கான்பூர் ரெயில் விபத்து: விசாரணை நடத்த ரெயில்வே மந்திரி உத்தரவு…!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டு கவிழ்ந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி அறிந்த ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, பிரதமர் நரேந்திர மோடியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விபத்து நடந்தது குறித்தும், மீட்பு பணி விரைவாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் அவர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தார்.
புறப்படுவதற்கு முன்பு அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “வடக்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விரைவில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே ராஜாங்க மந்திரி மனோஜ் சின்கா சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “விபத்துக்கு காரணம் ரெயில் சக்கரங்கள் சுழல்வதில் ஏற்பட்ட கோளாறு, தண்டவாளத்தில் விரிசல் என பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. எனினும் உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருந்தால் அவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றி உள்ளனர்” என்றார்.
வடகிழக்கு ரெயில்வே பொது மேலாளர் அருண் சக்சேனா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவரிடம் ரெயில் தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதால் விபத்து ஏற்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் “ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கொல்கத்தாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) வந்து விசாரணையை தொடங்குவார். விசாரணை முடிவில் தான் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும். யாராவது தங்களுக்கு தெரிந்த தகவலையோ அல்லது ஆதாரத்தையோ அவரிடம் கொடுக்கலாம். மேலும் விபத்து நடந்த தண்டவாள பகுதி வீடியோ எடுக்கப்பட்டது. விபத்து நடந்த பாதையில் 36 மணி நேரத்துக்கு பிறகே ரெயில் போக்குவரத்து சீராகும். தண்டவாள சீரமைப்பு பணியில் 300 என்ஜினீயர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று பதில் அளித்தார்.
விபத்தில் தப்பிய பயணிகள் சிலர் கூறுகையில், “ஜான்சி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட போது எஸ்-1 பெட்டி சக்கரத்தில் இருந்து ஒருவித சத்தம் வந்தது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை” என குற்றம்சாட்டினர்.
விபத்து குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “நவீன ரக பெட்டிகளை ரெயில்களில் இணைத்தால் சேதம் மிகவும் குறைவாக இருக்கும். ரெயில் பெட்டிகள் விபத்தின் போது ஒன்றுடன் ஒன்று மோதி கவிழாது. உயிர்ச்சேதமும் அதிகம் இருக்காது. கோடை காலத்தில் தண்டவாளம் விரிவடைவதும், குளிர்காலத்தில் சுருங்குவதும் இயல்பு. எனவே தண்டவாள பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
Average Rating