நெல்லை அரசு விடுதி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள படுகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது17). இவர், நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழே உள்ள ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று இரவு 7 மணி அளவில் விடுதியில் மாணவர்களுக்கு இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது அங்கு தங்கி இருந்த மாணவர்கள் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது வெங்கடேசும் சாப்பாடு வாங்க வரிசையில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது விடுதியின் வெளியில் இருந்து வந்த ஒரு மர்ம நபர், வெங்கடேசை வெளியே வரும்படி அழைத்தார். அவர் யார் என்று தெரியாததால் என்ன விவரம் என்று பேசுவதற்காக வெங்கடேஷ் வெளியில் வந்தார். விடுதியின் வாசலில் மற்றொருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் வெங்கேடஷ் விடுதிக்குள் செல்ல முயன்றார். ஆனால் வெங்கடேசை போகவிடாமல் மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க வெங்கடேஷ் அலறியடி ஓடினார். ஆனால் கொலை வெறியுடன் வந்த 2 பேரும் அவரை துரத்திச் சென்று வெட்டிச்சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் வெங்கடேஷ் துடி துடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு விடுதி மாணவர்கள் மற்றும் வார்டன் ஆகியோர் ஓடி வந்தனர். அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் குமார், உதவி கமிஷனர் மாரிமுத்து, நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை, நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், கொலை செய்யப்பட்ட வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ‘திடுக்’ தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ் தன்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். அதே மாணவியை பள்ளியில் படிக்கும் தச்சநல்லூர் அழகநேரியை சேர்ந்த சுந்தர் (17) என்ற மாணவரும் காதலித்துள்ளார். அந்த மாணவியோ 2 பேரிடமும் சகஜமாக பேசி வந்துள்ளார்.
ஆனால் மாணவர்கள் வெங்கடேசும், சுந்தரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டுள்ளனர். 2 மாணவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து அனைத்து மாணவ- மாணவிகளும் வெளியேறிய போது வெங்கடேசும் அவரது நண்பர்களும் சுந்தரை வழிமறித்து தாக்கினார்களாம். இது சுந்தருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதை அவர் தனது உறவினரும் நண்பருமான நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் உள்ள பழக்கடை ஊழியர் செல்வம் (24) என்பவரிடம் கூறினார். அவர் வெங்கடேசை வெட்டிக் கொலை செய்து விடுவோம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் நேற்று இரவு மதுக்குடித்து விட்டு அரிவாளுடன் வெங்கடேஷ் தங்கி உள்ள விடுதிக்கு சென்றனர். அங்கு சுந்தர் மறைந்து கொள்ள, செல்வம் மட்டும் விடுதிக்குள் சென்று வெங்கடேசை அழைத்துள்ளார். இதனால் அவர் வெளியில் வந்தபோது 2 பேரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இன்று அதிகாலை வெளியூர் செல்வதற்காக துணிகளை எடுக்க செல்வம், சுந்தர் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். கைதான செல்வம் அழகநேரியைச் சேர்ந்தவர் ஆவார். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating