வடக்கே ஒரு வார காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த சண்டைகள் ஓய்ந்துள்ளன

Read Time:3 Minute, 44 Second

JaffnaIslets_1.jpgஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த சண்டைகள் ஓய்ந்துள்ளதாகத் தெரிகின்றது. உக்கிரமான எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு தேடி பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். போர்ச்சூழல் காரணமாக சில பிரதேசங்களில் இருந்து பலர் வெளியேற முடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை அப்பகுதிகளில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளுக்கு அனுப்பி வைப்தற்கான தீவிர நடவடிக்கைகளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஈடுபட்டிருந்தார்கள்.

இதேவேளை, யாழ் குடாநாட்டிற்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்களில் சிலர் தமது பிரதேசங்சகளின் நிலைமைகள் குறித்து தெரிவித்தார்கள். தங்கள் பகுதிகளில் உணவுப்பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடைகளில் கையிருப்பில் உள்ள பொருட்கள் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இதனால் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை உருவாகி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதனிடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பதற்காக வண்டிகளில் ஏற்றப்பட்ட அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இராணுவத்தின் பிரயாண அனுமதிக்காக காத்திருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என வெளியான தகவல்களை அவர் மறுத்துரைத்தார்.

கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொருட்களை அங்கிருந்து முல்லைத்தீவுக்குக் கொண்டு வரமுடியாது என்றும், யாழ் குடாநாட்டிற்கும் முல்லைத்தீவுக்குமான முகமாலை ஊடான ஒரேயொரு தரை வழியும் இப்போதைய சண்டைகள் காரணமாக மூடப்பட்டிருப்பதனால் அது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாலஸ்தீன துணை பிரதமர் கைது : இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
Next post இஸ்ரேலுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதா