இந்தியா முழுவதும் இன்று வங்கிகள் செயல்படாது: மோடி அறிவிப்பு..!!
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க அந்தந்த நாடுகளின் துணையுடன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதுபோல், உள்நாட்டில் கணக்கில் காட்டாத பணத்தை வைத்திருப்பவர்கள், அந்த பணத்துக்கு கணக்கு காண்பித்து, வரி மற்றும் அபராதம் செலுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது. இதன் பலனாக, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே வந்தது.
‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதுபோல், கருப்பு பணத்துக்கு எதிராகவும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறினார்.
அதன்படி, கருப்பு பணத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நேற்று அவர் அறிவித்தார். டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மோடி இதை அறிவித்தார். அந்த உரையில் மோடி கூறியதாவது:-
சில முக்கியமான முடிவுகளையும், சில தீவிரமான பிரச்சினைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.
* அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நேற்று) நள்ளிரவில் இருந்து செல்லாது. நவம்பர் 9-ந் தேதி (இன்று) முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும்.
* இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரை, சர்வதேச விமான நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள மருந்தகங்கள், பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகள், கூட்டுறவு சங்கங்கள், மாநில அரசுகள் நடத்தும் பால் விற்பனை நிலையங்கள், உடல் எரியூட்டும் இடங்கள் ஆகியவற்றில் இந்த நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும். பஸ், ரெயில், விமான டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களிலும் 11-ந் தேதி நள்ளிரவு வரை ஏற்று கொள்ளப்படும்.
* 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர் கள், நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள், தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் அவற்றை டெபாசிட் செய்யலாம். அதற்கு உச்சவரம்பு கிடையாது. மேற்கண்ட இடங்களில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். அதற்கு ஆதார் அட்டை, வருமான வரி பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.
* டிசம்பர் 30-ந் தேதிக்குள், இந்த நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள், ரிசர்வ் வங்கியில் ஒரு பிரகடனம் எழுதிக் கொடுத்து மாற்றி கொள்ளலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை, அவ்வாறு மாற்றி கொள்ளலாம்.
* நவம்பர் 9-ந் தேதி எல்லா வங்கிகளும் செயல்படாது. நவம்பர் 9-ந் தேதி அனைத்து ஏ.டி.எம்.களும், நவம்பர் 10-ந் தேதி சில இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களும் இயங்காது.
* தொடக்கத்தில் சில நாட்களுக்கு ஏ.டி.எம்.மில் ஒரு கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். பின்னர், இத்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். இறுதியாக, நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம்.மில் எடுப்பதற்கான பண உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாகவும், வாரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்படும்.
* 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழக்கம்போல் செல்லுபடி ஆகும்.
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை, டிமாண்ட் டிராப்ட், நெட் பேங்கிங், மின்னணு பண பரிவர்த்தனை போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப் பாடும் கிடையாது.
* புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு கொண்டுவரப்படும்.
ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசாங்கத்துடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு இந்த அரசை நீங்கள் தேர்ந்தெடுத்தபோது, இந்தியா மோசமான பொருளாதார நிலையில் இருப்பதாக உலகம் பேசிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தியா இப்போது பொருளாதார நட்சத்திரமாக உயர்ந்துள்ளது. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இதை சொல்கின்றன.
ஆட்சிமுறை, எல்லோருக்கும் முன்னேற்றம் என்பதுதான் எங்கள் குறிக்கோள். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த நோக்கத்திலேயே, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது, ஏழைகளுக்கான அரசு.
ஊழலும், கருப்பு பணமும் இந்த நாட்டில் வேரூன்றி உள்ள நோய்கள். அவை நமது வெற்றிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. நமது நாடு, பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாகும். அதே சமயத்தில், உலகளாவிய ஊழல் பட்டியலில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளோம்.
அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு யார் நிதி உதவி செய்வது? எல்லை தாண்டி, நமது எதிரிகள் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இது பலதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான நமது நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளன. கணக்கில் காட்டப்படாத பணத்தை தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating