தேவை கொஞ்சம் சொரணை…!! கட்டுரை

Read Time:17 Minute, 33 Second

article_1478580240-xcஇடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்பது தமிழில் உள்ள முதுமொழி. ஆனால், மாயக்கல்லி மலையில் – மடத்தைக் கட்டுவதற்காக இடம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அடாத்தாக, அந்த இடத்தைப் பிடிப்பதற்கு, அவர்கள் ‘கடவுளை’ கையோடு அழைத்து வந்திருந்தார்கள். மாயக்கல்லி மலையில், வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் ‘கடவுளை’ இருத்தி விட்டு, வந்தவர்கள் சென்று விட்டார்கள். அனைத்தையும் துறந்து விட்டு வந்த தன்னை, அபகரிக்கப்பட்ட இடத்தின் ‘காவல் தெய்வமாக’, இருத்தி விட்டுச் சென்றமை பற்றி, ‘கடவுள்’ என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை.

இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் ஓரத்தில் அமைந்திருக்கிறது மாயக்கல்லி மலை. இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். மாணிக்கமடு – தமிழர் கிராமம்.

கடந்த 29ஆம் திகதியன்று காலை, மாணிக்கமடு மக்களை பதற்றம் தொற்றிக்கொண்டது. தங்கள் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையடிவாரத்தில் புத்தர் சிலையுடன் ஒரு பெருங்கூட்டம் வந்து நின்றதைக் கண்டமையினால், மாணிக்கமடு மக்கள் கலவரமடைந்தனர். பௌத்தர்கள் யாருமற்ற பகுதிக்குப் புத்தரை ஏன் கொண்டு வந்தார்கள் என, மக்கள் குழம்பிப் போனார்கள்.

புத்தர் சிலையுடன் வந்திருந்த பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் அம்பாறை நகரிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் கல்முனை விகாராதிபதியும் இணைந்திருந்தார். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை நிறுவுவதற்காகவே அவர்கள் வந்திருந்தனர்.

புத்தர் சிலை வைக்க வந்தவர்களுடன் மாணிக்கமடு மக்கள் வாதிட்டார்கள். பௌத்தர்கள் யாருமற்ற பகுதியில் புத்தர் சிலையினை நிறுவ வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால், வந்திருந்தவர்கள், “இது பௌத்த நாடு; எங்கு வேண்டுமானாலும் எங்களால் சிலை வைக்க முடியும்” என்று கூறிவிட்டு, மாயக்கல்லி மலை உச்சியில் புத்தர் சிலையை வைத்து விட்டுச் சென்றனர்.

‘தனித்து விடப்பட்ட புத்தர்’ எனும் தலைப்பில், இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஒரு கட்டுரையினை ‘தமிழ் மிரரில்’ எழுதியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள மாயக்கல்லி மலை, தொல்பொருளியல் திணைக்களத்துக்குச் சொந்தமானதெனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதியாகும். அந்த இடத்தினைச் சுற்றி, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சொந்தமான காணிகள் உள்ளன.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம், அந்த நிமிடமே செய்தியாகப் பரவியது. மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அரசியல் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு, விவரங்களைக் கூறினார்கள். ஊடகங்களும் அன்றைய தினம், இது குறித்துச் செய்தியை வெளியிட்டன.

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை (02), இவ்விவகாரம் தொடர்பில், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பள்ளிவாசல் மற்றும் கோயில் நிருவாகிகள், சிலை வைப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர். அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் இதன்போது வருகை தந்திருந்தனர்.

சிலை வைப்பு விவகாரம் குறித்து இங்கு பேசப்பட்டது. முஸ்லிம் மற்றும் தமிழ் தரப்பினர், மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். ஆனாலும், அங்கிருந்த பௌத்த பிக்குமார், சிலை வைக்கப்பட்டமையினை நியாயப்படுத்தினார்கள். இறக்காமம் பிரதேசத்தில் பௌத்தர்களின் புராதன வரலாற்றினை நிரூபிக்கும் வகையிலான 19 தொல்லியல் இடங்கள் உள்ளதாகவும், அவ்வாறானதொரு இடத்தில்தான், தற்போது தாங்கள் சிலை வைத்திருப்பதாகவும் பிக்குகள் கூறினர். இதனால், அந்தக் கூட்டத்தில் குறித்த விவகாரம் தொடர்பில் சுமூமான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஆயினும், இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தீர்மானத்துக்கு வரும்பொருட்டு, குழுவொன்று அமைக்கப்பட்டது. முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக 15 பேர், அந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டனர்.

மறுநாள் வியாழக்கிழமை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து, அங்கு உரத்த குரலில் பேச்சுக்கள் எழுந்தன. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கருத்துத் தெரிவித்தார். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையினை நியாயப்படுத்துவதாக அவருடைய கருத்துக்கள் இருந்தன. “அவர்கள் எந்த இடத்திலும் சிலை வைக்க முடியும்; அதற்காக அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை; வைத்த சிலையை எந்த ராசாவைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அகற்ற முடியாது; அவர்கள் சிலை வைக்கும் போது, நாம் என்னதான் செய்ய முடியும்” என்று மன்சூர் கூறியபோது, அங்கிருந்தவர்களில் அதிகமானோர் ஆத்திரப்பட்டார்கள்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்துகொண்டு, முஸ்லிம் பிரதேசமொன்றில், அதுவும் பௌத்தர்களே இல்லாத ஓர் இடத்தில், புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையினை, மன்சூர் நியாயப்படுத்திப் பேசியமையானது, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. அது வெட்கக்கேடானதொரு விடயமாகும் எனக் கருதினார்கள்.

இவ்வாறான விவகாரங்களில் எப்படிச் செயற்படுவது என்பது பற்றி, தமிழ் பிரதிநிதிகளிடம் இவர்கள் பாடம் கற்க வேண்டும். சிலை வைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் நியாயப்படுத்திப் பேசியமையினால் ஆத்திரமடைந்த பொதுமகனொருவர் எழுந்து, “நடந்த விடயத்தை நியாயப்படுத்தக் கூடாது” என்று சத்தமிட்டுக் கூறியவாறு, மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமையின் பின்னணி மற்றும் அதன் பின்னர் நடக்கலாமென அஞ்சப்படும் விடயங்கள் குறித்து விவரித்தார்.

இதேவேளை, சிலை வைப்பினை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய விவரங்கள் ஊடகங்களில் வெளியாகின. இணையத்தளம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் , அங்கு பேசிய வீடியோவினை வெளியிட்டது. இதனையடுத்து, மன்சூருக்கு எதிராக மிகக் கடுமையான கண்டனங்கள் பல பக்கங்களிலிருந்தும் வெளியிடப்பட்டன. சமூக வலைத்தளங்களில் மன்சூர் கழுவி ஊற்றப்பட்டார். இதேவேளை, அரசாங்க தொலைக்காட்சியொன்றில் வாராந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும், சிலை வைப்பினை நியாயப்படுத்தி மன்சூர் பேசிய தகவலைக் கூறியிருந்தார்.

சிலை வைப்புத் தொடர்பில், தான் வெளியிட்ட கருத்துக்கள் இப்படி விஷ்வரூபம் எடுத்துவந்து, தன்னையே திருப்பித் தாக்கும் என நினைத்தும் பார்த்திராத நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர், நிலைமையினைக் கண்டு மிரண்டு போனார். இந்தக் கலவரத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவசர அவசரமாக ஒரு மறுப்பினைத் தன்னுடைய குரலில் பதிந்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒலி வடிவில் வெளியிட்டார். “இறக்காமம் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அப்படி நான் பேசவேயில்லை” என்று, அந்த ஒலிப்பதிவில் அழுத்திச் சொன்னார். ஆனால், அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்பதை, அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில், அவருடைய மறுப்பினைக் கேட்டவர்கள் பதிவுசெய்துள்ள கருத்துக்களைப் படித்தபோது புரிந்து கொள்ள முடிந்தது.

மேற்படி, இறக்காமம் பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இன்னுமொரு விடயமும் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேச முன்னாள் தவிசாளர் ஜபீர் என்பவரும் கலந்துகொண்டார். சிலை வைப்பு விவகாரம் பேசப்பட்டபோது எழுந்த அவர், “இறக்காமம் பிரதேசத்தில் 19 இடங்களில் தொல்லியல் இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகப் பிக்குமார் கூறுகின்றனர். அதில் ஓர் இடம்தான் மாயக்கல்லி மலை என்றும், அதனால்தான் அங்கு புத்தர் சிலையினைக் கொண்டு வந்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால், இவ்வாறே 19 இடங்களிலும் சிலையினைக்கொண்டு வந்து வைத்தால் என்ன செய்வது” என்று, இறக்காமம் பிரதேச முன்னாள் தவிசாளர் ஜபீர் கேட்டார். உடனடியாக ஜபீரை நோக்கித் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர், “‘ஒன்றும் செய்ய முடியாது… ஒன்னும் செய்ய முடியாது…” என்று சத்தமாகக் கூறினார்.

இப்படி, வாதப் பிரதிவாதங்களுடன் இறக்காமம் பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்து முடிந்த மறுநாள் வெள்ளிக்கிழமை, பௌத்த பிக்குமார் சிலர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீரைச் சந்தித்தார்கள். அவர்கள்தான் மாயக்கல்லி மலையில் சிலை வைத்தவர்கள். “மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள தீகவாபி பௌத்த விகாரை பௌத்தர்களுக்கு மிக முக்கியமானது.

தீகவாபிக்கு தூர இடங்களிலிருந்து வரும் யாத்திரிகர்கள், மாயக்கல்லி மலையில் இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, அங்கு புத்தர் சிலையொன்றினை நிர்மாணித்துள்ளோம். அந்தவகையில், மலையில் இளைப்பாறும் யாத்திரிகர்களின் வசதிக்காக, அங்கு மடம் போன்று ஒரு கட்டடத்தினை நாங்கள் நிர்மாணிக்க வேண்டும். அதற்கு அனுமதி தாருங்கள்” என்று, இறக்காமம் பிரதேச செயலாளரிடம் வந்திருந்த பௌத்த பிக்குகள் கேட்டனர். அதுவும், அனுமதி உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். இதன்போது, பதிலளித்த பிரதேச செயலாளர், “நீங்கள் கேட்பது போல் உடனடியாக அனுமதி வழங்க முடியாது. முதலில் உங்கள் கோரிக்கையினை எழுத்தில் எனக்கு வழங்குங்கள். அதனைப் பரிசீலித்த பின்னர்தான், அது குறித்து நான் முடிவு செய்வேன்” என்று கூறினார். அத்துடன் வந்தவர்கள் சென்று விட்டனர்.

முதலில் சிலை வந்தது; பிறகு மடம் கட்டுவதற்கு அனுமதி கேட்கிறார்கள். அதன் பிறகு விகாரை; பின்னர் அதனைப் பராமரிக்கும் பௌத்த பிக்குவுக்கான கட்டடங்கள்; அதன் பிறகு விகாரையைச் சுற்றி சில குடியிருப்புக்கள்; இறுதியில் ஒரு சிங்களக் கிராமம் வந்து விடுமோ என்று, அந்தப் பகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்வது, எவ்வளவு நியமானது என்பதை, பிரதேச செயலாளரிடம் வந்து, பிக்குகள் மடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.

முன்னைய ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு பேரினவாதிகள் என்ன அநியாயங்களையெல்லாம் இழைத்தார்களோ, இந்த ஆட்சியிலும் அவை தொடர்கின்றன. ஆனால், நல்லாட்சி செய்பவர்களாகக் கூறிக்கொள்பவர்கள் – அவை குறித்து அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பிரதேசத்தில், இப்படி அடாத்தாகப் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், முஸ்லிம் அரசியல்வாதிகள் சொரணையற்றிருப்பது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் அரசியல்வாதிகளை நினைத்துப் பார்க்கையில் ஏமாற்றமாக இருக்கிறது.

பலஸ்தீனத்திலுள்ள முஸ்லிம்களின் நிலங்கள், இஸ் ரேலிய ஆக்கிமிப்பாளர்களால் அபகரிக்கப்படுகின்றன எனச் சொல்லி, அறிக்கைகள் வழியாகக் கர்ஜித்தவர்களும், ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களும், தங்கள் காலடியிலுள்ள நிலம் கண்ணெதிரே பறிபோய்க் கொண்டிருப்பதைக் கண்டும் காணாமல், குரலற்றிருப்பது வேடிக்கையானதே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடக் கடவுளே….இப்படியெல்லாமா நடந்துப்பாங்க நம்ம உலகத்திலே…!! வீடியோ
Next post சரணடைவும், சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி, மகா கொடுமையானது”.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)