இருப்பும் வாழ்வும்…!! கட்டுரை
நிலைமாறுகால நீதி தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள இரு கைதுகள், நவீன ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன.
இவ்விரு கைதுகளும், பொதுவில் இனவெறுப்புப் பேச்சு அல்லது இனவாதக் கருத்து வெளியிடல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் முதலாமவர், முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தவரும், குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஒரு பிரபல நபராகக் கருதப்படாதவருமான டான் பிரியசாந்த் ஆவார். மற்றவர், இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற வகையில், அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதால் அறியப்பட்டவருமான அப்துல் ராசிக் ஆவார்.
இவ்விருவரும் கைதாகியதை அடுத்து, இப்பிரச்சினை இன்னுமொரு வடிவத்தை எடுத்திருப்பதாகச் சொல்ல முடியும். கொழும்பு மற்றும் அதன் சுற்றயல் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம்களும் தமிழர்களும், மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இலங்கையின் அனுபவங்களின் படி, இனவாதம் என்பது காலத்துக்குக் காலம் வேறுவேறு பரிணாமங்களை எடுத்து வந்திருக்கிறது. இன ஒடுக்குமுறை என்பது, தேசிய மட்டத்தில் சிங்களக் கடும்போக்காளர்களால் மேற்கொள்ளப்படுவதைச் சிறுபான்மையினர் அறிந்திருந்தவர்களாக இருந்தாலும், அவர்களது பொறுமையால் அவ்வாறான நிலைமைகள் பூதாகரமாக்கப்படுவதில்லை. ஆனால், இந்தப் பொறுமையைச் சிங்களக் கடும்போக்கு சக்திகள் இழிவாகக் கணிப்பிட்டுள்ளன.
தேசிய அளவில் திட்டமிட்ட அடிப்படையில் இந்தச் சக்திகள் மேற்கொள்கின்ற அண்மைக்கால நடவடிக்கைகள், இதற்குப் பின்னால் இருக்கின்ற அவர்களது நோக்கங்களை, போதுமானளவுக்கு வெளிப்படுத்துகின்றன.
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின் பிற்பகுதியில், இலங்கையில் இனவாதம் அல்லது இனப்பிரிவினை கொடிகட்டிப் பறந்தது. மஹிந்தவும் அவரது சகோதரர்களும், பொதுபலசேனா, இராவண பலய போன்ற அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. தம்புள்ளை உள்ளிட்ட பள்ளிவாசல்கள் அச்சுறுத்தலுக்குள்ளான சந்தர்ப்பத்திலும் அளுத்கமையில் கலவரம் நிகழ்ந்த வேளையிலும் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது.
சட்டம், ஒரு கட்டத்துக்குள் இருந்தவாறு தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. விளைவு – மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிக்கவில்லை. அதற்குப் பதிலாக நல்லாட்சி நிறுவப்பட்டது. எல்லாம் ஒரு திரைப்படம் போல நடந்து முடிந்தது.
சுபமாக ஆரம்பமான நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம் எதிர்பாராத பல தடங்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. முன்னர் மஹிந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற இனவாத முன்னெடுப்புக்கள் பரந்துபட்ட விதத்தில் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்படுவதைக் காண்கிறோம்.
பொதுபலசேனா, இராவண பலய போதாது என்று சிங்ஹலே போன்ற பல புதிய அமைப்புக்கள் முளைத்திருக்கின்றன, பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன, ஓரிரு பௌத்த தேரர்கள், காவியின் கௌரவத்தைச் சந்தி சிரிக்கும் நிலைக்கு ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு,“பழைய குருடி கதவைத் திறவடி” என, பழையபடி எல்லாம் நடந்து கொண்டிருக்க, அரசாங்கம் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகப் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என்பதே சிறுபான்மை மக்களின் குற்றச்சாட்டாகும்.
தற்போதைய அரசாங்கம் உருவாவதற்கு பிரதான துருப்புச் சீட்டாகப் பயன்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள், இதனால் மிகுந்த விசனம் அடைந்திருந்த நிலையிலேயே, மேற்குறிப்பிட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக, முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பதில் டான் பிரியசாந் என்றோர் இளைஞன் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது செயற்பாடுகள் தனக்குப் பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்பது போல அமைந்திருந்ததுடன், “முஸ்லிம்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்” என்று பௌத்தர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.
மிக மோசமாகப் பாடல் பாடுகின்ற ஒரு நபரே, நவீன ஊடகங்களின் மூலம் பிரபலமாகி விடுகின்ற இன்றைய யுகத்தில், பிரியசாந்தவும் அவரது பேச்சுக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதிலும் இனவாதச் சிந்தனையாளர்களுக்கு அது தீனிபோட்டதிலும் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
அநுராதபுரத்தில் வீதியோரத்தில் ஏற்பாடு செய்த ஒரு சிறு கூட்டத்தில் இவர் உரையாற்றுகையில், “சிங்களவர்களான நமது தாய் மண்ணின் காணிகளை முஸ்லிம்கள் அதிக விலைக்கு வாங்கி தம்வசப்படுத்துகின்றனர். நாட்டைக் கைப்பற்றுவதற்கே அடிப்படைவாத முஸ்லிம்கள் இவ்வாறு செய்கின்றனர். ஒரு வெள்ளிக்கிழமையில் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுகூடி, சிங்களவர்களை அழிக்கும் நிலை வந்துள்ளது” என்று கூறியுள்ளார். அது மட்டுமன்றி, “நீர்வழங்கலுக்குப் பொறுப்பான அமைச்சரான ரவூப் ஹக்கீம் நினைத்தால் ஒரே இரவுக்குள் நீரில் நஞ்சைக்கலந்து சிங்களவர்களைக் கொன்று விடலாம்” என்றும் கூறியுள்ளார் என்றால், இனவாதம் எந்தளவுக்குப் புத்திகெட்ட தனமான அறிவிலிகளால் வழிநடத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறான இவருடைய கருத்துக்கள் பல்வேறு கோணத்தில் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் புறக்கோட்டையில் நடாத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் பிரியசாந்த் இனக் குரோத கருத்துக்களை வெளியிட்டார் என்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்தார் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, மேற்படி பிரியசாந்த் என்ற நபர், புறக்கோட்டை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம்களின் முறைப்பாட்டுக்கு அமைய இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்திய ஒருவரைக் கைது செய்தமைக்காக பொலிஸாரைப் பாராட்ட வேண்டும். மறுபுறம், இவ்விடயம் அடிப்படைவாதச் சிந்தனையுள்ள சிங்களவர்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலைமையைப் பயன்படுத்தி இனமுறுகலுக்கு தூபமிடக் கூடிய ஓர் அபாயமும் இருந்தது, இருக்கிறது. எனவே, நீதியை நிலைநாட்டுவது ஒருபுறமிருக்க, சிங்களக் கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய ஒரு தேவைப்பாடு ஆட்சியாளர்களுக்கும் நாட்டின் நீதித் துறைக்கும் ஏற்பட்டது என்பது வெள்ளிடைமலை. அதற்கு நிதர்சனமாக காரணங்களும் இல்லாமல் இல்லை.
அதாவது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தின் சில ஏற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது உண்மையே. ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமையில் கைவைக்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர். இந்த மனநிலையை வெளிப்படுத்தும் முகமாக தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி புறக்கோட்டையில் இடம்பெற்றது, ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அவ்வமைப்பின் செயலாளரான அப்துல் ரசாக், தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு புதிய சர்ச்சைகளைக் கிளறி விட்டன எனலாம்.
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் என்பது அரசாங்கத்தோடும் கொள்கை வகுப்பாளர்களோடும் ஐரோப்பிய ஒன்றியத்தோடும் தொடர்புடைய விடயமாக இருக்கையில், அதனை இனவாத அமைப்புக்களுடன் தொடர்புபடுத்தி அவர் பேசியமை சிக்கலாகிப் போனதோடு, மறுபக்கமாக உள்ள இனவாத அல்லது அடிப்படைவாத நிலைமையை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக ஒரு முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இவ்வேளையிலேயே, பிரியசாந்த் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஓர் உணர்வெழுச்சி உருவாகும் சாத்தியமிருந்த சூழலில், பௌத்த தரப்பினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டைப் பொலிஸார் கவனத்தில் எடுக்காமல் செயற்பட முடியாது. நிலைமையை சமப்படுத்த, அன்றேல் சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தமும் இருந்திருக்கலாம்.
இவ்வாறான ஒரு கட்டத்திலேயே, தனக்குக் கிடைத்த அழைப்பாணைக்கு அமைய மாளிகாவத்தை பொலிஸுக்கு வந்த அப்துல் ராசிக், அங்கு வைத்துக் கைதுக் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரண்டு இனக் குழுமங்களைச் சேர்ந்த இரண்டு பேர், இனக்குரோத மற்றும் இனவாத கருத்துக்களை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும், இனவாத சக்திகளின் கைகள் மேலோங்கியுள்ள ஒரு காலகட்டத்தில், சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களும் தம்முடைய இன, மத உரிமைகள் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கின்ற தருணத்தில் இவ்விரு கைதுகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் முக்கியத்துவமானது.
ஆசியாவின் கண்ணீர்த் துளிபோல, உலகப் படத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கை, ஒரு பல்லினப் பரம்பலைக் கொண்ட நாடு. இங்கு ஒவ்வோர் இனமும் மதமும், தமது தனித்துவ அடையாளங்களோடு வாழும் உரிமை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது நடைமுறையில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அதேசமயத்தில் இவ்வாறான ஒரு நாட்டில் நம்முடைய அன்றாட வாழ்வும் இருப்பும் மிக முக்கியமானது என்பதைக் குறிப்பாக முஸ்லிம்கள் மறந்து விடக் கூடாது. அந்த அடிப்படையில் இக்கைதுகள் மற்றும் அதன் முன்னும் பின்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டியிருக்கிறது.
இனவாத நடவடிக்கைகளுக்காகக் கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியலைத் தொகுத்து எடுத்தால், எத்தனையோ பேர் இன்னும் வெளியில் இருக்கின்றனர். பள்ளிவாசல்களை நெருக்குவாரப்படுத்தியவர்கள், இனக் கலவரங்கள் உருவாகக் காரணமானவர்கள், பகிரங்கமாக மேடைபோட்டுப் பக்கம் பக்கமாக இனவாதம் பேசுவோர், அத்துமீறிக் காணிகளைக் கைப்பற்றுவோர், புத்தர் சிலைகளை வைத்து இன நல்லுறவைக் குழப்புவோர் என, எத்தனையோ பேர் கைது செய்யப்படவில்லை.
இனவாத செயற்பாட்டாளர்களுள் சிலர் காவியுடையில் இருக்கக் காண்கின்றோம். ஒருவேளை அதுவே சட்டத்துக்கு ஒரு தர்மசங்கடத்தைக் கொடுப்பதாகவும் இருக்கலாம். எது எவ்வாறிருப்பினும், பிரியசாந்தின் கைது, சட்டத்தின் ஆட்சி பற்றிய நம்பிக்கையை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தியிருப்பதோடு, அதேவிதமான நம்பிக்கையை அப்துல் ராசிக்கின் கைது அடிப்படைவாத பௌத்தர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றே அனுமானிக்க முடிகின்றது.
மறுதலையாகக் கூறினால்,“இனவெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்” எனத் தொடர்ச்சியாகக் கூறிவந்த அரசாங்கம், அண்மைய நாட்களில் முக்கியமான நபர்கள் யாரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கவில்லை. இச்சூழலில் இப்போது பிரியசாந்தைக் கைது செய்துள்ளதன் மூலம், நாட்டின் சட்டம் ஏனையோருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது என்று எடுத்துக் கொள்ளவும் இடமிருக்கிறது.
நாட்டில் இருக்கின்ற அரசியல் சூழல், இனவாத அமைப்புக்களின் செயற்பாடு, அவ்வமைப்புக்களுக்கு பின்னாலிருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள். இவையெல்லாம் சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற மிகப் பெரிய சவால்களாகும். ஒரு தமிழனை அன்றேல் முஸ்லிமைக் கைது செய்தால் ஆங்காங்கே சில ஆர்ப்பாட்டங்கள் நடக்கும், அரசியல்வாதிகள் அழுத்தங்களைப் பிரயோகிப்பர்.
யாரும் சிங்கள இனவாதிகள் மீது கல்லெறியப் போவதில்லை. ஆனால், பொலிஸார் ஒரு சிங்கள இனவாதியைச் சிறைப்பிடித்தால், அந்த விடயம் சிறுபான்மை மக்கள் மீதே திரும்பும். நாட்டில் வாழ்கின்ற ஏனைய இன மக்களை அடக்கியாள வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கும் பேரினவாத சக்திகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விடக் கூடும்.
நிலைமை இவ்வாறிருக்கையில், பிரியசாந்த் கைது செய்யப்பட்ட பின்னரான இரவுகளில் கொழும்பில் பதற்றம் நிலவியதாக அறிய முடிகின்றது. இருப்பினும் அவ்வாறு பதற்றமடையக் கூடிய சூழல் இல்லை என்றும், ராசிக் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் தரப்பில் தீவிரத்தன்மை குறைந்திருப்பதாகவும் விடயமறிந்தோர் கூறுகின்றனர். ஆயினும், இரண்டு இனங்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாக இது இருப்பதால் மிகக் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் குறிப்பாக முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.
வீண் குழப்பங்கள், பிரசாரங்களை கைவிட்டு, கொழும்பு போன்ற பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணே உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு, நிலைமைகளை இன்னும் மோசமாக்கி விடக் கூடாது. இனவாதம் என்பது; கிருமி நாசினிகளை விட ஆபத்தானது, அவதானமாகக் கையாளவும்.
Average Rating