கபாலி படத்துக்கு எந்த அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் அளித்தீர்கள்?: தணிக்கை குழுவிடம் எஸ்.வி.சேகர் கேள்வி…!!
எஸ்.வி.சேகர் நடிப்பில் விசு இயக்கிய படம் ‘மணல் கயிறு’. இப்படம் தற்போது எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர் நடிக்க ‘மணல் கயிறு’ இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், சமீபத்தில் இப்படத்தை எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்ற முறையில் எஸ்.வி.சேகர் தணிக்கை குழுவிற்கு திரையிட்டு காண்பித்தார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் அளிப்பதாக அறிவித்துள்ளனர். இது எஸ்.வி.சேகருக்கு மிகுந்த அதிருப்தியை அளித்துள்ளது. இதுகுறித்து தணிக்கை குழுவிடம் முறையிட்ட எஸ்.வி.சேகரிடம், தணிக்கை குழுவினர் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிகர் (Figure) என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதாகவும், ஒரு காட்சியில் ஆணுறையை (Condom) காட்டியிருப்பதாலும் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர், பிகர் என்பது கெட்டவார்த்தை என்று எந்த அகராதியில் இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதேபோல், ஆணுறையை பயன்படுத்தச் சொல்லி தற்போது அரசாங்கமே வலியுறுத்துகிறது. அப்படியிருக்கையில் இதற்கு ஏன் ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்தது எந்தளவுக்கு நியாயம் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு தணிக்கை குழுவினர், அப்படியென்றால், அந்த ஆணுறையின் பெயரையாவது நீக்குங்கள் என்று தணிக்கை குழுவினரிடம் கேட்டுள்ளார். பதிலுக்கு எஸ்.வி.சேகர் அதில் என்ன பெயர் இருக்கிறது? என்று தணிக்கை குழுவிடம் கேட்டிருக்கிறார். அது என்னவென்று தெரியவில்லை என்று அவர்கள் பதிலுரைத்துள்ளனர்.
உடனே, எஸ்.வி.சேகர் பெயரே சரியாக தெரியாத ஆணுறையின் பெயரை ஏன் நீக்கவேண்டும் என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். மேலும், தணிக்கை குழுவினர் ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்ததற்காக ஒவ்வொரு காரணங்களுக்கும் எஸ்.வி.சேகர் சட்டரீதியான, நியாயமான பதில்களை முன் வைத்துள்ளார்.
இறுதியாக, எஸ்.வி.சேகர் தணிக்கை குழுவினரிடம் கூறும்போது, நான் இப்படத்தை மறு தணிக்கை செய்யப்போவதில்லை. நான் உயர்நீதிமன்றம் சென்று இதற்கான நியாயம் கேட்கப் போகிறேன். ‘கபாலி’ படத்திற்கு எந்த அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுத்தீர்கள் என்பது பற்றி கேள்வி கேட்கப் போகிறேன்.
நான் இதுவரை 95 படத்தில் நடித்திருக்கிறேன். 2 படங்களை தயாரித்திருக்கிறேன். 1 படம் இயக்கியிருக்கிறேன். எல்லா படங்களும் எந்த கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் வாங்கியிருக்கிறது. ‘மணல் கயிறு-2’ படமும் யு சான்றிதழ் வாங்கக்கூடிய படம்தான். நான் யாரையும் மிரட்டி படம் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் ரொம்பவும் வேதனைப்படுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சென்சாரில் சென்று சான்றிதழ் வாங்க செல்லாதீர்கள். அங்கே குற்றவாளி போல் நீங்கள் உட்காரதீர்கள் என்று தயாரிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating