கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்கில் எதிரிக்கு 2 மாத சிறைத்தண்டனை..!!
2001ஆம் ஆண்டு ஆடி மாதம் 24ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து எதிரியான செல்லையா ஜெயகுமாருக்கு நீர் கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டு மாத தண்டணை விதித்து தீர்ப்பளித்தது
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைப்பிரினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட செல்லையா ஜெயகுமாருக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2013ஆம் ஆண்டு குற்றச் சாட்டுப் பத்திரம் நீர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் 24ஆம் திகதி அரச விரோத விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களான பொட்டு அம்மான், கண்ணன், வினாயகன், ஆகியவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியதனை நன்கு தெரிந்திருந்திருந்ததாக நம்பக் கூடிய காரணங்கள் இருந்தும், அதனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தெரிவிப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5ம் பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில்,
இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்லையா ஜெயகுமார் 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்டதிலிருந்து 7 ஆண்டுகளாக சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கம் குற்றச்சாட்டிற்கு, எதிரி குற்றவாளியாக விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் ஆகக் கூடிய தண்டனையாக 7 வருடங்களே நீதிமன்றத்தினால் தண்டணை வழங்கப்பட முடியும்.
ஆனால் நீதிமன்றினால் தண்டணை வழங்கப்படாமலே 7 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலை தெரிந்திருந்தும் பொலிசாருக்கு தகவல் வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு எதிரியின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் எதிரி கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். யுத்தத்தின் இறுதிக் கட்டம்வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பபாட்டுப் பிரதேசமான கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர் எவ்வாறு பொலிசாருக்கு தகவல் வழங்க முடியும்..? என்பதை குற்றச் சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யும் போது சட்டமா அதிபர் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளாமல் இந்தக் குற்றச்சாட்டு எதிரி மீது சுமத்தியுள்ளார்
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் விசாரணை இறுதியில் எதிரி விடுதலை செய்யப்படலாம் ஆனால் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை எதிரிக்கு பிணை வழங்கப்படாத காரணத்தினால் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5ம் பிரிவின் கீழ் ஆகக் கூடிய தண்டனை 7 ஆண்டுகள் ஆனால் ஆகக் குறைந்த தண்டனையை நீதிமன்றமே தீர்மானிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
எனவே, இந்த நீதிமன்றம் ஆகக் குறைந்த தண்டனை வழங்குமாகயிருந்தால் எதிரி குற்றச் சாட்டை ஒத்துக் கொள்ளத் தயாராக உள்ளார் என நீதிமன்றில் தனது வாதத்தை முன்வைத்த பொழுது,
அரச சட்டத்தரணி தனது வாதத்தில் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் மிகவும் பாரதூரமானதெனவும், அதனை எதிரி மறைத்துள்ளார் என தனது சமர்ப்பனத்தை முன்வைத்தார்
அரச தரப்பினதும், எதிரி தரப்பினதும் வாதத்தையடுத்து நீர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எதிரிக்கு இரண்டு மாத தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.
Average Rating