என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன்: விஷால் பரபரப்பு பேட்டி…!!
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியதை கண்டித்து நடிகர் விஷால் சென்னை வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதாக, சங்கத்தின் தலைவர், செயலாளர் போன்றோரின் கையெழுத்து இல்லாமல் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. எனக்கு அதிகாரப்பூர்வமாக எந்த கடிதமும் வரவில்லை. என்ன காரணத்துக்காக நீக்கினார்கள் என்றும் தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நல்லது நடக்கவேண்டும். சிறிய பட தயாரிப்பாளர்களும், பெரிய தயாரிப்பாளர்களும் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கருத்துகளை கூறியிருந்தேன்.
சங்கத்தில் போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி நான் சொன்னதில் தவறு இல்லை. கேள்விகேட்க எனக்கு உரிமை இருக்கிறது. திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் அதிருப்தி அளித்தன.
7 புதிய படங்களை பெங்களூருவில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டு வி.சி.டி. எடுத்தனர். அதை தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோன்ற பல பிரச்சினைகள் இருந்ததால், சில கருத்துகளை வெளியிட்டேன்.
எனக்கு சோறு போட்ட தெய்வம் சினிமா. அந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தேன். அது தவறு அல்ல. கேள்வி கேட்பது என் உரிமை. நடிகர் சங்கத்திலும் இதுபோன்று கேள்வி கேட்டோம். பதில் சொல்ல மறுத்ததால் தேர்தலில் நின்று பொறுப்புக்கு வந்துள்ளோம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று நான் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பி இருந்தனர். போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று சொன்னது தவறு அல்ல. அது ஒரு உணவு தான்.
இதன் தொடர்ச்சியாகவே என்னை நீக்கி இருப்பதாக கருதுகிறேன். இதை எனது வக்கீல்களுடன் கலந்து பேசி சட்டப்படி சந்திப்பேன். இந்த நீக்கம் எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை, ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இதுபோன்று யாரையும் நீக்கியதாக முன் உதாரணங்கள் இல்லை. அவசரப்பட்டு யாரையும் நீக்க முடியாது. நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக கூறப்பட்டது. நானும் அதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தில் சிக்கினேன் என்றும் கூறி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த நீக்க நடவடிக்கை வந்துள்ளதா? என்று தெரியவில்லை.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் எங்கள் அணி போட்டியிடும். அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். இளைஞர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக அந்த தேர்தலில் போட்டியிடுவோம்.
தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் தேர்தலை முறையாக நடத்தவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். சினிமாவில் நல்லது நடக்க தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டே இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating