இனி அவனே…!!
நடிகை பவானி ரெட்டி
இயக்குனர் சம்பத் ராஜ்
இசை சூர்யா எஸ் எஸ்
ஓளிப்பதிவு சேகர்
நாயகன் சந்தோஸும் ஆஷ்லீலாவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதன்படி, இருவரும் கிளம்பி ஊட்டிக்கு வருகிறார்கள். ஊட்டியில் இவர்களுக்கு பவானி ரெட்டி அடைக்கலம் கொடுக்கிறாள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் முடிவெடுக்கிறாள்.
பவானி ரெட்டி அந்த ஊரில் மிகப்பெரிய புள்ளியின் தங்கை. ஊட்டியில் தனிமையில் வசித்து வரும் அவளது வீட்டிலேயே காதலர்கள் தங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஜாதகம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் இப்போதைக்கு திருமணம் செய்ய யோகம் இல்லை என்றும் ஒரு வாரம் கழித்து திருமணம் செய்துவைக்கும்படியும் ஜோசியர் சொல்லவே, திருமணம் தள்ளிப் போகிறது.
இந்நிலையில், நாயகன் பவானி ரெட்டியிடம் விளையாட்டாக சிரித்து பேசுகிறான். அவளது அழகையும் வர்ணிக்கிறான். ஒருகட்டத்தில், பவானி ரெட்டிக்கு சந்தோஸ் மீது காதல் பிறக்கிறது. அவனை எப்படியாவது அடைய துடிக்கிறாள். அதற்காக சந்தோஸ் – ஆஷ்லீலாவின் காதலை பிரிக்க நினைக்கிறாள்.
இறுதியில், அவர்களின் காதலை பிரித்து பவானி ரெட்டி நாயகனை கரம் பிடித்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சந்தோஸ் ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். நிராயுதம் படத்தின் ஹீரோவாக நடித்த இவர், இப்படத்தில் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு சேட்டைகள் செய்வது, பவானி ரெட்டியிடம் சில்மிஷம் செய்வது என ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆஷ்லீலா கதாநாயகனுடன் ஒட்டிக் கொண்டே வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாவிட்டாலும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். பவானி ரெட்டிக்கு இப்படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நல்லவராகவும் பின்னர் வில்லியாகவும் இவரது கதாபாத்திரத்தின் பளு அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் திருநங்கையாக நடித்திருப்பவரும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. பெற்றோரை விட்டு ஊரைவிட்டு ஓடிச் செல்லும் காதலர்கள் படும் அவஸ்தைகளை இந்த படத்தில் வேறு கோணத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சம்பத்ராஜ். கதைப்படி படம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. மேலும், திருநங்கைகளை மரியாதைப்படுத்தும் வகையில் இப்படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.
சூர்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சேகரின் ஒளிப்பதிவில் ஊட்டியை அழகாக காண்பித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே நகர்வதால் இவரது கேமராவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது.
மொத்ததில் ‘இனி அவனே’ காதல் போட்டி.
Average Rating