அபாய சங்கு….!! கட்டுரை

Read Time:18 Minute, 27 Second

article_1479184107-mbமாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பௌத்தர்கள் யாருமில்லாத தமது பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, அங்குள்ள மக்கள்தான் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அதுகுறித்து அக்கறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதன் பின்னணியில், ஐ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயாகமகே இருந்தார் என்று, பகிரங்கமாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், கடந்த ஏழாம் திகதி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், அம்பாறைக் கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது மாயக்கல்லி மலையில் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்த பேச்சுகள் எழுந்தன. இதனையடுத்து, அங்கு உரையாற்றிய அமைச்சர் தயாகமகே, குறித்த கூட்டத்துக்கு வரும் வரையில், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பற்றித்தான் அறிந்திருக்கவில்லை என்றார். ஒக்டோர் 29 ஆம் திகதி, மாணிக்கமடு, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது.

இதன்படி பார்த்தால், ஒன்பது நாட்களுக்கு முன்னர் தனது மாவட்டத்தில் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடொன்றினை, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரொருவர் அறியாமல் இருந்ததாகக் கூறியமை ஆச்சரியமான செய்தியாகவே இருந்தது.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை, மத ரீதியானதொரு விடயம் மாத்திரமல்ல என்பதை முன்னைய பத்திகளில் விபரித்திருந்தோம். பௌத்தர்கள் எவரும் வசிக்காத, சிறுபான்மை மக்களின் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கானதொரு நடவடிக்கையாகவே, புத்தர் சிலைகள் அடாத்தாக வைக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை அகற்ற முடியாது என்று அமைச்சர் தயாகமகே கூறியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இதனை அவர் கூறினார். மேலும், “குறித்த சிலையினை அகற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின், எனது அமைச்சுப் பதவியினை ராஜிநாமா செய்வேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். அமைச்சர் தயாகமகேயின் இந்தக் கூற்று பாரதூரமானதாகும்.

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, மாணிக்கமடு எனும் தமிழர் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையில், அடாத்தாக புத்தர் சிலையொன்றினைக் கொண்டுவந்து வைத்து விட்டு, “அதை அகற்றினால் எனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்வேன்” என்று, தயாகமகே கூறுவதில் ஒரு துளியளவுகூட நியாயம் கிடையாது. அதேவேளை, நியாயத்தை தம் பக்கம் கொண்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எவரும், தயாகமகேயின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பேச்சுப் பேசவேயில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னொரு புறம், மாயக்கல்லி மலையிலுள்ள புத்தர் சிலையினை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், தனது அமைச்சுப் பதவியினை ராஜிநாமாச் செய்யப் போவதாகக் கூறும் தயாகமகேயின் தைரியம், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு இல்லாமல் போனமை கவலைக்குரியதாகும். அம்பாறை மாவட்டத்தில், பைசால் காசிம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் முறையே சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்களின் பிரதியமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். “எந்தவித நியாயங்களுமின்றி பௌத்தர்கள் எவருமற்ற பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை அரசாங்கம் அகற்றாமல் விட்டால், எங்கள் பிரதியமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்வோம்” என்று, இவர்களால் மட்டும் ஏன் கூற முடியாது என, சமூக வலைத்தளங்களில் மக்கள் கேட்கின்றார்கள்.

இறக்காமம் பகுதியில், பௌத்த வரலாற்றுடன் தொடர்புபட்ட 19 தொல்பொருள் இடங்கள் காணப்படுவதாக மாயக்கல்லி மலையில் சிலை வைத்தவர்கள் கூறுகின்றனர். அதில் ஓர் இடம்தான் மாயக்கல்லி மலை என்கிறார்கள். அதனால்தான் அங்கு சிலை வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அந்த வகையில், மேற்படி 19 இடங்களிலும் தாங்கள் சிலை வைக்க முடியும் என்பதை, சம்பந்தப்பட்டோர் மறைமுகமாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் தயாகமகே மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, வரலாற்றின்படி தீகவாபி விகாரைக்குச் சொந்தமாக 12 ஆயிரம் ஏக்கர் காணிகள் இருந்ததாக தயாகமகே சொல்கிறார். அந்தக் காணிகள் கல்முனை மற்றும் பொத்துவில் பகுதிகளிலும் இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதுதான் இவற்றினைக் கூறினார். இதனூடாக, அவர்களின் அடுத்த இலக்கு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கெனவே, தீகவாபியினை முன்னிறுத்தி, ‘புனித பூமி’ எனும் பெயரால் முஸ்லிம் மக்களின் ஏராளமான காணிகள் அம்பாறை மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேற்படி ஆக்கிரமிப்புத் தொடரும் என்பதற்கான ‘அபாயச் சங்கினை’ அமைச்சர் தயாகமகே ஊதியிருக்கின்றார்.

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டதிலிருந்து இதுவரை, அரசாங்கத்தோடு இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும், காத்திரமான எதிர்வினைகள் எவற்றினையும் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்விவகாரம் தொடர்பில் ஒன்றுமே செய்யவில்லை என்பது, மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த பிரதிநிதிகளின் இலட்சணம் என்ன என்பதை, மக்கள் அறிந்து கொள்வதற்கு, மாயக்கல்லி மலை விவகாரத்தை நல்லதொரு சந்தர்ப்பமாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.

இது இவ்வாறிருக்க, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பேசியதாக ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

அம்பாறை மாவட்டமானது, முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகும். அங்கு மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மூவருமே முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். எனவே, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கே உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள சிலை அகற்றப்படாது விட்டால், அதன் விளைவுகள் மு.காங்கிரஸின் அரசியலை வெகுவாகப் பாதிக்கும்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையொன்றினை உருவாக்கித் தருவேன் என்று, மு.காங்கிரஸின் பொதுக் கூட்டமொன்றில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. பிரதமரின் அந்த வாக்குறுதி, வருடங்கள் கழிந்தும் இன்னும் நிறைவேறவில்லை. ஆனாலும், மாயக்கல்லி மலை விவகாரமானது, அங்குள்ள சிறுபான்மை மக்களின் உணர்வுகளுடன் தொடர்புபட்டது. இந்த விவகாரத்தில் ஏனோதானோ என்றிருக்க முயற்சிப்பது, சம்பந்தப்பட்டவர்களின் அரசியலுக்கு ஆபத்தானது.

இன்னொருபுறம், தயாகமகேயின் சவாலினைப் புறந்தள்ளிவிட்டு, மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை அகற்றுவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பாரா என்கிற கேள்விகளும் இங்கு உள்ளது. தயாகமகே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்ட ஒருவர். அந்தக் கட்சிக்கு நிதியுதவி வழங்குகின்றவர்களில் முக்கியமானவர். தயாகமகேயினுடைய ஹெலிகொப்டரில்தான் தேர்தல் காலங்களில் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் பறந்து திரிந்தனர். தயாகமகேவுக்கு முழு அமைச்சுப் பதவியும், அவரின் மனைவி அனோமாவுக்கு பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளமையை வைத்தே, ஐ.தே.கட்சிக்குள் தயாகமகேயின் ஆளுமை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறானதொரு நிலையில், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அமைச்சுப் பதவியைத் துறப்பேன் என்று தயாகமகே சவால் விட்டுள்ள நிலையில், மலையிலிருந்து சிலையை அகற்றுவதற்கான உத்தரவினை ஐ.தே.கட்சியின் தலைவர் பிரமர் ரணில் விக்கிரமசிங்க வழங்குவாரா என்கிற கேள்வியும் மிக முக்கியமானதாகும். அமைச்சர் தயாகமகேயா அல்லது மு.கா தலைவர் ஹக்கீமா முக்கியம் என்கிற நிலைப்பாடொன்றுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேண்டியிருந்தால், யார் பக்கம் ரணில் சாய்வார் என்பது தெரிந்த அனுமானமாகும்.

எவ்வாறாயினும், நல்லாட்சி என்று மக்களும் ஊடகங்களும் வாயாரப் புகழ்ந்த இந்த ஆட்சியிலும், பேரினவாதப் பேய் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளதையும் அதை அடக்க முடியாமல் – ஆட்சியாளர்கள் வாய் பார்த்துக் கொண்டு நிற்பதையும் அடிக்கடி காண முடிகிறது.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், கிராம சேகவர் ஒருவரை பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் மிக மோசமாக தூசண வார்த்தைகளால் திட்டியிருந்தார். இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. நிறை போதையிலுள்ள ஒரு ‘தெருப் பொறுக்கி’ சண்டையிடும் போது பயன்படுத்தும் சொற்களுக்கு சற்றும் குறைவில்லாத வார்த்தைகளை, சுமண ரத்ன தேரர் அங்கு பயன்படுத்தியிருந்தமையினை வீடியோவில் காணக் கிடைத்தது. பொலிஸார் எதுவும் செய்யவில்லை. தேரரிடம் திட்டு வாங்கிய கிராம சேவகர் ஒரு தமிழர். இந்த இடத்தில் சம்பந்தமில்லாமல் முஸ்லிம்களையும் தேரர் திட்டித் தீர்த்தார். சிறுபான்மை இனத்தவர்கள் மீது பௌத்த மதகுருமார் புரியும் இந்த அட்டகாசங்கள் அபாயகரமாவையாகும். இவை குறித்துத் தேசிய கலந்துரையாடல், சக வாழ்வு மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நேற்று முன்தினம் மத நல்லிணக்கம் தொடர்பில் செயற்படும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த புத்தி ஜீவிகளுக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகளையும் இந்தக் கடிதத்தில் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், முஸ்லிம் சமூகம் மீதான பௌத்த பேரினவாத செயற்பாடுகளையும் தனது கடிதத்தில் அமைச்சர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பௌத்த பிக்குகளின் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை சிங்களவர்கள் மௌமாகப் பார்த்துக் கொண்டிருப்பதனால்தான், இது குறித்துப் பேசுவதற்கு தான் வாய்திறந்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தனது கடிதத்தில் விபரித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தனது கடிதத்தை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கோ, உயர் பதவிகளிலுள்ள ஆட்சியாளர்களுக்கோ எழுதாமல், சிங்கள சமூகத்திலுள்ள புத்தி ஜீவிகளுக்கு எழுதியுள்ளமை இங்கு கவனத்துக்குரியது. இது குறித்து ஆட்சியாளர்களிடம் முறையிடுவதில் பலன் எதுவுமில்லை என்கிற முடிவில், சிங்கள புத்தி ஜீவிகளை அமைச்சர் மனோ கணேசன் நாடியுள்ளாரா என்று யோசிக்கவும் தோன்றுகிறது. அதுவே உண்மையாகவும் இருக்கக் கூடும்.

ஆக, இன நல்லிணக்கத்தை நல்லாட்சியாளர்கள் ஏற்படுத்துவார்கள் என்றும், பௌத்த பேரினவாதப் பேயைப் பிடித்து நல்லாட்சியாளர்கள் கூசாவில் அடைப்பார்கள் எனவும் எதிர்பார்த்த சிறுபான்மை மக்களுக்கு, வழமைபோல் ஏமாற்றம்தான் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பேரினவாதப் பேய் தலை விரித்து ஆடிய போதெல்லாம், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில், கொட்டு மேளம் அடித்து உற்சாகப்படுத்தினார். இப்போது மைத்திரியும், ரணிலும் பேயின் ஆட்டத்தை வாயை மூடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு செயற்பாடுகளுக்குமிடையில் பெரிதாக வித்தியாசங்கள் எவையுமில்லை. பேய் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியுடன் இணையும் திரிஷா?
Next post இந்த எண்ணெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?