கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம்…!! கட்டுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற – அல்லது அதைவிட அதிகமான – எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி, வடக்கில் ஏற்பட்டுள்ளது.
படையினர் அல்லது பொலிஸார் சார்ந்த குற்றங்கள் அல்லது சம்பவங்களின் போது, வடக்கில் எழுச்சிகள் ஏற்படுவதொன்றும் புதிதன்று. 2005ஆம் ஆண்டில், படையினரின் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கும் போதும் காயப்படும் போதும், படையினருக்கெதிரான எழுச்சி ஏற்படுவதும் ஹர்த்தால் நடத்தப்படுவதும் வழக்கமானது. சில தருணங்களில், படையினரின் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமையும் அதற்குப் பதில் தாக்குதலை, கண்ணீர்ப்புகை வடிவிலோ அல்லது எச்சரிக்கை வடிவிலோ படையினர் வழங்கியிருந்தனர்.
ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியென்பது வித்தியாசமானது. போர் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் எழுச்சியென்பது ஒரு விடயமென்றால், தமிழ் மக்கள் மீது ஓரளவுக்கு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லப்படும் ஐ.தே.க – ஸ்ரீ.ல.சு.க இணைந்த தேசிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுவது, குறிப்பிடத்தக்களவு பெரிய எழுச்சியாகும் என்பது அடுத்த முக்கியமான விடயம்.
இந்த விபத்துத் தொடர்பாக பொலிஸாரால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி, இது வெறுமனே விபத்து எனவே தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வெடிச் சம்பவங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியதுடன், மாணவர்களின் மரணம் தொடர்பாகச் சந்தேகம் எழுப்பப்படத் தொடங்கவே, அச்சம்பவம் இடம்பெற்று சுமார் 18 மணித்தியாலங்களின் பின்னரேயே, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. ஆகவே, இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்றார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. அவ்வாறானால், இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் வருவது வழக்கமானதல்லவா?
பொலிஸார் தெரிவிப்பதன்படி, மாணவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தார்களா அல்லது பொலிஸாரால் மறிக்கப்படும் போது, அந்தக் கட்டளையை மீறி அவர்கள் சென்றார்களா என்பது, இதில் முக்கியமான ஒன்றன்று. மதுபோதையில் செல்பவர்கள் மீது, துப்பாக்கியால் சுடுவதற்கான அதிகாரம், பொலிஸாருக்குக் கிடையாது. குறைந்தபட்ச பலத்தைப் பிரயோகித்தல் என்பது, சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாருக்கு உண்டு. அதன்படி, ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத சந்தர்ப்பங்களில், தங்களது அதிகாரத்தில் அல்லது பலத்தில், குறைந்தபட்சத்தையே அவர்களால் பயன்படுத்த முடியும். இதே விடயத்தை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, மாணவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவர்கள் மதுபோதையில் இருந்தார்களா என்பதை முக்கியப்படுத்துவது, அவர்களின் படுகொலைகளுக்கு முக்கியமற்ற ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகின்ற போதைப்பொருள் வர்த்தகத்தையும் வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்துவதற்காக, விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்ட பின்னணியிலும் இதை ஆராய வேண்டியிருக்கிறது. போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்கவும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியமானது. ஆனால், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு, அதை உட்கொள்பவர்களையும் அவற்றின் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களையும் தேடிப்பிடித்து நடவடிக்கை எடுப்பதென்பது, எவ்வளவு தூரத்துக்குப் பயன்தரக்கூடியது? மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்துக்குள், போதைப்பொருட்கள் எவ்வாறு வருகின்றன, அவற்றின் மொத்த விற்பனையில் ஈடுபடுவது யார் போன்ற விவரங்கள், இன்னமும் கண்டுபிடிக்கப்படாமைக்குக் காரணம் என்ன? யாழ்ப்பாணத்துக்கான இவற்றின் வருகையின் பின்னால், பலமிக்க அரசியல்வாதிகளோ அல்லது வணிகர்களோ அல்லது அரச இயந்திரமோ காணப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பாரிய ஆயுத இயக்கத்தைத் தோற்கடித்த இலங்கையின் புலனாய்வுப் பிரிவால், போதைப்பொருள் எவ்வாறு வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலிருக்கிறது என்பது, நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. ஒன்றில், அவ்விடயத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, இல்லையெனில், போதைப்பொருள் கடத்துபவர்களின் அடையாளம் தெரிந்த பின்னரும், அது தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
இந்த இரு மாணவர்களின் மரணங்களைத் தொடர்ந்து, சுன்னாகம் பகுதியில் தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தையும், கவனத்துடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆவா குழு என்ற பெயரில், யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஒரு குழு ஈடுபடுவதாக, சில ஆண்டுகளாகவே செய்திகள் காணப்படுகின்றன. அவ்வப்போது, “ஆவா குழுவினர் கைது” என்று, பொலிஸார் தெரிவிக்கும் செய்திகளும் பிரசுரமாகியே வருகின்றன. அவற்றை விட, “ஆவா குழுவுக்கு உணவு கொடுத்த பெண் கைது” என்றெல்லாம் கூட, செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆக, இதுவரை கைதானவர்கள் என்னவானார்கள்? கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று, ஏனையோரும் கைது செய்யப்படவில்லையா? இந்தக் குழுவை அழித்தொழிப்பதற்கு, இதுவரை முடியாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன? இந்தக் குழுவினரை இராணுவத்தினர் உருவாக்கினரா என்ற கேள்விக்கு, நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், “இல்லை” என நேரடியாகப் பதிலளிக்காமல், அதற்குப் பதிலேயளிக்கப் போவதில்லை என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தமை ஏன் போன்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தக் குழுவின் பெயரில் தான், சுன்னாகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டை, தாமே மேற்கொண்டதாக உரிமை கோருவதாகத் தெரிவிக்கும் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டது. மாணவர்களின் படுகொலைக்குப் பழிவாங்கும் முகமாகவே, இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாக, அச்சுவரொட்டி தெரிவித்தது. ஆனால், அச்சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்தவர்களின் கருத்துப்படி, அவர்கள் இருவரும் சிவில் உடையிலேயே காணப்பட்டதாகவும், அக்கடையைக் கொள்ளையிடுவதற்காக வந்தவர்களே, வாள்வெட்டை நடத்தியதாகவும் அறிவிக்கப்பட்டது. அதை, அரசாங்கத் தகவல் திணைக்களமும் உறுதிப்படுத்தியது . ஆனால், “ஆவா குழு உரிமை கோரியது” என்ற செய்தி, தென்னிலங்கையில், முக்கியப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அடிப்படையான தர்க்க முரண்பாடுகளைக் கொண்ட “இச்செய்தி”,
முக்கியத்துவப்படுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன?
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், ஆயுதமேந்திய தரப்பினரை, தொடர்ந்தும் வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்காக, போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு என்ற செய்தியும் இந்த இரு மரணங்களும் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எழுச்சியும் பயன்படுத்தப்படுகிறது போன்ற எண்ணமே ஏற்படுகிறது.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலிருந்து, இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமென்பது, போர் முடிந்த காலம் தொடக்கம், தமிழ் மக்களிடத்தில் காணப்படும் பிரதான கோரிக்கைகளுள் ஒன்றாகும். முன்னைய அரசாங்கம், அவ்விடயத்தில் தெளிவாக “இல்லை” என்பதைப் பதிலாக வழங்கி வந்தாலும், தேசிய அரசாங்கத்தில், இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தலென்பதற்கு, தெளிவான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கதைக்கும் போது, இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பது போன்று தோன்றும்; சில நாட்களின் பின்னர் மற்றையவரின் கருத்து, அதற்கு எதிரானதாக இருக்கும்.
ஆனால், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் பொலிஸார் தான், இராணுவத்தினர் அல்லர் என்ற விவாதம் முன்வைக்கப்படலாம். ஆனால், ஆயுதமேந்திய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில், எந்தவித வித்தியாசத்தையும் தமிழ் மக்கள் காணவில்லை என்பது தான் யதார்த்தமானது. அதேபோல், மாணவர்களைச் சுட்டவர்களில் தமிழ்ப் பொலிஸாரும் காணப்படுகின்றனர், ஆகவே, வழக்கமான இனப்பாகுபாட்டுக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது என்றும் கூறப்படலாம். ஆனால், பெரும்பான்மையாக சிங்கள இனத்தவர்களைக் கொண்ட பொலிஸ் துறையில், முக்கியமான பதவிகளில் எல்லாம் அவ்வினத்தவர்களே காணப்படும் நிலையில், அங்கு காணப்படும் கீழ்நிலை அதிகாரிகளில் சிலர் தமிழர்களாக இருப்பதால் மாத்திரம், எதுவும் நடந்துவிடாது. மாறாக, தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு அவர்கள் முயல்வர். தங்களது உயரதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பதற்காக, அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்தவே அவர்கள் முயல்வர். ஆகவே தான், பொலிஸ் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் வரை, சில நூறு தமிழர்களை கீழ்நிலை அதிகாரிகளாக இணைத்துக் கொள்வதால் மாத்திரம், பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை.
இந்த மாணவர்களின் மரணம், யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் காணப்படும் பாரிய நோயொன்றின் குணங்குறி மாத்திரமே. குணங்குறிக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அவசியமானது, ஆனால் அதை, காணப்படும் பாரிய நோயைக் குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தான் தேவையாக இருக்கிறது.
Average Rating