காதலியை காரை ஏற்றி கொன்ற சட்ட கல்லூரி மாணவர்…!!
வேலூர் மாவட்டம் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 30-ந் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சென்ற, வாலாஜா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வாலாஜா அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த காந்தி மகள் சாந்தி (வயது 25) என்பது தெரியவந்தது. மர்ம சாவு என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை தொடங்கியது.
சாந்தியின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் சக்திவேல்குமாரின் மகன் நிலவுராஜன் (24) என்பவருடன் அதிகமாக தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
நிலவுராஜன் சித்தூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார்.நிலவுராஜனை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். போலீஸ் நெருங்கியதை அறிந்த நிலவுராஜன், தனது பெரியப்பா குணக்குமாரின் மகன் நித்தியானந்தம் (25) என்பவருடன் வாலாஜா கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் சரணடைந்த 2 பேரையும், வாலாஜா போலீசில் ஒப்படைத்தார். நிலவுராஜன், நித்தியானந்தத்திடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், 2 பேரும் சேர்ந்து சாந்தியை காரை ஏற்றிக் கொன்றதை ஒப்புக் கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்:-
கொலையுண்ட சாந்தி, எம்.ஏ., பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளார். வாலாஜா மகளிர் கல்லூரி எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். சாந்தியும், நிலவுராஜனின் அத்தை மகன் ஜான் (26) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.
ஓட்டுனராக இருந்த ஜானுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது, இதுதொடர்பாக, அப்போதைய வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கரிடம் சாந்தி புகார் மனுவும் அளித்துள்ளார். அந்த மனு மீது, வாலாஜா போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.
ஜானுக்கு திருமணம் முடிந்து விட்டதால், அவரது வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று கூறி சாந்தியை போலீசார் அனுப்பி விட்டனர். இதற்கிடையே, ஜானுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என சாந்தியிடம் நிலவு ராஜன் பேசி பழகியுள்ளார்.
இதுதொடர்பாக, அடிக்கடி பேசி கொண்டனர். அப்போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து நிலவு ராஜனுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
சம்பவத்தன்று ஓச்சேரி அருகே உள்ள கோவிலுக்கு தனது தோழிகளுடன் செல்வதாக சாந்தி தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சாந்தியை சமாதானம் செய்ய, நிலவுராஜன் காஞ்சீபுரத்திற்கு காரில் அழைத்து சென்றார். உடன் அவரது பெரியப்பா மகன் நித்தியானந்தம் சென்றார்.
மீண்டும் ஊர் திரும்பிய போது, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சாந்தி பிடிவாதமாக கூறினார். மேலும், ஊர் மக்களிடம் நியாயம் கேட்பேன் என்று கூறிய சாந்தி, காரில் இருந்து இறங்கி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அதிர்ச்சியடைந்த நிலவுராஜன் உள்பட 2 பேரும் காதல் விவகாரம் ஊரறிய தெரிந்தால் மானம் கப்பலேறி விடும் என்று அஞ்சினர். இதனால் 2 பேரும் சேர்ந்து, சாந்தி மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது.
நிலவுராஜன், நித்தியானந்தத்திடம் வாக்குமூலம் பெற்ற பிறகு போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து, இன்று காலை 2 பேரையும் வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு, நிலவுராஜனும், நித்தியானந்தமும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Average Rating