யாழ்ப்பாணத்தில் 200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர்… ஆனால், அதை ராணுவம் மறுப்பு
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர். ஆனால், அதை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேற்றிரவு முதல் இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மீண்டும் கடும் மோதல் நடந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் உட்பகுதியில் விடுதலைப் புலிகள், ராணுவத்தினரின் நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருவதாகத கவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
பலாலி விமான தளம் அருகே விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சண்டையில் 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. தாக்குதல் தொடங்கிய ஒரு வாரத்தில் 106 வீரர்கள் மட்டுமே பலியாகியதாக ராணுவம் கூறியுள்ளது.
பலாலி விமான தளத்திற்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது ராக்கெட் வீசி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல ம¬கமாலை, கிலாய் பகுதிகளிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இயக்கச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளை மீட்க ராணுவம் கடும் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் புலிகளும் திருப்பித் தாக்கி வருவதால் அங்கு கடும் சண்டை மூண்டுள்ளது.
இதே போல திரிகோணமலை துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விடுதலைப் புலிகள், ராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். விடியவிடிய இந்த சண்டை நடந்தது.
இதற்கிடையே, யாழ்ப்பாணம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தொடர்ந்த துண்டிக்கப்பட்டுள்ளது. தரைமார்க்கமாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ராணுவத்தினருக்கு கடல் அல்லது வான் மார்க்கமாகவே உதவ முடியும் என்ற நிலையில் இலங்கை அரசு உள்ளது.
உணவுப் பொருட்களுக்கு கடும்தட்டுப்பாடு நிலவுகிறது. இரு தரப்பும் கடுமையாக மோதி வருவதால் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி காடுகளில் தொடர்ந்து தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ஸ்டீவன் மான் இன்று கொழும்பு வருகிறார். அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இதற்கிடையே திரிகோணமலை பகுதியில் தாக்குதல் மிகத் தீவிரமாக இருப்பதால் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, கொழும்பில் பத்திரிக்கை ஆசிரியர்களிடையே அதிபர் ராஜபக்ஷே பேசுகையில், யாழ்ப்பாணத்திலிருந்து படைகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. போரை ஆரம்பித்தது அவர்கள்தான். எனவே அவர்கள்தான் முதலில் நிறுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதை விடுதலைப் புலிகளுக்கு தரைவார்த்து விட¬முடியாது என்று கூறியுள்ளார்.