ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கற்பழித்ததில் குழந்தை பெற்ற பெண்…!!
ஈராக்கில் உள்ள மொசூல் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அந்த நகரை மீட்பதற்கு ஈராக் படைகள் முற்றுகையிட்டுள்ளன. நகரின் சில பகுதிகளில் ராணுவம் ஊடுருவி உள்ளது.
அந்த நகரில் 12 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அவர்களை தீவிரவாதிகள் வெளியே விடாமல் தடுத்து வருகிறார்கள். அதையும் மீறி ஏராளமானோர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வருகின்றனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இப்படி தப்பி வந்தவர்களில் பவுலானா (வயது 40, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தீவிரவாதிகள் கற்பழித்ததில் ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் வந்துள்ளார்.
அவர் தனக்கு நேர்ந்த சோகம் பற்றி கூறியதாவது:-
நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனக்கு மகன், மகள் உள்ளனர். இதில், மகளுக்கு திருமணமாகி பேரன் பேத்தி இருக்கின்றனர்.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு எங்கள் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். அப்போது எங்கள் பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்தனர். ஆனால், நாங்கள் அவர்களுக்கு உதவியாக இல்லை.
எனவே, எங்களை குறிவைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் கஷ்டப்படுத்தினார்கள். ஒரு தடவை தீவிரவாதிகள் கும்பலாக எங்கள் வீட்டுக்கு வந்தனர். எனது மகள் அணிந்திருந்த ஆடையை கிழித்து எறிந்தனர். பின்னர் அவளை கற்பழிக்க போவதாக மிரட்டினார்கள். நான் அவர்களுடன் போராடினேன்.
அப்போது அந்த தீவிரவாதிகள் கும்பலில் இருந்த தலைவன் மகளை கற்பழிக்க வேண்டாம். தாய்தான் நமக்கு தேவை என்று கூறினான். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் இருந்தேன்.
2 நாள் கழித்து மார்க்கெட்டுக்கு பொருள் வாங்க சென்றேன். அங்கு வந்த தீவிரவாதிகள் என்னை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றனர்.
பின்னர் ஒரு பகுதியில் என்னை அடைத்து வைத்தனர். அங்கு வேறு சில பெண்களும் இருந்தனர். என்னிடம் தீவிரவாதிகள் இனி நீ எங்களின் அடிமை. நாங்கள் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று கூறினார்கள்.
பின்னர் ஒரு நாள் தீவிரவாதி ஒருவன் என்னை கற்பழிக்க முயன்றான். நான் அவனிடம் போராடினேன். கதறி அழுதேன். ஆனால், என்னை விடவில்லை. என்னை கடுமையாக தாக்கினான். பின்னர் வலுக்கட்டாயமாக கற்பழித்தான். இதன் பிறகு கற்பழிப்பு தொடர் கதையானது.
இதன் காரணமாக நான் கர்ப்பம் அடைந்தேன். பல மாதங்கள் கடந்தன. வயிற்றில் குழந்தை இருப்பதால் என்னை அங்கிருந்து விடுவித்து விட்டனர். வீட்டுக்கு வந்தேன். வேறு வழியில்லாமல் குழந்தை பெற்றுக்கொண்டேன். ஆண் குழந்தை பிறந்தது.
இது, தீவிரவாதிக்கு பிறந்த குழந்தையாக இருந்தாலும் என் வயிற்றில் உருவான குழந்தை. எனவே, அதை வெறுக்க மனதில்லை. அதை அன்போடு வளர்த்தேன். நான் மட்டுமல்ல, என்னுடைய மற்ற குழந்தைகளும் இந்த குழந்தையை அன்போடு பார்க்கிறார்கள். இவனும் என்னுடைய குடும்பத்தில் ஒருவனாகி விட்டான்.
எனது கணவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டனர். என் கணவர் என் மீது மிகவும் அன்பாக இருப்பார். அவரது பெயரையே இவனுக்கு சூட்டி இருக்கிறேன். கடைசி வரை இவனை பாசமாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதே எனது கடமையாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating