திருச்சி அருகே அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை..!!
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களது மகன்கள் ராஜா (வயது 30), கோபி (28), பூபதி (25). கணேசன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை ராஜா, பூபதி இருவரும் அங்குள்ள கோப்பு பாலத்தில் நின்று, உறவினர் வடிவேல் என்பவருடன் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர்.
முகத்தை துணியால் மூடியிருந்ததோடு, கையில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். திடீரென அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜாவையும், பூபதியையும் சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேருக்கும் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தடுத்த வடிவேலையும் வெட்டினர்.
இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ராஜா வெட்டுக் காயத்துடன் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்றனர். பின்னர் அங்குள்ள கோழிக் கறி கடைக்குள் புகுந்த ராஜாவை 6 பேரும் மடக்கி பிடித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். வடிவேல் அந்த கும்பலிடம் இருந்து தப்பி சென்று விட்டார்.
பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கொலையை நேரில் பார்த்த பொது மக்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இந்நிலையில் 2 பேரையும் வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொலையாளிகள் தப்பி சென்று விட்டனர்.
2 பேரையும் கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.
சகோதரர்களான ராஜா, கோபி, பூபதி ஆகிய 3 பேரும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சியும் விற்று வந்துள்ளனர். கட்ட பஞ்சாயத்து தொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி அங்குள்ள டாஸ்மாக் கடையில் 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கும் அங்கு மது அருந்தி கொண்டிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகள் காரணமாக எதிராளிகள் 2 பேரையும் வெட்டிக்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
முன் விரோத மிரட்டல் காரணமாக சகோதரர்களான 3 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். ஆனால் இன்று ராஜா, பூபதி மட்டுமே சென்றுள்ளனர். கோபி வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவர் உயிர் பிழைத்து விட்டார்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் காரணமாக ஜீயபுரம் எட்டரைகோப்பு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குதிருச்சி மாநகர உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.
Average Rating