வடக்கு, தெற்கு, கிழக்கு எதுவானாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான்…!! கட்டுரை
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த வாரம் தமிழ் அரசியல்வாதிகளைச் சீண்டும் வகையில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றியிருக்கிறார். அவர் கூறுவது நடுநிலையானது அல்ல; என்ற போதிலும் முற்றிலும் பிழையானதும் அல்ல.
கடந்த சனிக்கிழமை ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அவரது உரையின்படி, வடபகுதியில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பாவித்து வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது, “வடக்கில் பெரும்பான்மையாக வாழும் சாதாரண ஏழை மக்களைவாட்டி வதைக்கும் பல பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றைத் தீர்ப்பதைப் பற்றி ஆர்வம் காட்டாது ஊடகங்களும் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில அரசியல்வாதிகளும் உணர்வுகளைத் தூண்டக் கூடியதும் குழப்பமானதும் சில வேளைகளில் திரிபுபடுத்தப்பட்டதுமான செய்திகளின் பின்னால் அலைகிறார்கள்.
கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அவ்வாறான செய்திகளில் பெரும்பாலானவை வாசகர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் பாவனையாளர்களையும் தவறாக வழிநடத்தக்கூடிய திரிபுபடுத்தப்பட்ட செய்திகளாகும். இவ்வாறான செய்திகள் நாட்டைச் சீரழிக்கக் காத்திருக்கும் வடக்கிலும் தெற்கிலும் வாழும் தீவிரவாதிகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் தீனி போடுகின்றன. சகித்துக்கொள்ள முடியாதது என்னவென்றால், இவ்வாறான துவேசத்தைத் தூண்டும் செய்திகளால் அரசியல்வாதிகள் வாழ்க்கை நடத்துவதேயாகும்.
பொலிஸாரும் படையினரும் சம்பந்தப்படும் சகல விடயங்களுக்கும் அரசியல் சாயம் பூசுவது பொருத்தமற்ற செயலாகும். மோதல்கள் எங்கும் இடம்பெறுகின்றன; பாதாள உலகக் கும்பல்களோடும் படையினருடனும் ஏற்படும் மோதல்களின் போது பலர் கொல்லப்படுகின்றனர். ஆனால், அச்சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையிலேயே செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், இரண்டு பட்டதாரி மாணவர்கள் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்துக் கொல்லப்பட்டமை மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வாள் வெட்டுக்கு இலக்காகியமை ஆகியன வடக்கிலும் தெற்கிலும் மக்களைத் தூண்டும் வகையிலேயே பிரசுரமாகியிருந்தன.
சில வருடங்களுக்கு முன்னர், பிரபல பாடகர் நிஹால் சில்வா வெள்ளவத்தையில் பொலிஸ் பாதுகாப்புக் கடவையொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாமல் சென்றபோது சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அப்போது எவரும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. நான் பொலிஸாரை நிரபராதிகள் என்று கூற வரவில்லை. ஆனால், நாம் பிரச்சினைகளை அணுகும் முறையிலும் தவறு இருக்கிறது” என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.
அவர் வடக்கிலும் தெற்கிலும் எனச் சில சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும், வட மாகாண ஆளுநர் என்ற வகையில், வடபகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களை மையமாக வைத்தே, இக்கருத்துகளை முன்வைக்கிறார் என்பது தெளிவானதாகும். அதேவேளை, அவர் வடபகுதி அரசியல்வாதிகளையே இங்கு பிரதானமாகக் குறைகூறுகிறார் என்பதும் ஊகிக்கக் கூடியதாகும்.
ஆனால், அதற்காக அவர் கூறும் அனைத்தையும் நிராகரிக்க முடியுமா? வட பகுதியில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் தகவல்களைப் பாவித்து வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள் என அவர் கூறுகிறார்.
இது சிலருக்குத்தான் பொருந்தும். வடபகுதியில் மீள்குடியேற்றமும் அதனோடு சம்பந்தப்பட்ட வீட்டு வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், தொழில் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் பிரச்சினைகள். முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் வாழ்வாதார மற்றும் மானசீகப் பிரச்சினைகள், போரினால் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் போன்றவையே மக்களின் உண்மையான பிரச்சினைகளாகவும் உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டியதுமான பிரச்சினைகளாகவும் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் ஆயிரக் கணக்கில் இராணுவத்தினரையும் ஜெனிவாவுக்கு இழுத்துச் சென்று, வடக்கையும் கிழக்கையும் இணைத்து, அரசியல் தீர்வு கண்டதன் பின்னர்தான், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என எந்தவொரு அரசியல்வாதியும் கூறுவதாக இருந்தால் அது சரியான கொள்கையாகாது. ஆனால், வடக்கில் சில அரசியல்வாதிகள் அவ்வாறுதான் சிந்திக்கிறார்களோ என்று எண்ணத் தேன்றுகிறது.
மனித உரிமைப் பிரச்சினைகளோ, அரசியல் தீர்வோ அவசியமற்றவை என்றோ அல்லது அவற்றுக்கு அவசரப்படுவது தேவையற்றது என்றோ கூற வரவில்லை. தமிழ் ஊடகங்களைப் பார்த்தால், வடபகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி அரசியல்வாதிகள் ஆர்வம்கொண்டுள்ளார்களா என்பது சந்தேகமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் விடயங்களை விட்டுவிட்டு, வடமாகாண சபை அன்றாடப் பிரச்சினைகளைக் கையாளலாம். ஆனால், மாகாண சபை பல சந்தர்ப்பங்களில் அரசியல் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு இருப்பதைக் காணலாம்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தபோது அவர்களும் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே முதலிடம் வழங்கினார்கள். 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து, முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ‘அம்பசடர் ஜொமடின்’ ஹோட்டலில் ஆரம்பமானபோது, “அரசியல் விடயங்களை ஆராய வேண்டும்” என அரசாங்கத் தரப்பில் இருந்த அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போது “அவ்வாறாயின் வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி பேசுவோமா” எனப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவிருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் கேட்டிருந்தார்.
அத்தோடு, பேச்சுவார்த்தை அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான இடைக்கால நிர்வாகத்தைப் பற்றியதாகவும் அமைந்தது. அதன்படி அவசரமாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைத் தேவைகளின் மதிப்பீடு (Needs Assessment) என்ற பெயரிலான கருத்திட்டங்களின் பட்டியலொன்று இருசாராரினாலும் தயாரிக்கப்பட்டது.
இடைக்கால நிர்வாகத்தையும் அவசரமாக நிறுவ முடியாது என்பதனால், அந்தத் தேவைகளின் மதிப்பீடு என்ற அறிக்கையில் இருந்த திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த இருசாராரினதும் பங்களிப்புடன் ‘உடனடி மனிதாபிமான மறுவாழ்வுத் தேவைகளுக்கான உப குழு’ அல்லது ‘சிரான்’ என்றதோர் அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் கருத்திட்டங்களை அமுலாக்க, வடக்கு, கிழக்கு மறுவாழ்வு நிதியம் (NERF) ஒன்றை ஸ்தாபிப்பதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைவைத் தயாரிக்கும் பணி உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், பின்னர் நிலைமை மாறியதால் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. ஆயினும், நீண்ட காலம் எடுக்கும் அரசியல் பிரச்சினைகளை விடத் தற்போதைய நிலையில் அன்றாடப் பிரச்சினைகள் எந்தளவு முக்கியமானவை என்பதை இது காட்டுகிறது. ஆளுநர் குரே, இதைத்தான் கூறுகிறார் என்றால் அது பிழையான கருத்து அல்ல.
எனினும், குரே கூறுவது தென்பகுதி அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுக்கும் பொருந்துகிறது. தெற்கில் உள்ள அரசியல்வாதிகளும் இதனைத்தான் செய்கிறார்கள். தெற்கில் இன்னமும் வாகனங்களையே காணாத ‘மீமுரே’ போன்ற கிராமங்கள் இருக்கின்றன. காலையில் மாணவர்கள் தமது பாடசாலைச் சீருடைகளை பையில் போட்டுக் கொண்டு சென்று, ஆற்றில் இறங்கி, அதனைக் கடந்து விட்டுச் சீருடைகளை அணிந்து கொண்டு பாடசாலைக்குச் செல்லும் கிராமங்களும் இருப்பதாக அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் மூலம் தெரியவந்தது. ‘புஞ்சிலோகாந்தய’ என்ற பிரதேசத்தில் மாணவர்கள் நாளாந்தம் 17 மைல்களைக் கடந்து பாடசாலைக்குச் சென்று வருவதாக கடந்த வாரம் மற்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டது. ஆனால், தென்பகுதி அரசியல்வாதிகள் இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, என்னென்னவெல்லாம் செய்கிறார்கள்? ஒரு காலத்தில்‘ ஹலால்’ பிரச்சினையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். பின்னர் மாட்டிறைச்சியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். வடக்கில் போர்க் காலத்தில் புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்கள் அல்லது சீருடைகள் கண்டு பிடிக்கப்பட்டால், அந்தச் சம்பவத்தைப் பிடித்துக் கொண்டு “புலி வருகிறது” என்று கூச்சலிடுவார்கள். ஆனந்தி சசிதரனோ அல்லது சிவாஜிலிங்கமோ வாய் திறந்தால், தென்பகுதியில் சில அரசியல்வாதிகளுக்கு ஆறு மாதகால வாழ்வாதாரத்துக்கு அது போதுமானதாகும்.
தெற்கிலும் நடக்கக் கூடிய சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றால் அவற்றுக்கு இனத்துவ அரசியல் சாயம் பூசப்படுவதாக குரே கூறுகிறார். அவர் வடக்கை மனதில் வைத்துத்தான் அதனைக் கூறுகிறார். ஆனால், அதே சம்பவங்களுக்குத் தெற்கிலும் இனத்துவ சாயம் பூசப்படுகிறது. ஆளுநர் அதற்காக சுட்டிக் காட்டிய உதாரணத்தையே நாமும் எடுத்துக் காட்டலாம்.
யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவர் சோதனைச் சாவடி அருகே கொல்லப்பட்ட போது, அதனைத் தமிழர்களை சிங்களவர்கள் சுட்டார்கள் என்ற கண்ணோட்டத்தில் வடக்கில் சிலர் பார்த்தமை உண்மைதான். ஆனால், தெற்கில் பலர் அதனை நியாயப்படுத்த முயற்சித்தமையும் அந்த வாரத்தின் சிங்களப் பத்திரிகைகளை வாசித்தால் காணமுடிகிறது. பொலிஸ் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றால், அவர்களைச் சுடத்தான் வேண்டுமா என ‘டெய்லி மிரர்’ மற்றும் ‘ராவய’ பத்திரிகைகள் தவிர, தெற்கில் எந்தவொரு பத்திரிகையும் கேள்வி எழுப்பவில்லை.
மாணவர்கள் கொல்லப்பட்ட போது, அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம், சகல பல்கலைக்கழகங்களிலும் சம்பவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தமை இங்கு மறந்து விடக்கூடாது. ஆனால், தெற்கே அரசியல் கட்சிகள் அதனைக் கண்டும் காணாததைப் போல் இருந்து விட்டன. சில கட்சிகள் அதனை நியாயப்படுத்தின.
அதேவேளை, அந்தச் சம்பவத்தோடு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வாள் வெட்டுக்கு இலக்கான போது, அதனைத் தமிழர்கள் சிங்களவர்களை வெட்டியதாக சித்திரிக்கத் தெற்கிலுள்ள சில அரசில்வாதிகளும் ஊடகங்களும் முயற்சி எடுத்தமையும் மறந்து விடக் கூடியதல்ல. வடபகுதியில் பொலிஸாருக்குப் பாதுகாப்பு இல்லையா என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிருந்தார். இந்த வருடத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் தெற்கில் பல இடங்களில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் போதும் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது கூட, பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போன்றதோர் மோதல், வட பகுதியில் இடம்பெற்று இருந்தால், தென்பகுதி அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அதனை எவ்வாறு சித்திரித்திருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். எனவே, வடபகுதியில் ஏற்படும் சம்பவங்களுக்கு இனத்துவ மற்றும் அரசியல் சாயம் பூசப்படுவது தொடர்பாக வடக்கில் உள்ளவர்களை மட்டும் குறைகூற முடியாது. அதேவேளை, தென்பகுதி அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் காட்டி, வடபகுதியில் இடம்பெறும் இது போன்ற சம்பவங்களையும் நியாயப்படுத்தவும் முடியாது.
பொதுவாகப் பார்ப்போமாயின் இலங்கையில் அரசியல்வாதிகளுக்கோ ஊடகங்களுக்கோ பரந்துபட்ட கண்ணோட்டம் இருப்பதாகக் கூற முடியாது. அந்தக் கண்ணோட்டம் ஒன்றில், அரசியல் ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ குறுகித்தான் இருக்கிறது. 1989-90 ஆம் ஆண்டுகளில் தென்பகுதியில் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமாகும். ஆனால், வடபகுதி அரசியல்வாதிகள் அதைப்பற்றி எந்தளவு அக்கறை கொண்டார்கள் என்பது கேள்விக் குறியே.
அதேபோல்த்தான் வடபகுதி அவலங்களைத் தென்பகுதி அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பார்த்தன. 2009 ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி, இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு சுருங்கிவிட்டதாக இராணுவம் அறிவித்தது. அது சரியென்றால், அந்தச் சிறிய நிலப்பரப்பில் பல இலட்சம் மக்கள் அகப்பட்டு நாலாபக்கத்திலிருந்தும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெறும்போது, நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதைத் தென்பகுதியில் அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ சிந்தித்ததாக அப்போது நாம் காணவில்லை.
தென்பகுதியில் இளைஞர்கள் கொல்லப்பட்டு, அவர்களுக்காக நீதி கேட்டு மஹிந்த ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் 1990 ஆம் ஆண்டு ஜெனிவா சென்றார்கள். அப்போது, தமிழ் அரசியல்வாதிகள் அந்தப் பிரச்சினையைக் காணத் தவறிவிட்டனர். பின்னர், அன்று ஜெனிவா சென்றவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, அதேபோல் வடக்கில் இளைஞர்கள் கொல்லப்பட்டு அவர்களுக்காக நீதி கேட்டு, வடபகுதியில் உள்ளவர்கள் ஜெனிவா சென்றபோது முன்னர் ஜெனிவா சென்றவர்கள் பின்னர் சென்றவர்களைத் “துரோகிகள்” என்றார்கள்.
தமது கிளர்ச்சியின்போது, ஆயிரக் கணக்கில் தமது உறுப்பினர்களை இழந்த மக்கள் விடுதலை முன்னணியும் வடபகுதி அவலங்களின்போது தாம் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என இப்போதுதான் சுய விமர்சனம் செய்கிறது.இப்போதாவது சுயவிமர்சனம் செய்வதையிட்டு அவர்களைப் பாராட்ட வேண்டும்.
ஆனால், பிரச்சினைகளை இனத்துவக் கண்கொண்டு பார்ப்பதில் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான். ஆயினும், இந்தக் குழப்பத்தால் அரசியல்வாதிகளைப் போல் ஊடகவியலாளர்கள் இலாபமடைய முடியாது. எனவே, ஊடகங்களினால் மட்டுமே இந்த நிலைமைக்கு எதிரான மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதுபோன்ற பிரச்சினைகளின் போது மனமாற்றம் அவர்களிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
Average Rating