படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி..!!
கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட்டார். ‘யுடிவி’ தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் நாசர் பேசும்போது, இந்த படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. பழங்குடியினர் பற்றிச் சமீபத்தில் படித்திருந்தேன். பூர்வகுடி மக்கள் சமகால அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்தக் கதை அதைச்சொல்ல சொல்ல வந்தபோது பிடித்தது.
இருந்தாலும் இப்படத்தில் நான் நடிக்க மறுத்தேன். காரணம் ஒன்று: தொடர்ந்து 14 நாட்கள் தொடர்ச்சியாக என்னால் நாட்களை ஒதுக்க முடியாது. வேறு வேறு படங்கள், வேலைகள் இருக்கின்றன. காரணம் இரண்டு: சிறு படம், புதிய தயாரிப்பாளராக இருந்தார். நான் என்றும் சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். இருந்தாலும், பல படங்கள் ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்பதைக் கேள்விப்படும்போது என்னால் அந்த வலியைத் தாங்க முடியாது. நானும் இப்படி பணத்தை இழந்தவன்தான்.
ஆனால் சிறுபடங்கள் எடுப்பவர்கள்தான் தங்களின் சொந்த முதலீட்டை வைத்து எடுப்பார்கள். மனைவியிடம் இதுபற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிடித்த படம் விடவும் விரும்பாமல், படத்துக்கான 14 நாட்கள் என்பதை 12 நாட்களாக்கி முடிப்பது என்று முடிவானது.
படப்பிடிப்புக்குப் போன பிறகுதான் பலவற்றை உணர்ந்தேன். எனக்கு முதுகுவலி இருந்தது. படப்பிடிப்பு நடக்குமிடம் மலைப் பிரதேசம், அது நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் இருந்தது. தங்கும் ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால் காரில் போய் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் போய் பிறகு காரில் இப்படி மாறிமாறிப் போக வேண்டும்.
இந்தச் சிரமங்களைப் பார்த்து படப்பிடிப்பு இடத்திலேயே தங்கினேன். குழுவினர் 34 பேரும் ஒரே கூரையின் கீழ் தங்கியிருந்தோம். இப்படி ஒரு அற்புத அனுபவம் இதுவரை கிடைத்ததில்லை. இப்படி இந்தப்பட அனுபவம் மறக்க முடியாத நாட்கள் ஆகிவிட்டன. வேறு வசதிகள் வேண்டுமா? என்று தயாரிப்பாளர் கேட்டபோது வேண்டாம் என்றேன்.
படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா? கேரவன் என்பது இன்று அந்தஸ்தின் குறியீடாக இருக்கிறது. அது வசதிக்காக மட்டுமே இருக்க வேண்டும். அங்கே இருந்தபோது நான் பார்த்தது நேர விரயமே இல்லை. ஒளிப்பதிவாளர் தேடித்தேடி அழகாக எடுப்பார். நானும் மகேந்திரனும் அப்பா மகன் போல இருந்தோம். எல்லாமே பகிர்ந்து கொண்டோம். நானும் அவனும் அங்கேயே ஒரு ஆவணப் படமே எடுத்து இருக்கிறோம்.
எல்லாரிடமும் பேசப் பழக, பகிர அருமையான வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் அனுபவித்து செய்த படம் இந்த ‘திட்டிவாசல்’. அந்தப் படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே அழகான நாட்கள். பெரிய படத்துக்காக அந்த நாட்களை விற்றிருந்தால் வாழ்க்கையில் இப்படி அழகான நாட்களை, அற்புத அனுபவங்களை இழந்திருப்பேன். எல்லாருக்குமாக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
Average Rating