எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? கட்டுரை
இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன.
முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் என்பது சரியா?அதாவது வரிச் சலுகை வழங்காவிட்டால் எந்தவொரு மோசமான சட்டத்தையும் வைத்திருக்க அரசாங்கம் தயாரா எனவும் கேள்வி எழுப்பலாம்.
2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் ஊடக சுதந்திரத்தை இல்லாதொழித்தல் போன்ற 15 காரணங்களை அதற்காக முன்வைத்தது. அவற்றில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயமும் இருக்கவில்லை. முன்னர் அந்த வரிச் சலுகை வழங்கப்படும் போதும் தற்போதைய முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் அமுலில் இருந்தது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பதவிக்கு வந்த அரசாங்கம் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மேற்படி 15 விடயங்களில் பலவற்றை நிறைவேற்றி வருகின்றது. அந்த நிலையில் புதிய நிபந்தனைகளையும் விதிப்பதாக இருந்தால் அது நாட்டை இம்சிப்பதாகவே அமையும்.
அண்மையில், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றின் போது, இதைப் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் துங் லாய் அரக்கிடம் கேட்ட போது, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் திருமணத்துக்கு இடமளிக்கக்கூடாது என்பதைச் சுட்டிக் காட்டும் சர்வதேச உடன்படிக்கை உள்ளிட்ட பல சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை இணக்கம் தெரிவித்திருக்கிறது. அதைத் தவிர, தற்போது இலங்கையில் நிலவும் சர்ச்சையில் தலையிட நாம் விரும்பவில்லை எனக் கூறியிருந்தார். சிலவேளை அந்த அடிப்படையில் அமைச்சர் இந்தச் சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்துக்கும் முடிச்சு போட்டு இருக்கலாம்.
எனினும், அமைச்சரின் இந்த அறிவித்தலை அடுத்துச் சில காலமாக அடங்கியிருந்த முஸ்லிம் விரோத சக்திகள் மீண்டும் வாய் திறக்க ஆரம்பித்துள்ளன. நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு தனியானதோர் சட்டம் இருக்க முடியாது என்றும் அவர்கள் வாதாடுகிறார்கள்.
ஏதோ, இலங்கையில் 12 வயது பூர்த்தியான முஸ்லிம் சிறுமிகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படுவதைப் போல் சிங்களப் பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின்றன. ஏதோ, நாட்டில் முஸ்லிம்கள் அனைவரும் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இருப்பதைப் போல் பலதார மணக் கொள்கையை விமர்சிக்கிறார்கள். ஏதோ, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமும் இஸ்லாத்தின் ஷரீஆ சட்டமும் ஒன்று என்பதைப் போல் இலங்கையில் ஷரீஆ சட்டத்தைத் திணிக்க இடமளிக்க முடியாது என வாதாடுகிறார்கள்.
இதற்குப் பதிலளிக்க முற்படும் சில முஸ்லிம்களும் அவர்களை விட சளைத்தவர்களல்லர். அவர்களும் சீதனத்தைச் சட்டபூர்வமாக்கிய முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமானது எந்தவொரு அம்சமும் மாற்ற முடியாத இறைவனின் சட்டம் என நினைக்கிறார்கள் போலும். அவர்களது வாதங்களைப் பார்த்தால் பெண்கள் 12 வயதில் திருமணம் செய்து கொள்ளவே வேண்டும் எனவும் முஸ்லிம்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளவே வேண்டும் என்றும் இஸ்லாம் பரிந்துரை செய்திருப்பதாகவே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தைப் பற்றித் தெரியாதவர்கள் நினைப்பர்.
பல ஊடகங்களில் கூறப்பட்டு இருந்ததைப் போல், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையாக 12 வயது குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த அர்த்தம் வரும் வகையில் அச்சட்டத்தில் ஒரு வாசகம் அமைந்துள்ளது. அதாவது 12 வயதுக்குக் குறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் காதி நீதிவானின் அனுமதியுடன் அவ்வாறு செய்யலாம் என அச்சட்டம் கூறுகிறது.
அதாவது, 12 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. அவ்வாறாயின் 12 வயது என்பது முஸ்லிம் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதாகிறது. ஆனால், இந்த வயதெல்லைக்கும் இஸ்லாத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதாக இஸ்லாம் எந்தவொரு வயதையும் குறிப்பிடவில்லை.
பருவமடைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதே இஸ்லாத்தின் கொள்கையாகும். 12 வயதில்தான் பெண்கள் பருவமடைகிறார்கள் என்று எவராலும் கூற முடியாது. சமய ரீதியாகவோ அல்லது உயிரியல் ரீதியாகவோ அவ்வாறு நிரூபிக்க முடியாது. எனவே 12 வயதுக்கும் ஷரீஆவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.
அதேவேளை 12 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளக் காதி நீதிவானிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும் ஷரீஆ அல்ல. ஏனெனில், பருவமடைந்தால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்க, நீதிவானிடம் அனுமதி பெறத் தேவையில்லை.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்படும் இந்த 12 வயதெல்லையும் அதற்குக் குறைந்த பெண்ணை அனுமதி பெற்றுத் திருமணம் செய்து கொள்வதையும் இஸ்லாமிய விதியென நினைத்துக் கொண்டு இருக்கும், அதேவேளை முஸ்லிம்களைச் சீண்டுவதே தமது தொழிலாகக் கொண்டுள்ள சிலர், இதை மாற்று என கர்ஜிக்கின்றனர். இந்த வயதெல்லை ஒன்றும் அறியாச்சிறு பிள்ளைகளின் மனித உரிமையை மீறுகிறது என்பதே அவர்கள் முன்வைக்கும் பகிரங்க வாதமாகும்.
அது முற்றிலும் பொய்யானதல்ல; எனினும் இவர்களில் பலர் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக ஒரு போதும் ஒரு வார்த்தை கூடப் பேசாதவர்கள். கடந்த வருடம் கொட்டதெனியாவவில் சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போது, இவர்கள் வாய் திறக்கவில்லை. நாட்டில் சில மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் சிறுவர் திருமணங்களுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் கருத்து வெளியிட்டதில்லை. இவர்கள் சிறுவர்களின் உரிமைகளுக்காக இங்கு பேசுவதில்லை. இது முஸ்லிம் எதிர்ப்பின் மற்றொரு வெளிப்பாடேயன்றி வேறொன்றுமல்ல.
விந்தை என்னவென்றால் இந்த 12 வயது எல்லையையும் மேற்படி அனுமதி பெறுவதையும் இஸ்லாம் விதித்த எல்லை என முஸ்லிம்களில் சிலரும் நினைத்துக் கொண்டு இருப்பதே. அதனால்தான் இது இறைவன் விதித்த சட்டம்; அதனை மாற்ற இடமளிக்க முடியாது எனச் சிலர் கூறுகிறார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், பருவமடைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறும் போது, அவ்வாறேதான் செய்ய வேண்டும் என இஸ்லாம் பரிந்துரை செய்யவில்லை. பருவமடைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியைத்தான் இஸ்லாம் வழங்குகிறது. அனுமதியும் பரிந்துரையும் ஒன்றல்ல.
இதனை முஸ்லிம்களைச் சீண்டுவதற்காக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை திருத்த வேண்டும் எனக் கூறும் இனவாதிகளும் விளங்கிக் கொள்ளவில்லை. அச்சட்டம் இறைவனின் சட்டம் என்றும் அதனை மாற்ற முடியாது என்றும் சிங்களப் பத்திரிகைகளுக்குக் கூறும் முஸ்லிம்களும் அவர்களைக் குழப்புகிறார்கள்.
12 வயது என்பது இந்த விடயத்தில் இஸ்லாம் விதித்த எல்லையாக ஏற்றுக் கொண்டாலும், அந்த வயதில் தமது மகளுக்கு திருமணம் செய்து வைக்க தற்காலத்தில் எந்தப் பெற்றோரும் விரும்புவதாகத் தெரியவில்லை. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் இறைவனின் சட்டம் எனச் சிங்களப் பத்திரிகைகளுக்குக் கூறுவோரும் தமது பெண் பிள்ளைகளுக்கு அந்த வயதில் திருமணம் செய்து வைப்பார்களா என்பது சந்தேகமே. அதற்குக் காரணம், இந்த வயதெல்லையானது நாம் முன்னர் கூறியதைப் போல் பரிந்துரை அல்ல, அனுமதி மட்டுமே என்பதை அவர்கள் உணர்ந்து இருப்பதேயாகும்.
திருமணத்துக்காக இந்த உயிரியல் காரணியை மட்டும் எவரும் கருத்திற்கொள்வதில்லை. மேலும், பல சமூகப் பொருளாதார காரணிகளையும் கருத்தில் கொண்டுதான் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அதனால்தான் தற்காலத்தில் 12 வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவதில்லை.
நூறு வருடங்களுக்கு முன்னர் திருமணத்துக்காக பெண்களின் சமூக அறிவு அத்தியாவசிய காரணியாகக் கருதப்படவில்லை. பெண்கள் அக்காலத்தில் வீட்டில் இருந்து பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு சமைத்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள். பிள்ளைகளின் வாழ்க்கையும் எளிய வாழ்க்கையாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் முஸ்லிம் பெண்களும் கல்வியில் முன்னேறி வருகிறார்கள். அதனால்தான், தற்போது நாம் முஸ்லிம் பெண் டொக்டர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள், நிர்வாக அதிகாரிகள் போன்றோரைக் காண்கிறோம். அதற்காக முஸ்லிம் பெண்களும் கல்வித்துறையில் முன்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.
அவ்வாறு தொழில் செய்யாவிட்டாலும் பொதுவாகச் சமூகம் அறிவுத்துறையில் முன்னேறும்போது, முஸ்லிம் பெண்கள் மட்டும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியாது. அறிவுத்துறையில் முன்னேறிய சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கவும் அறிவுத் துறையில் வேகமாக முன்னேறும் தமது பிள்ளைகளைக் கண்காணிக்கவும் வழிநடத்தவும் முஸ்லிம் பெண்களும் கல்வி அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கல்வி கற்க வேண்டும் என்று தான் இஸ்லாமும் கூறுகிறது.
பருவமடைந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காகக் குறைந்த பட்சம் பாடசாலைக் கல்வியையாவது பெண் பிள்ளைகளுக்கு வழங்காதிருக்க வேண்டுமா? பாடசாலைக் கல்வி இல்லாவிட்டாலும் சமூக அறிவு பெறும் வரையாவது பொறுத்திருக்க வேண்டும். எனவேதான் 12,13,14,15 போன்ற வயதுள்ள பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்வதைத் தற்காலத்தில் மிகவும் அரிதாகக் காண்கிறோம்.
இது மோசமான நிலைமையல்ல; நல்லதோர் நிலைமையாகும். எனவே, தற்கால சமூக பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அதற்கமைய பெண்களுக்கும் ஆண்களுக்குமான புதியதோர் குறைந்தபட்ச திருமண வயதெல்லைகளை வகுத்துக் கொள்ளக் கூடாதா? இறைவன் ‘பருவமடைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று ஓர் எல்லையை வகுத்திருக்க, நாம் அதற்கு இடமளிக்காமல் வேறு வயதெல்லைகளை நியமிக்கலாமா என்று சிலர் கேட்கலாம். அவ்வாறாயின் தற்போது முஸ்லிம் விவாகச் சட்டத்தில் உள்ள 12 வயது என்பதும் பொருத்தமற்றதாகும் ஏனெனில், சில பெண்கள் அதற்கு முன்னரும் பருவமடைகிறார்கள்.
குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றுவதாக இருந்தால் அதனை முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளே செய்ய வேண்டும். ஏனெனில், சமூகம் இந்த விடயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்குத்தான் தெரியும். அல்லது அவர்களுக்குத்தான் தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
ஒரு புறம் பெண் பிள்ளைகளின் திருமணத்தை 18, 19 வயதுக்கு அப்பால் தாமதித்தால் மாப்பிள்ளை தேடிக் கொள்ள முடியாமல் போகும் என்ற அச்சம் பெற்றோரிடம் இருக்கிறது. பண வசதி இல்லாதோர் வசதி கிடைத்த உடன் அதனைச் செய்ய வேண்டும் என அவசரப்படுகிறார்கள். பிள்ளைகள் தகாத உறவுகளில் சிக்கிக் கொள்வார்களோ என்ற பயத்தாலும் சில பெற்றோர் பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு அவசரப்படுகிறார்கள். இவை நியாயமான ஆதங்கங்கள் மட்டுமல்ல உண்மையான பிரச்சினைகளும் கூட.
மறுபுறத்தில் 12 வயதுடைய பெண் பிள்ளை மட்டுமல்ல,15, 16 வயதான பெண் பிள்ளையும் குடும்பப் பொறுப்பை சுமக்கக் கூடியவள் அல்ல என்பது பெற்றோருக்குத் தெரியும். அதேவேளை தற்காலத்தில் தமது பிள்ளைகளின் கல்வியிலும் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாட்டின் பொதுவான நிலைமையும் 15, 16 வயதுப் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்ற மனோ நிலைமையை முஸ்லிம் பெற்றோர் மத்தியில் வளர்த்துவிட்டுள்ளது. இவை போன்ற காரணங்கள் பெற்றோர் கூடிய வரை பெண் பிள்ளைகளின் திருமணத்தை ஒத்திப் போடத் தூண்டும் காரணிகளாகும்.
நடைமுறையில் இந்த இரண்டு விதமான காரணிகளையும் கருத்தில் கொண்டு தான் பெற்றோர் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். நடைமுறையும் இதுவாக இருந்தால் பிற சமூகங்கள் முஸ்லிம்களை இழிவாக மதிக்காதிருக்கவும் வேண்டும் என்றால் இந்த நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய, குறைந்தபட்ச வயதெல்லையொன்றைச் சட்டமாக்கிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் சிறுவர் திருமணங்களுக்கு வித்திடும் என்று சில முஸ்லிம் விரோத சக்திகள் கூறிய போதிலும், நாட்டில் சில மாவட்டங்களில் இடம்பெறும் சிறுவர் திருமணங்களுக்கு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் காரணமாகவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் இடம்பெறும் இச்சிறுவர் திருமணங்கள் முஸ்லிம் அல்லாதவர்களிடையே நடைபெறும் திருமணங்களாகும். முஸ்லிம்களைச் சீண்டுவதற்காக இச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கூச்சலிடுவோர் இந்த விடயத்தைக் கண்டும் காணாதவர்களைப் போல் இருக்கிறார்கள்.
திருமணத்தின்போது பெண்ணின் விருப்பத்தைப் பெற வேண்டும் என முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் கூறிய போதிலும், மணமகளின் கையொப்பத்துக்கு முஸ்லிம் திருமணப் பதிவுத் தாளில் இடம்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக் காட்டும் முஸ்லிம் பெண்களின் ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கை மன்றம் என்னும் அமைப்பு, இந்த நிலைமையும் சீர்செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
மனைவியரிடையே நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே, இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது. ஆனால், அந்த நியாயத்தை உறுதிப்படுத்தும் எந்தவொரு பிரமாணமும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் இல்லை.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் கைக்கூலி என்ற பெயரில் சீதனத்தை அங்கிகரிக்கின்றது. சீதனம் இஸ்லாமியக் கொள்கையல்ல; அதேவேளை தற்போது கைக்கூலியைத் திருமணப் பதிவேட்டில் பதிவது கட்டாயமில்லை என்றும் விவாகரத்தின் போது கணவன் விவாகரத்துக்கான காரணத்தைக் கூற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் விவாகரத்தின் பின்னர் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பராமரிப்புச் செலவு பெற மனைவிக்கு உரிமை இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டும் முஸ்லிம் பெண்களின் ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கை மன்றம், இந்த நிலைமைகள் மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எனவே, தற்போது வழக்கில் உள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் இறைவனால் வகுக்கப்பட்ட பிரமானங்களை மட்டும் கொண்ட சட்டமல்ல. அதில் இஸ்லாத்துக்கு முரணான பல பிரமாணங்களும் இருக்கின்றன. எனவே, அது திருத்தப்பட வேண்டும் என்பது தெளிவான விடயமாகும். அதற்காக முஸ்லிம் சமூகத்துக்குள் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், இங்கு பிரச்சினை என்னவென்றால் ஐரோப்பாவிலிருந்து வரிச் சலுகை பெறுவதற்காக நாம் இச்சட்டத்தை மாற்ற வேண்டுமா என்பதேயாகும். அவ்வாறில்லா விட்டால் சர்வதேச உடன்படிக்கைகளின் பிரகாரம் குறைந்தபட்ச திருமண வயதெல்லையை மாற்றுவதோ ஏனைய உள்நாட்டுச் சட்டங்களைத் திருத்திக் கொள்வதோ பெரும் பிரச்சினையாகாது.
Average Rating