ராஜீவ் காந்தியை துப்பாக்கி முனையால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்ட இலங்கை கடற்படை வீரர்கள்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -93) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

Read Time:24 Minute, 34 Second

timthumb•ராஜீவ்காந்திக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதும், கடற்படைக்குள் இருந்த கீழ்மட்ட வீரர்கள் சிலருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அணிவகுப்பு மரியாதையில் வைத்து ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டால் என்ன?’ அதுதான் யோசனை.

• பிரபாகரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக விடைபெறும் போது திபிந்தர்சிங்கிடம் பிரபாகரன் கூறியது இது: “இனிமேல் ஒருபோதும் ‘றோ’வையோ, இந்திய வெளியுறவு அமைச்சையோ நான் நம்பப்போவதில்லை. அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!”

• இந்தியாவில் சென்னையில் இருந்து இந்தியப் படைகள் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. தாம் எதிர்நோக்கப்போகும் மாபெரும் கெரில்லா போர் பற்றி அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

தொடர்ந்து…

காமினி திசநாயக்கா

காமினியின் பங்கு

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது என்ற செய்தி தென்னிலங்கையில் காட்டுத் தீயாகப் பரவியது. அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் இந்திய-இலங்கை தமிழர்களுக்கு சார்பான ஒப்பந்தம் என்று பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அமைச்சரவையில் இருந்தவர்களில் சிலருக்கு ஒப்பந்தம் தொடர்பாகத் தெளிவு இருக்கவில்லை.

பிரதமர் பிரேமதாசாவும் அவது ஆதரவாளர்களும் ஒப்பந்தம் தொடர்பாக ஜே.ஆர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தனர்.

அமைச்சரவையில் இருந்தவர்களில் காமினி திசநாயக்கா இந்தியாவின் நண்பர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்குவதில் காமினி திசநாயக்கா வகித்த பங்கினை குறிப்பிட்டாக வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக இருந்தவர் காமினி திசநாயக்க. இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான ஒரு இடத்தைப் பெறுவதற்கு காமினி திசநாயக்கவும் ஒரு முக்கியமான காரணம்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரான காமினிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைத் தலைவராக அப்போதிருந்த என்.கே.பி. சால்வேக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. சாலவே இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கும் நெருக்கமானவர்.

சால்வேக்கும் ‘இந்து’ பத்திரிகை ஆசிரியர் என். ராமுக்கும் இடையே நட்பு இருந்தது. ராம் இந்திய அரசியல் பிரமுகர் மத்தியில் செல்வாக்குள்ளவர்.

என். ராம் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு ஆதரவாக அப்போது செயற்பட்டார். பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

மார்க்சிய சிந்தனையாளரான ராம் முதலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆதரவாளராக இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் முரண்பாடு ஏற்பட்டு பிளவு தோன்றியபின்னர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என். ராம்.

‘ஹிந்து’ ஆங்கிப்பத்திரிகையிலும், ‘ஃபுரொன்ட்லைன்’ சஞ்சிகையிலும் விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்திகள் வெளியாகின. பிரபாகரனின் பேட்டிகளும் வெளியாகின.

என். ராமை காமினி திசநாயக்கவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சால்வே

சால்வே. என். ராம் ஆகியோர் மூலமாக இந்தியப் பிரமதர் ராஜீவ் காந்தியுடனும், இந்திய அரசியல் தலைவர்களுடனும் நட்பை உருவாக்கிக் கொண்டார் காமின் திசநாயக்க.

இந்தியாவின் உதவியுடன்தான் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் காண முடியும் என்பதை ஜே.ஆர். ஜயவர்த்தனாவுக்கு கூறிவந்தவர்களில் முக்கியமானவர் காமினிதிசநாயக்க.

உள் முரண்பாடு

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் சீடர்கள் போல இருந்தவர்கள் அத்துலத் முதலியும், காமின் திசநாயக்கவும்.

காமினிக்கும், அத்துலத் முதலிக்கும் பிரதமர் பிரேமதாசவோடு பனிப்போர் இருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்த விடயத்திலும் காமினி திசநாயக்கா ஜே.ஆர் பக்கம் நின்றார். பிமேதாச நேர் எதிராக இருந்தார்.

ஒப்பந்த ஷரத்துக்களை தயாரித்தவர் இந்தியத்தூதர் திக்ஷித். இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திக்ஷித் ஒப்பந்த ஷரத்துக்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அவரை அடிக்கடி சந்தித்த ஒரே ஒரு அமைச்சர் காமினி திசநாயக்க.

ஒப்பந்த நகல் தயாரானதும் திக்ஷித் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவையும், காமினி, அத்துலத் முதலி ஆகியோரையும் சந்தித்தார்.

ஜுலை 16ம் திகதி தனக்கு நெருக்கமான அமைச்சர்களின் கூட்டமொன்றை கூட்டடினார் ஜே.ஆர். அக்கூட்டத்தில் திக்ஷித்தும் கலந்து கொண்டார்.

ஒப்பந்தம் தொடர்பாக தனது சகாக்களுக்கு விளக்கமளிப்பதற்காகவே திக்ஷித்தை அழைத்திந்தார் ஜே.ஆர்.

அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியத்தூதர் திக்ஷித் கலந்துகொண்ட செய்தி எப்படியோ வெளியே தெரிந்துவிட்டது.

ஜே.ஆர். இந்தியாவிடம் நாட்டை அடகு வைக்கப்போகிறார். அமைச்சரவைக் கூட்டத்தில் திக்ஷித்துக்கு என்ன வேலை? என்றெல்லாம் ஜே.ஆரின் விரோதிகளும், அரசுக்கு எதிரானவர்களும் கதைகளைப் பரப்பத் தொடங்கினர்.

இத்தனை நடந்துகொண்டிருந்த போது பிரதமர் பிரேமதாசா நாட்டில் இருக்கவில்லை. இலண்டனுக்கும், ஜப்பானுக்கும் போயிருந்தார்.

பிரேமதாசாவின் வெளிநாட்டுப் பணயத்தைப் பற்றி ஜனாதிபதிக்கு முன்கூட்டியே தெரியும்.

பிரேமதாசா, ஜே.ஆர்.

பிரேமதாசா வெளிறாட்டில் இருக்கும் காலகட்டத்தில்தான் ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்று கச்சிதமாக திட்டமிட்டே ஜே.ஆர். காய்களை நகர்த்தினார் என்றும் சொல்லப்பட்டது.

ஜே.ஆர். எட்டடி பாய்ந்தால் பதினாறடி பாயக்கூடியவர் பிரேமதாசா. ஒப்பந்தம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதை அவரது சகாக்கள் அறிவித்திருப்பார்கள்.

பிரேமதாசா நினைத்திருந்தால் உடனே நாட்டுக்குத் திரும்பியிருக்கலாம்.

அப்படி திருப்பிவந்தாலும் ஒப்பந்தம் செய்யப்படுவதை தடுக்க முடியாது. அதனைவிட வெளிநாட்டில் இருந்துவிட்டால் பின்னர் ஒப்பந்தத்துக்கும் தனக்கும் ஒரு தொடர்புமில்லை என்று சொல்லக்கூடியதாக இருக்கும் என்று கருதியிருப்பார்.

ஜே.ஆரின் மிரட்டல்

அமைச்சரவைக்குள் தனக்கு எதிரானவர்களின் வாய்களை மூடிவைப்பதற்காக ஒரு கட்டத்தில் ஜே.ஆர். பின்வருமாறு கூறினார்.

“ஒப்பந்தம் தொடர்பாக நாம் ஒருமித்த கருத்தை எட்டியிருக்கிறோம். இதற்கு எதிரானவர்கள் தாராளமாக வெளியேறலாம். கதவு திறந்துதான் இருக்கிறது.”

யாரும் வெளியேறவில்லை. பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் கட்சிக்குள் இருந்தபடியே கூறினார்கள்:

“ஜே.ஆர். நாட்டை விற்றுவிட்டார்”

ஆளும் கட்சிக்குள்ளும், ஆளும் கட்சிக்கு எதிரானவர்களிடமும் ஒப்பந்தம் தொடர்பாக எதிரான கருத்துக்கள் இருந்தமையால் நாட்டின் தென் பகுதியில் கலவரங்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது.

இந்த நிலவரத்தை இந்திய உளவுப்பிரிவுகளும் அறிந்து கொண்டு இந்தியப்பிரதமருக்குத் தெரிவித்தன.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கைக்கு செல்வது பாதுகாப்பானதல்ல என்று இந்திய உளவுத்துறை அறிவுறுத்தியது.

என்ன நடந்தாலுமு; சரி இலங்கைக்குச் சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்ற முடிவில் பிடிவாதமாக இருந்தார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தி இலங்கைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பரவியது. வரவேற்பு வழங்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் பொலிசாரும், முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டன.

ராஜீவ்காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

விஜிதமுனி

கொலைத்திட்டம்.
படையினர் மத்தியிலும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகவும், இந்தியத் தலையீடு தொடர்பாகவும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கை மூலமாக யாழ் குடாநாட்டை கைப்பற்றியிக்கலாம். இந்தியா தலையிட்டு அதனைக்கெடுத்து விட்டது என்பது படையினர் மத்தியில் ஏற்பட்ட முக்கிய காரணமாக இருந்தது.

டென்சில் கொப்பேக்கடுவ போன்ற படை உயர் அதிகாரிகளும் “இந்தியா மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் நாம் யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்போம்” என்ற அபிப்பிராயம் தெரிவித்தனர்.

ராஜீவ்காந்திக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதும், கடற்படைக்குள் இருந்த கீழ்மட்ட வீரர்கள் சிலருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அணிவகுப்பு மரியாதையில் வைத்து ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டால் என்ன?’ அதுதான் யோசனை.

இந்த சதித்திட்ட யோசனையில் ஈடுபட்ட குழுவினக்கு தலைவர் விஜிதமுனி.

விஜிதமுனிக்கு அப்போது 19 வயது. முழுப்பெயர் விஜிதமுனி ரோகண டி சில்வா.

அணிவகுப்பு மரியாதை வழங்கும் கடற்கடைப்பிரிவில் விஜிதமுனியும் இருந்தான். விஜிதமுனியும் , அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொள்ளும் மற்றும் இரு கடற்படை வீரர்களும் சேர்ந்து ராஜீவைக் கொலை செய்வது என்று முடிவானது.

அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொள்ளும் வீரர்களிடம் துப்பாக்கி இருக்கும். துப்பாக்கிகளுக்குள் தோட்டாக்கள் இருக்காது.

அணிவகுப்பு மரியாதைக்கு செல்வதற்கு முன்னர் கலந்துகொள்ளும் வீரர்களின் துப்பாக்கிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.

அதனால் ராஜீவ் காந்தியை சுட்டுக்கொல்ல முடியாது. அப்படியானால் என்ன செய்யலாம்?

விஜிதமுனி ஒரு யோசனை சொன்னான். துப்பாக்கியில் தோட்டா இருக்காது. துப்பாக்கி முனையில் ‘பேனற்;’ கத்தி இருக்கும். அதனால் குத்தினால் ஆள் காலி.

“முதலில் நான் துப்பாக்கியால் ராஜுவ் காந்தியின் தலையில் அடித்து வீழ்த்துவேன். அதே நொடியில் அணிவகுப்பில் உள்ள ஏனைய இருவரும் பாய்ந்து ராஜீவ் காந்தியை பேனற் கத்தியால் குத்தவேண்டும்.” அதுதான் திட்டம்.

திட்டத்தோடு அணிவகுப்பு நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர் மூவரும்.

ஜுலை 29-1987. அன்றுதான் ராஜீவ்காந்தி இலங்கைக்கு விஜயம் செய்ய ஆயத்தமானார்.
ராஜீவை வவேற்க இலங்கை அரசாங்கம் தயாராகிக் கொண்டிருந்தது.

அநுரா பண்டாரநாயக்கா.

அநுராவின் புத்தகம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி ராஜீவின் வருகையை பகிஷ்கரிக்க முடிவெடுத்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அநுரா பண்டாரநாயக்கா.

‘இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் அநுரா ஒரு புத்தகம் எழுதி அவசர அவரசமாக வெளியிட்டார்.

அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருந்த கருத்துக்கள், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் இங்குள்ள பிரதான சிங்கள் அரசியல் கட்சிகள் எவ்வாறு எதிரும் புதிருமாகச் செயற்பட்டன என்பதற்கும், தங்கள் அரசியல் நலன்களுக்காக உண்மையிலிருந்து வெகு தூரம் விலகி மக்களுக்கு எவ்வாறு பொய்யான சித்திரத்தை காண்பித்தன என்பதற்கும் ஒரு உதாரணமாகும்.

அநுரா எழுதிய புத்தகத்தில் உள்ள முக்கிய விடயங்கள் இவைதான்:

“…..சிறீலங்காவின் மூன்றில் ஒரு பங்கினைத் தமது உடமையாக்கிக் கொள்ள தமிழ் பயங்கரவாதிகள் வருடக்கணக்கில் போரிட் வருகின்றனர்.

மக்களின் இரத்தத்தை சிந்த வைக்கிறார்கள். அவர்கள் கோரியதற்கு மேலதிகமாகவே ஒப்பந்தத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள். தமிழ் பயங்கவாதிகளின் இரத்த வெறிபிடித்த போராட்டத்துக்கு இந்தியா உதவியது.

இந்த உதவியின் நோக்கமே எமது வெளிநாட்டுக் கொள்கையையும், பாதுகாப்புக் கொள்கையையும் இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதுதயாகும்.

இந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் நோக்கம் தேவைக்கு அதிகமாகவே நிறைவேறிவிட்டது.

ஏறத்தாழ 450 வருடங்கள் அந்நிய நாட்டவர்களான போர்த்துக்கீசர், டச்சுக்காரர் மற்றும் பிரிட்டிஷாரின் அடிமைகளாக இருந்து விடுபட்டு ஆக 40 ஆண்டுகள் மட்டுமே சுதந்திரமாக வாழ்ந்து 1987 ஜுலை 29ம் திகதி இந்தியாவின் காலனி என்ற நிலை உருவாகியிருக்கிறது.

இத்துரோகச் செயலை முலாம்பூசி மறைக்க முடியாது.” இதுதான் அநுராவின் நூலில் காணப்பட்ட முக்கிய விடய ங்கள்.

1971ல் தென்னிலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை அடக்குவதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. அப்போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம்தான் பதவியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவுக்கு கடிதம்
ராஜீவ் காந்தியின் வருகையை பகிஷ்கரிப்பது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதிய அநுரா, அதனை ஜுலை 29ல் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்தார்.

அக்கடிதத்தில் காணப்பட்ட பிரதான வாசகங்கள் இவை:

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு:
முப்பது வருடங்களுக்கு முன்னர் எனக்கு எட்டுவயதாக இருக்கும்போது பெருமைக்குரிய தங்கள் பாட்டனார் ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வந்திருந்தார்.

அப்போது விமானநிலையத்தில் அன்னாருக்கு மாலை சூட்டி வரவேற்றேன். அதனைத் தொடர்ந்து தங்கள் பாட்டனாரையும், தங்கள் தாயாரையும் எனது தந்தையாரும், தாயாரும் பல தடவைகள் வரவேற்றுள்ளனர்.

ஆனால் இந்தியாவின் பிதமராக தாங்கள் முதன் முதலாக சிறீலங்காவுக்கு வருகை தரும் போது தங்களை வரவேற்க நான் வரப்போவதில்லை… அத்துடன் தங்களைக் கொளரவிக்கும் எந்தத நிகழ்ச்சியிலும் பங்குபற்றப்போவதில்லை.

தங்கள் இன்று ஒப்பமிடவுள்ள ஒப்பந்தத்தை சிறீலங்கா மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். 24 மணிநேரத்திற்கு முன்பு 20 பேர் பொலிசாரால் படுமோசமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஒப்பந்தத்துக்கு எதிராக அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அவர்கள்.

கொழும்பு நகரம் குழப்பங்களினால் அல்லோலகல்லோலப்படுகிறது. தாங்கள் நாட்டைவிட்டுப் புறப்படும்வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தியின் மகனை எனது நாட்டு மக்கள் வழக்கமாக வரவேற்கும் முறை இதுவல்லவே!

ஜனாதிபதி ஜயவர்த்தனா தனது அமைச்சரவையின் கருத்துக்கு மாறாக ஒப்பந்தத்தில் ஒப்பமிட முன்வந்துள்ளார்.

அண்மைக்கால அநுபவங்களிலிருந்து இத்தகைய ஒப்பந்தங்களின் தலைவிதி எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆட்சியாளரின் கர்வத்தினால் ஏற்படக்கூடிய நிலைமைகளை மீறி மக்களின் கருத்துக்கள் மேலோங்கும் என்பதை வரலாறு நிரூபிக்கும்.

எமது இரு குடும்பங்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மிக நெருக்கமான உறவு பூண்டிருந்தமையால் இக்கடிதத்தை தங்களுக்கு எழுத எண்ணினேன்.”

பிரபா கூறியது

ராஜீவ் காந்தி கொழும்புக்கு வருகிறார். பிரபாகரன் யாழ்ப்பாணம் வந்து சேரவில்லை. யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி பிரபாகரனை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசை கோருவதற்கு முடிவு செய்தனர் புலிகள்.

ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்தில் தரை இறங்கிய பின்னரே பிரபாகரனை யாழ்ப்பாணம் செல்ல அனுமதிப்பது என்பது இந்திய அரசின் திட்டம்.

அதற்கு முன்னர் பிரபாவை யாழ்ப்பாணம் செல்ல அனுமதித்தால் அவர் எவ்வாறு நடந்து கொள்வாரோ என்று இந்திய அரசுக்கு சந்தேகம்.

இந்தியாவில் இருந்து பிரபாகரன் புறப்படுவதற்கு முன்னர் இந்திய இராணுவத்தில் தென்பிராந்திய கமாண்டுக்குப் பொறுப்பான லெப்டினன்ட் ஜெனரல் திபிந்தர்சிங்கைச் சந்தித்தார்.

இருவருக்குமிடையே யோகி மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.

ஒப்பந்தத்தை ஆதரிப்ப நன்மை தரும் என்று திபிந்தர்சிங் பிரபாகரனிடம் கூறினார்.

பிரபாகரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக விடைபெறும் போது திபிந்தர்சிங்கிடம் பிரபாகரன் கூறியது இது:

“இனிமேல் ஒருபோதும் ‘றோ’வையோ, இந்திய வெளியுறவு அமைச்சையோ நான் நம்பப்போவதில்லை. அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!”

1987 ஜுலை 29-பகல் 11மணிக்கு ராஜீவ்காந்தி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவருடன் ‘றோ’ உளவுப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் வந்திறங்கினார்கள்.

இலங்கை விமானப்படை விமானம் மூலமாக கட்டுநாயக்காவில் இருந்து காலி முகத்திடலுக்கு அழைத்துவப்பட்டார் ராஜீவ் காந்தி.
கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.

ஒப்பந்தம்

இந்தியப் பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் ஜனாதிபதி ஜே.ஆர்ஃ ஜெயவர்த்தனா இந்தியா தன்னிச்சையாக தலையிட்டு உணவுப்பொதிகளை போட்டதையிட்டு பின்வருமாறு கூறினார்.

“இந்தியா செய்ததை நான் மன்னிக்கிறேன். ஆனால் மறக்கமட்டேன்”

பிற்பகல் 3.37 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தியும், ஜே.ஆரும் கையொப்பமிட்டுக் கொண்டிருக்க,

ஒப்பந்தமும் – படை தயார் நிலையும்

இந்தியாவில் சென்னையில் இருந்து இந்தியப் படைகள் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. தாம் எதிர்நோக்கப்போகும் மாபெரும் கெரில்லா போர் பற்றி அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிறு குண்டாக இருக்கிறதா? என்ன காரணம்…!!
Next post யாழில் காதலியை வெள்ளை வானில் கடத்திய காதலன்! சீரழியும் இளைஞர் சமுதாயம்…!!