வெறுப்பை நியமமாக்குதல்…!! கட்டுரை
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், “அதிகார மாற்றத்துக்கான பிரிவு” என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும்.
அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பின்புலத்தில் மேற்கொள்வதே, அப்பிரிவின் தேவை. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் அவ்வாறான பிரிவுக்கு, நியூ ஜேர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தலைமை வகித்தார். ஆனால், வாக்கெடுப்புத் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பிரிவின் நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்தி, தேர்தலை வெல்வதில் கவனம் செலுத்துமாறு, டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், நவம்பர் 8ஆம் திகதி, வாக்கெடுப்புத் தினம். நியூயோர்க்கிலுள்ள மன்ஹெட்டன் பாடசாலையொன்றுக்கு தனது வாக்கை அளிப்பதற்காக, தனது மனைவி மெலானியா ட்ரம்ப்புடன் வருகிறார் ட்ரம்ப். தனது வாக்கை மெலானியா குறிப்பிடும் போது, அவர் வாக்களிப்பதை ட்ரம்ப் எட்டிப் பார்க்கும் காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகின. டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்த பின்னர், சிறிது நேரத்தில் வாக்களித்த அவரது மகன் எரிக் ட்ரம்ப், தனது மனைவி லாரா யுனஸ்காவின் வாக்குச் சீட்டை எட்டிப் பார்க்கும் புகைப்படங்களும் வெளியாகின. இருவருமே, தங்களது துணைகள், ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களிப்பர் என அஞ்சினரா என்பது தெரியவில்லை, ஆனால் ட்ரம்ப் பிரசாரக் குழுவின் பதற்றமான நிலையை அல்லது தன்மையை, அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
ஆனால், நவம்பர் 9ஆம் திகதி அதிகாலையில் (இலங்கை நேரப்படி அன்று பிற்பகல்), ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்படுகிறார். எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி, அவர் பெற்ற இந்த வெற்றி, டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, அவரது கட்சியான குடியரசுக் கட்சியின் தேசிய செயற்குழு, அவரது ஆதரவாளர்கள் என, அவரது வெற்றியைக் கொண்டாட வேண்டிய தரப்பினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என, வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறு நடந்தது இது?
ஐக்கிய அமெரிக்க வரலாற்றின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியைத் தெரிவுசெய்து 8 ஆண்டுகளில், வெள்ளையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இனவாதக் குழுவான கிளான் அமைப்பால் ஆதரவு வழங்கப்படும் ஜனாதிபதியை, ஐக்கிய அமெரிக்கா எவ்வாறு தெரிவுசெய்தது என்பது, இன்னமும் புதிராகவே தோன்றலாம். “வெறுப்பை அன்பு வெல்லும்” என்ற பிரசார சுலோகத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், வெறுப்பை நியமம் (standard) ஆக்கும் வகையில் செயற்படும் ஆதரவாளர்களைக் கொண்ட ட்ரம்ப், எவ்வாறு இந்த வெற்றியைப் பெற முடியும்?
இந்தப் பத்தியின் நோக்கம், டொனால்ட் ட்ரம்ப்பைத் தெரிவுசெய்த வாக்காளர்களின் முடிவை ஏற்காமலிருப்பது அன்று. மாறாக, அந்த முடிவுக்கு மக்கள் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வது தான் இதற்கான நோக்கம்.
ஜனநாயகத்தின் அடிப்படையென்பது, மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போது, அம்முடிவை ஏற்றுக் கொள்ளுதல் தான். (அதில், பிரபல வாக்குகள் என அழைக்கப்படும் மக்களின் நேரடி வாக்குகள், ஹிலாரிக்கே அதிக வாக்குகள் கிடைத்தன என்பது ஒரு பக்கம். நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான பிரதிநிதிகள் குழு எனப்படும் முறையில், நியாயமாகவே ட்ரம்ப் வென்றார்). ஆனால் அதற்காக, மக்களின் முடிவை விமர்சிக்க முடியாது என்பது அர்த்தம் கிடையாது.
கேலிக்குரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்போர், அந்த நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதற்கான உரிமையை மதிப்பது அவசியமானது. அது தான் ஜனநாயகம். அதற்காக, கேலியான அந்த நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமென்றோ அல்லது அவற்றை விமர்சிக்கக்கூடாது என்றோ எதிர்பார்ப்பது தவறானது. அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி வர வேண்டும் என்பதற்காக, 1,008 தேங்காய்களை நல்லூரில் உடைக்கும் சிவாஜிலிங்கத்தின் நம்பிக்கையையும் அதற்கான உரிமையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக, அந்தக் கேலியான நம்பிக்கையைக் கேலி செய்ய முடியாது என்றில்லை. அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
ஆரம்பத்தில், ஜனாதிபதியாகும் எண்ணமே ட்ரம்ப்புக்கு இருந்ததாக தெரியாது. சில தகவல்களின்படி, தனது வியாபாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில், விளம்பரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் களமிறங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே, பிரிவினைவாத அல்லது தீவிரக் கருத்துகளை வெளிப்படுத்தியே, அவரது பிரசாரம் அமைந்தது. அமெரிக்காவுக்குள் குடிபெயர்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள் எனவும் நாட்டில் இஸ்லாமியப் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டது என்பதுமே, அவரது பிரதான பிரசாரக் கருத்துகள்.
அவரது முதலாவது பிரசாரக் கூட்டத்தில், “மெக்ஸிக்கோ தனது மக்களை அனுப்பும் போது, தங்களது சிறந்தவர்களை அது அனுப்புவதில்லை. அவர்கள், உங்களை அனுப்புவதில்லை. அவர்கள், பிரச்சினையுள்ளவர்களை அனுப்புகிறார்கள், அவர்கள் பிரச்சினைகளைக் கொண்டு வருகிறார்கள். போதைப் பொருட்களை அவர்கள் கொண்டு வருகிறார்கள். குற்றங்களை அவர்கள் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வன்புணர்பவர்கள். சிலர், நல்லவர்கள் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். பின்னர், அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் வருவதைத் தடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
அவரது பிரசாரத்தின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலத்தீனோக்கள், கறுப்பினத்தவர்கள், முஸ்லிம்கள், பெண்கள், அங்கவீனமானவர்கள், ஊடகவியலாளர்கள் என, பல்வேறு தரப்பினரையும் இழிவுபடுத்தியும் சிறுமைப்படுத்தியும், அவரது பிரசாரங்கள் அமைந்தன. அவ்வாறானவர், குடியரசுக் கட்சியின் வேட்புமனுவைக் கூட பெறமாட்டார் என்று கருதப்பட்டது.
இந்தப் பிரசார காலத்தின் ஆரம்பத்தில், தொலைக்காட்சிக் கலந்துரையாடலொன்றில், 7 பேர் கலந்துகொண்டிருந்தனர். அதிலொருவர், “ட்ரம்ப்பின் பக்கமாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஆகும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என்றார். அவர் அவ்வாறு சொன்னதும், அந்த விவாதத்தில் காணப்பட்ட ஏனைய அனைவருமே, கேலியாகச் சிரித்தனர். அந்த நிலையில் காணப்பட்ட ட்ரம்ப், இன்று ஜனாதிபதியாகியிருக்கிறார்.
இதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக, ஊடகங்களைக் குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி ட்ரம்ப்பை உருவாக்கியவர்கள் என்ற “பெருமை”, உலகம் முழுவதிலும் உருவாகிவரும் ஊடகக் கலாசாரத்துக்கு உண்டு.
ஆரம்பத்திலிருந்தே, டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துகளை, தங்களுடைய வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக ஊடகங்கள் பயன்படுத்தின.
ட்ரம்ப் சொல்வதை அதிகமாக வழங்க வழங்க, அத்தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடியது; இணையத்தளங்களை வாசிப்போர் எண்ணிக்கை கூடியது; பத்திரிகைகள் விற்பனையாவது அதிகரித்தது. மக்கள் பார்க்காவிட்டால்/வாசிக்காவிட்டால், அவற்றை ஊடகங்கள் வெளியிட்டிருக்காது என்ற வாதத்தை, ஊடகங்கள் முன்வைக்கக்கூடும். அந்த உண்மையையும் மறுக்க முடியாது.
ஆனால், ஊடகங்களுக்கான சமூகப் பொறுப்பு என்ற ஒன்று உள்ளது. மக்கள் விரும்புவதை வழங்குவது தான் ஊடகப் பொறுப்புக் கிடையாது. மாறாக, மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதுவும் ஊடகங்களின் பொறுப்பே. குறிப்பாக, செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு, அதுவொரு முக்கியமான கடமையாகும். மாறாக, தங்களது வியாபாரத்தைப் பற்றியே கவனத்தைச் செலுத்திய ஊடகங்கள், அந்தச் சமூகப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன.
ஐக்கிய அமெரிக்காவின் அனேகமான ஊடகங்களை, ட்ரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் வெறுத்தனர். பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்-ஐ, “கிளின்டன் செய்திச் சேவை” என அழைப்பது வழக்கம், ஹிலாரிக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது எனக் குற்றச்சாட்டியே, அவர்கள் இவ்வாறு அழைப்பர். அந்நிறுவனத்தின் சார்பு நிலை என்பதை ஆராய்வது கடினமானது, பொருத்தமாகவும் அமையாது.
ஆனால், இந்தத் தேர்தலில் அந்நிறுவனம் செய்த செயற்பாடுகளுள் ஒன்று, ட்ரம்ப்புக்கு ஆதரவான சிலரை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கொடுப்பனவு வழங்கி, ட்ரம்ப்புக்கு ஆதரவான கருத்துகளைக் கலந்துரையாடல்களில் வெளிப்படுத்தச் செய்தமை ஆகும். ட்ரம்ப்புக்கு ஆதரவான பிரபலங்களைத் தேட முடியாது என்பதாலேயே, இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. தேர்தலில், இரு தரப்பையும் சமமாகப் பிரதிநிதித்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது செய்யப்பட்டது.
ஆனால், நடந்தது என்னவெனில், ட்ரம்ப் பற்றிய எல்லாக் கலந்துரையாடல்களிலும் இவர்கள் இடம்பெற்றார்கள். ட்ரம்ப் எதைச் செய்தாலும், அதை நியாயப்படுத்துவதற்கு இவர்கள் தயாராக இருந்தார்கள். மோசமான செயலொன்றை ட்ரம்ப் செய்தால், அது தவறு எனச் சொல்பவரும் சரியெனச் சொல்லும் இவர்களும், ஒரே அளவிலான நேரத்தையே பெற்றனர். இது, ஆபத்தான நிலையாகும்.
அதேபோன்று, ட்ரம்ப்புக்கும் ஹிலாரிக்குமான அளவு மட்டமென்பது, வித்தியாசமானதாக இருந்தது. முதலாவது விவாதத்துக்கு முன்னர், தொலைக்காட்சியொன்றில் அது பற்றிய முன்னோட்டம் ஒளிபரப்பானது. அதில், “ஹிலாரி கிளின்டன், புற்றுநோயைக் குணப்படுத்த வேண்டும்” என்று சொல்லாதது தான் குறை. ஹிலாரி அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டுமென, பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டன. ட்ரம்ப்பைப் பற்றிய முன்னோட்டத்தில் “மோசமான எதையும் சொல்லாமலிருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டது. இருவருமே, வெவ்வேறான தராசுகளில் வைத்தே எடைபோடப்பட்டனர்.
இன்னொரு சந்தர்ப்பத்தில், “பொதுமைப்படுத்துவதாக இருந்தால், டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் பாதிப் பேர், ‘இழிவானவர்களின் கூடை’ என்பதற்குள் உள்ளடக்கப்பட முடியும். இனவாதிகள், ஆணாதிக்க வாதிகள், சமபாலுறவுக்கு எதிரானவர்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரானவர்கள் என்று, அவர்கள் இருக்கிறார்கள்” என, ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார். மிகவும் அடிப்படையான பொதுமைப்படுத்தல் அது. அதைத் தொடர்ந்து, ஊடகங்களில் அது, பிரபல பேசுபொருளாக மாறியது.
ஹிலாரியின் மேல் தவறு, இப்பிரசாரத்தின் மோசமான கருத்து, வாக்காளர்களை அவமானப்படுத்தக்கூடாது என்றெல்லாம் ஊடகங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே, ட்ரம்ப்பின் அனைத்து வகையான இழிவுபடுத்தல்களில் கூட, அவ்வாறான கருத்துகள் வெளியாகினவா தெரியாது. ஹிலாரி கிளின்டனின் அக்கருத்து முட்டாள்தனமானதா என்றால், நிச்சயமாக. தவறானதா என்றால், அது ஆராயப்பட வேண்டியது. ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் 20 சதவீதம் பேர், அடிமைத்தனத்தை ஒழித்தமை தவறானது எனக் கருதுகிறார்கள்; 60 சதவீதம் பேர், ஜனாதிபதி ஒபாமா, கென்யாவில் பிறந்தார் என்ற இனவாதக் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அந்த விடயங்களை, ஊடகங்கள் குறிப்பிட்டனவா என்றால், இல்லை. ஏற்கெனவே சொல்லப்பட்ட, இரட்டை நியமக் கொள்கை தான் இதற்கும் காரணம்.
அடுத்ததாக, “பிரபலமாக இருப்பதால், எதையும் செய்ய முடியும். பெண்களைக் கண்டவுடன், நான் முத்தமிட ஆரம்பித்து விடுவேன். அவர்களின் அனுமதிக்காகக் கூடக் காத்திருப்பதில்லை. பெண்களின் பாலுறுப்பை நான் பிடிப்பேன்” என ட்ரம்ப் தெரிவிக்கும் காணொளி வெளியானது. அதில், மோசமான சொற்களைப் பயன்படுத்தியே அவர் அக்கருத்தை வெளியிட்டிருந்தார். ஊடகங்கள் எல்லாவற்றிலுமே, “டொனால்ட் ட்ரம்ப், மோசமான சொற்களைப் பயன்படுத்தினார்” என்பது தான் முக்கியப்படுத்தது. ஆனால் அதில் முக்கியமானது, ட்ரம்ப் அங்கு விவரித்தது, பாலியல் குற்றமாகும். “பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதைப் பற்றி, ட்ரம்ப் விவரிக்கிறார்” என்று தான், அது அறிக்கையிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு, ஊடகங்கள் தவறியிருந்தன.
ஹிலாரி மீதான விமர்சனமாக, ஏற்கெனவே காணப்படும் அரசியல் சாக்கடையின் ஓர் அங்கமாக அவர் காணப்படுகிறார் என்பது தான் காணப்பட்டது. 3 தசாப்தங்களுக்கும் மேலாக பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த ஒருவர், ஊழல்மிகுந்த நிறுவன அமைப்பின் அங்கமாக இருப்பதொன்றும் விநோதம் கிடையாது. ஆனால், ஹிலாரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையிலான தெரிவில், ஹிலாரி என்பவர் மிக இலகுவான தெரிவு என்பதை வெளிப்படுத்துவது, எவ்வளவு கடினமானது?
ஹிலாரி கிளின்டன் பொய் சொல்கிறார், பொய் சொல்கிறார் என ட்ரம்ப் தரப்புத் தெரிவித்த போது, கிளிப் பிள்ளை போல அவ்வாறே அறிக்கையிடுவதை விடுத்து, ஹிலாரியை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பொய்களை, ட்ரம்ப் சொல்கிறார் என்பதை வெளிப்படுத்த மறந்தது ஏனோ?
ஹிலாரியின் கணவர் பில் கிளின்டன், திருமணத்துக்குப் புறம்பான உறவுகளைக் கொண்டிருந்தார் (இது உண்மை) எனவும் வன்புணர்வில் ஈடுபட்டார் (இதுவரை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை) எனவும், ட்ரம்ப்பும் அவரது பிரசாரக் குழுவினரும் தெரிவித்த போது, இங்கு அவதானம், ஹிலாரி சம்பந்தமாகவே இருக்க வேண்டுமெனவும், வேட்பாளரின் துணைவர் தொடர்பாகக் குற்றஞ்சாட்டும் ட்ரம்ப், இதுவரை 3 மனைவிகளைக் கொண்டிருக்கிறார் என்பதையும் முதலாவது மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவியாக வரவிருந்தவருடன் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பதையும் இப்போது வெளியான தகவல்களின்படி மூன்றாவது மனைவியுடன் உறவில் இருக்கையில், வேறு பெண்களுடன் தொடர்புகளில் ஈடுபட்டார் என்பதையும், ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.
ஊழல் சாக்கடையில் ஓர் அங்கமெனத் தெரிவிக்கப்பட்ட ஹிலாரி, தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ட்ரம்ப், அவர் சொன்னதைப் போன்று, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் வருவதைத் தடுக்க மாட்டார்; அனுமதியற்று பல தசாப்தங்களாக வசிக்கும் குடியேற்றவாசிகளை வெளியேற்றமாட்டார்; எதிர்பார்க்குமளவுக்கு, மோசமான அதிகார துஷ்பிரயோகம் செய்வராக இருக்க மாட்டார்; மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள், இனவாதத்தையும் மதவாதத்தையும் ஆணாதிக்கத்தையும் வெள்ளையின ஆதிக்கத்தையும் சமபாலுறவாளர் மீதான வெறுப்பையும், நியமமாக்குவார்கள் என்றே அஞ்சப்படுகிறது. வெற்றிபெற்ற அடுத்த நாளான நேற்றே, அமெரிக்காவில் ஆங்காங்கே நாஸிகளின் கொடிகள் காணப்பட்டதோடு, முஸ்லிம்கள் சிலர், இலக்கு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் தகவல்கள், அச்சத்தையே அதிகரிக்கின்றன.
அமெரிக்க வாக்காளர்களுக்கென்று ஒரு பணி இருந்தது: வெறுப்பை நியமமாக்கும் வாய்ப்பை இல்லாது செய்வதே அது. ஆனால் அப்பணியில், அம்மக்கள் தவறிவிட்டார்கள் என்பது தான், இப்போதைக்குச் சொல்லக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
Average Rating