லண்டன் விமான தகர்ப்பு சதி: அல்கொய்தாவின் ‘நம்பர் 3’ தீட்டிய திட்டம்!
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களை நடுவானில் வெடிக்கச் செய்யும் சதித் திட்டத்தை அல்கொய்தா அமைப்பின் 3வது முக்கியத் தலைவரான அபு பராஜ் அல் லிப்பி என்பவர்தான் தீட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலநாட்களுக்கு முன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லவிருந்த விமானங்களை திரவ எரிபொருள் மூலம் நடுவானில் வெடிக்கச் செய்யும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை இங்கிலாந்து உளவுப்பிரிவான எம்ஐ5 தக்க சமயத்தில் கண்டுபிடித்து அத்திட்டத்தை முறியடித்து.
இந்த சதித் திட்டம் தொடர்பாக 24 பேரை இங்கிலாந்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து உலகம் முழுவதுமே விமானங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சதித் திட்டத்தின் மூளையாக இருந்த நபர் குறித்த தகவல்களை பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவுப் பிரிவு தகவல்களின்படி இந்த சதித்திட்டத்தை அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தீட்டவில்லை. ஆனால் அதன் 3வது நிலை தலைவரான அபுபராஜ் அல் லிப்பிதான் இத்திட்டத்தை தீட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸதான் அதிபர் முஷாரப்பை கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் இந்த அல்லிப்பிதான். அந்தத் தாக்குதலிலிருந்து முஷாரப் உயிர் தப்பினார். ஆனால் 17 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மே மாதம் மர்தான் நகரில் அல் லிப்பி கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் இவர் போட்டுத் தந்த சதித்திட்டத்தை வைத்து இங்கிலாந்து விமானங்களைக் கடத்தி நடுவானில் வெடிக்கச் செய்யும் ஆரம்பகட்ட வேலைகளில் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சதித் திட்டத்தின் முக்கிய ஆளான ரஷீத் ரௌஃப் பாகிஸ்தான் போலீஸார் வசம் சிக்கியதைத் தொடர்ந்துதான் இந்த சதித்திட்டம் வெளிப்பட்டது. இலலாவிட்டால் பெரும் அசம்பாவிதங்கள் நேர்ந்திருக்கும்.
இருப்பினும், சதிகாரர்கள், விமானங்களை வெடிவைத்துத் தகர்க்கத் தேவைப்பட்ட திரவரசாயானப் பொருட்கள் தயாரிப்புக்கான உபகரணங்களை சேகரித்துக் கொண்டிருந்த நிலையில்தான் சிக்கியுள்ளனர்.
ரஷீத், பாகிஸ்தானின் மிர்பூர் நகரில் பிறந்தவர். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை அவரிடம் உள்ளது. கடந்த 1981ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்தவர். 2002ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அன்று¬முதல் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். இங்கிலாந்தில் இருந்தபோது ரஷீத் தனது உறவினரைக் கொன்றதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்த சதித்திட்டத்திற்கான பணம், காஷ்மீர் பூகம்ப நிவாரண நிதியிலிருந்து போயுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து தீவிரவாத நிதித்தடுப்புப்பிரிவு அதிகாரிகள் லாகூர் வந்து இங்கிலாந்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்புகள், பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, ரஷீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இங்கிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது. ரஷீத் இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றவர் என்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து கோரியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் விவாதிக்க ஸ்காட்லாந்து போலீஸ் குழு இஸ்லாமாபாத் வந்துள்ளது.