங்கத்தின் “ரத்து செய்த ஆணையை” ரத்து செய்திட வேண்டும் என வேண்டுகோள் கடிதம் தொழிலாளார் நல ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எங்களது வேண்டுகோளை பரிசீலித்து நல்ல முடிவை தருவார்கள் என நம்புகிறோம்.
தற்போது எங்கள் சங்கத்தில் சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தினமும் 100 நபர்கள் உறுப்பினர்களாக வேண்டும் என விண்ணப்பிக்க வருகிறார்கள். தற்போது, டிஜிட்டல் கேமிராக்கள் வந்து விட்ட நிலையில் ஏராளமானவர்கள் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களாக வர ஆரம்பித்துள்ளார்கள்.
புதிதாக சேர வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அவர்களின் தரத்தை ஒழுங்குப்படுத்தவும், எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழு சில விதிமுறைகளை நிறைவேற்றியது. சங்க பொதுக்குழுவின் விதிமுறைகளால் சங்கத்தில் உறுப்பினராக சேர முடியாத சிலர், அவதூறாக சேற்றை வாரி எங்கள் மீது இறைக்கிறார்கள். எங்கள் சங்கத்திற்கு பங்கம் உண்டாக்கவும் முயற்சிக்கிறார்கள்.
பொதுவாக நிர்வாக காரணங்களுக்காக சங்கப்பதிவு ரத்து ஆவது பல்வேறு சங்கங்களில் பலமுறை நிகழ்ந்துள்ளது. அவ்வாறு ரத்தான சங்கங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழ் திரைப்படத்துறையில் அனைத்து சங்கங்களையும் விட சீரிய சங்கமாக மாண்புடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அவ்வாறே சீறும் சிறப்புமாக இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Average Rating