தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை..!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் இன்று (செவ்வாய்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் இன்று (செவ்வாய்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் 16-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அப்போது 232 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.
மே மாதம் 19-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால், உடல்நல குறைவு காரணமாக அவர் அதே மாதம் 25-ந் தேதி மரணமடைந்தார். இதனால், புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் இம்மாதம் 19-ந் தேதி தேர்தல் நடந்தது. தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டனர். அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிட்டனர். மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போசும், தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணனும் மல்லுக்கட்டினர். இந்த தொகுதிகளில், தே.மு.தி.க., பா.ஜ.க., பா.ம.க.வும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மாம்பழம் சின்னம் ஒதுக்காததால், திருப்பங்குன்றம் தொகுதி தேர்தலை மட்டும் பா.ம.க. புறக்கணித்திருந்தது. வழக்கம்போல் சுயேச்சைகளும் இந்த தேர்தல் களத்தில் நின்றனர்.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமியும், அ.தி.மு.க. சார்பில் ஓம் சக்தி சேகரும் எதிரும், புதிருமாக களம் கண்டனர். வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 81.92 சதவீத வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 70.19 சதவீத வாக்குகளும், தஞ்சாவூர் தொகுதியில் 69.02 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதைவிட புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. தஞ்சாவூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அங்குள்ள குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை கரூரில் உள்ள எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவ கல்லூரியிலும் நடைபெறுகிறது.
இதேபோல், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை இடைவிடாமல் தொடருகிறது. காலை 9 மணி முதல் 4 தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கும். பிற்பகல் தொடங்குவதற்குள் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
Average Rating