கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை…!! கட்டுரை
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி ஏற்கெனவே அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை.
அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பதும் பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், அரசாங்கத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை.
ஐ.தே.க மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள், வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏதும் இல்லை.
எனவே, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவோ, அல்லது, வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவோ, கூட்டமைப்புக்கு சந்தர்ப்பங்கள் தாராளமாகவே இருக்கின்றன.
வரவுசெலவுத் திட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால், ஓர் அரசாங்கம் தார்மீக அடிப்படையில் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். எனவேதான், எதிர்க்கட்சிகள் வரவுசெலவுத் திட்டம் போன்ற நிதி சார்ந்த சட்டமூலங்களைத் தோற்கடிப்பதில் உன்னிப்பாக கவனம் செலுத்துவது வழக்கம்.
வரவுசெலவுத் திட்டம் ஒன்றில் வாக்களிப்பதில் அரசியல் கட்சிகள் மூன்று விதமான அணுகுமுறைகளைக் கையாள்வது வழக்கம்.
முதலாவது- அரசியல் கொள்கையின் அடிப்படையில் வாக்களிப்பது.
இரண்டாவது – வரவுசெலவுத்திட்டம் தொடர்பான நிதிசார் கொள்கையின் அடிப்படையில் வாக்களிப்பது.
மூன்றாவது- எதிர்க்கட்சி என்பதால் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது.
வரவுசெலவுத் திட்டத்தில் உள்ள சாதகமான, பாதகமான விடயங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, அரசியல் கொள்கையின் அடிப்படையில் கண்ணை மூடிக்கொண்டு அதனை ஆதரிப்பது, அரசியலில் காலம்காலமாக நடந்து வரும் விடயம்.
கூட்டணி தர்மம் என்றும், தாம் பதவிக்குக் கொண்டு வந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், இத்தகைய சந்தர்ப்பங்களில் கட்சிகள் தம்மை நியாயப்படுத்திக் கொள்வதுண்டு.
சிலவேளைகளில் பொது எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் அரசியல் தீர்மானங்களை எடுத்துக் கட்சிகள் வரவுசெலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்தைப் பாதுகாப்பது வழக்கம்.
இதற்குச் சிறந்த உதாரணம், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு 2007 ஆம் ஆண்டு ஜே.வி.பி எடுத்த முடிவைக் குறிப்பிடலாம்.
2007ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் தீவிரப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சூழலில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அப்போது அதிகமாகவே இருந்தன.
ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்து அவரைப் பதவியில் அமர்த்திய
ஜே.வி.பி, அப்போதைய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியிருந்தது.
அப்போது, ஜே.வி.பியிடம் 37 ஆசனங்கள் இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 22 ஆசனங்கள் இருந்தன.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து, எதிர்த்து வாக்களித்தால், ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ‘காலைவாரி’ விட்டால், அந்த வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படலாம் என்று கருதப்பட்டது.
அப்போது, அரசாங்கம் சில குறுக்கு வழிகளையும் நாடியது. கிழக்கில் அப்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட துணை ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்கள் கடத்தப்பட்டனர்.
வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தால், அவர்களைக் கொன்று விடுவோம் என்று, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டனர்.
இந்தச் சம்பவம் ஒன்றே வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்போதைய அரசாங்கம் இருந்ததை உறுதிப்படுத்தியது.
ஆனால், கடைசி நேரத்தில் போர் வரவுசெலவுத் திட்டம் என்று அழைக்கப்பட்ட, 2008 ஆம் ஆண்டுக்கான அந்த வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து ஜே.வி.பி விலகிக் கொண்டு, வாக்களிப்பில் நடுநிலை வகித்தது.
அதுபோலவே, உறவினர்கள் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டனர்.
114 வாக்குகள் ஆதரவாகவும் 67 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட, அந்த வரவுசெலவுத் திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலகுவாக நிறைவேற்றியது.
இது விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக, மஹிந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு
ஜே.வி.பி எடுத்த அரசியல் ரீதியான முடிவாகும்.
அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக, அதில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக இணக்கங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்னிறுத்தி அதனை ஆதரிப்பதா – எதிர்ப்பதா என்று தீர்மானிப்பது இரண்டாவது வகை.
இங்கு அரசியல் விருப்பு வெறுப்புகள் கணக்கில் எடுக்கப்படாது. நிதி ஒதுக்கீடுகளைக் கவனத்தில் கொண்டும், நிதிசார் திட்டங்களை முன்னிறுத்தியும் வாக்கெடுப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறான முடிவுகளை கட்சிகள் எடுப்பது மிகக் குறைவு.
மூன்றாவது வகை, எதிர்க்கட்சி என்பதால் எதிர்க்க வேண்டும் என்று காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். இந்த மரபு பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
அரசியல் கொள்கை முரண்பாடுகளுக்கும், இந்த முடிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும், வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கலாம் என்ற புதிய பண்பாடு ஒன்றைக் கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் போது, நாடாளுமன்றம் கண்டது.
எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
எனினும், இந்தமுறை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்கப் போகிறது? எந்த அடிப்படையில் வாக்களிக்கப் போகிறது? என்பதே கேள்வியாக உள்ளது.
அரசியல் கொள்கை ரீதியாகத் தற்போதைய அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது. ஏனென்றால், தற்போதைய நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி ஏற்படுமானால், அது தமிழருக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த, வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரித்தமைக்கு அந்தக் கடப்பாடு தான் முக்கிய காரணம்.
எனினும், கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த ஈ.பி.டி.ஆர்.எல்.எவ் சார்பில் தெரிவான சிவசக்தி ஆனந்தனும் சிவமோகனும் கடந்தமுறை வாக்களிப்பில் இருந்து விலகியே இருந்தனர்.
கடந்த முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் ஆபத்து இருக்காத போதிலும் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்காகக் கூட்டமைப்பு அவ்வாறு நடந்து கொண்டது.
இப்போதும் கூட, அரசாங்கம் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. 2007 இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஏற்பட்டது போன்றதொரு இக்கட்டான நிலையை இப்போதைய அரசாங்கம் எதிர் கொள்ளவில்லை.
ஐ.தே.க மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கூட்டு அரசாங்கத்துக்கு ஆகக்குறைந்த பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் போதியளவில் இருக்கிறது.
இந்த நிலையில் அரசியல் கொள்கை ரீதியான முடிவுகளுக்கு அப்பால் கூட்டமைப்பு தமது பொறுப்பை நிறைவேற்ற முடியும்.
அதாவது, வரவுசெலவுத் திட்டத்தின் சாதக, பாதகங்களின் அடிப்படையில் வாக்களிக்கும் முடிவை எடுக்கலாம்.
இந்த வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் திருப்தி வெளியிட்டிருக்கவில்லை. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
நல்லிணக்கத்துக்கான ஒரு வரவுசெலவுத் திட்டமாக இது இருக்கவில்லை என்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே விடயத்தைத்தான் கூறியிருந்தனர்.
வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஆலோசனை நடத்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது, சுமந்திரனின் முக்கியமான குற்றச்சாட்டு.
அவ்வாறு, ஆலோசனைகளைப் பெற்றிருந்தாலும் அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொண்டிருக்குமா என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும், இந்தமுறை வரவுசெலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு பயனற்றது என்பதே கூட்டமைப்பின் கருத்தாக இருக்கும் நிலையில், இதற்கு ஆதரவாக வாக்களிக்க முனைந்தால் அது அபத்தமான விடயமாக இருக்கும்.
கடந்த முறை வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து போது இருந்த அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த தமிழ் மக்களின் அதிருப்திகளும் நம்பிக்கையீனங்களும் அதிகரித்துள்ளன. ஆனாலும், கூட்டமைப்பின் தலைமை அதற்கு அப்பாலும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.
இந்த நிலையில், அரசாங்கம் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக, வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு பயன்படுத்தப் போகிறதா? அல்லது, தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதா?
Average Rating