ராஜீவ் – பிரபா சந்திப்பு: சயனைட் குப்பி கடித்து, தற்கொலை செய்ய நினைத்த பிரபாகரன்!! காரணம் என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -92) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

Read Time:22 Minute, 58 Second

timthumb•பிரபாவுக்கு ராஜீவ் காந்தியின் வாக்குறுதிகள்

•பிரபாகரனிடம் “நீ என்ன முடிவு செய்கிறாயோ அதனை நான் ஆதரிப்பேன்!” சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர்.

• மாதம் தோறும் இரண்டு இலட்சம் ஸடேர்லிங் பவுணை புலிகள் இயக்கத்துக்கு வழங்குவதற்கு முன்வந்த இந்தியா

•எனது முதுகில் குத்திவிட்டார்கள். பிரதமர் ராஜீவ் காந்தி ஏமாற்றிவிட்டார் – பிரபாகரன்

தொடர்ந்து….

ஜுலை, 27-1987

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் போராளிகள் இயக்கப் பிரதிநிதிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களையும் அழைத்திருந்தனர்.

புலிகள் இயக்கத்தை மட்டும் அக்கூட்டத்துக்கு அழைக்கவில்லை.

இந்திய வெளியுறவுச் செயலாளர் கே.பி.எஸ். மேனன், வெளியுறவுத்துறை இணைச்செயலர் குல்தீப் சஹ்தேவ் ஆகியோர் இலங்கை அரசோடு இந்திய அரசு செய்து கொள்ளப்போகும் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

ஒப்பந்த நகல்

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் நகல்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன. பிரதிநிதிகள் அனைவரும் ஒப்பந்த நகல்களை ஒருமுறை புரட்டிப்பார்த்துக் கொண்டனர்.

தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச்சென்ற பின்னர் நன்கு வாசித்துக் கொள்ளலாம் என்று கையில் வைத்துக்கொண்டனர்.

தங்கள் கருத்துக்களைக் கேட்காமல் இரண்டு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு தயாராகிவிட்டன. ஒப்பந்தப்பத்திரமும் தயாராகிவிட்டது என்பது சகல பிரதிநிதிகளுக்குமே அதிர்ச்சியான ஒரு விடயம்தான்.

ஆனாலும் அதனை காட்டமாகத் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தனர்.

புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் வடக்கு-கிழக்கில் ஏனைய இயக்கங்களுக்குத் தளம் கிடையாது. கூட்டணியின் நிலையும் அதுதான்.

ஈரோஸ் இயக்கத்தைப் பொறுத்த வரை புலிளக் இயக்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கேற்ப நடந்து கொண்டால்தான் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது.

சொந்தக்காலில் நிற்கமுடியாத நிலையில் இந்தியவின் உதவியும், உறவும் அவசியம் என்ற சூழலில்தான் ஏனைய இயக்கங்கள் இருக்கின்றன என்பதும் இந்திய அரசுக்கு தெரியும்.

அதனால்தான் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கப்பிரதிநிதிகளையும், கூட்டணியையும் மட்டுமே வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழைத்துப் பேசினார்கள்.

இந்த அணுகுமுறையில் ஒரு தந்திரமும் இருந்தது. புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களிடம் பேசும் போது குறிப்பிட்ட ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டு விட்டார் என்று கூறலாம்.

அதேபோல புலிகளிடம் பேசும்போது ஏனைய இயக்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டன என்று ஒரு குண்டை தூக்கிப்போடலாம்.

இதெல்லாம் அரசியலில் இராஜதந்திரம் என்றே அழைக்கப்படும். ஏமாற்றுவேலை என்று கூறப்படுவதில்லை.

கருத்துச் சொல்லலாம்

தாம் சந்தித்த பிரதிநிதிகளிடம் அவர்களது மனம்கோணாமல் இருப்பதற்காக இந்திய வெளியுறவுச் செயலாளர் பின்வருமாறு கூறினார்.

“இந்த ஒப்பந்த ஷரத்துக்கள் தொடர்பான உங்கள் அபிப்பிராயங்களை எழுத்து மூலம் தெரிவியுங்கள். ஒப்பந்த ஷரத்துக்களில் எவற்றை மாற்ற வேண்டும். வேறு என்ன சேர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் தெரிவிக்கலாம்!”

ஒப்பந்தம் தயார். இரு அரசுகளுமே கைச்சாத்திட தயாராகிவிட்டன. அதில் இனிமேல் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது? கருத்துச் சொல்ல உரிமையுண்டு.

ஆனால் அதனைக் கவனத்திற் கொள்ளவோ ஒப்பந்தத்தில் சேர்க்கவோ இனி வழியே இல்லை என்பது பிரதிநிதிகளுக்கும் தெரியாத விடயமல்ல.

ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்கு என்றாலும் கருத்துக்களைக் கேட்டார்களே, அதுபோதும் எனத் திருப்திப்படும் நிலையில் தான் பிதிநிதிகள் இருந்தனர்.

தமிழ் அமைப்பு பிரதிநிதிகளிடம் ஒப்பந்தத்துக்கு ஓரளவு எதிர்ப்பு, கொஞ்சமானளவு மாற்றுக் கருத்து இருப்பதையும் இந்தியா விரும்பியது.

ஏனெனில், தாம் செய்யப்போகும் ஒப்பந்தம் தமிழர்களுக்கு முற்று முழுதாக சாதகமானது என்ற அபிப்பிராயமும் ஏற்பட்டுவிடக்கூடாதல்லவா?

தமிழ் அமைப்புக்கள் ஓரளவு அதிருப்தி தெரிவிப்பது அத்தகைய அபிப்பிராயம் எழாமல் தடுக்க உதவும் என்று இந்தியா நினைத்திருக்கலாம்.

ஆயினும் ஒப்பந்தத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி தம் கருத்தை தமிழ் அமைப்புக்கள் தெரிவிப்பதையும் இந்தியா விரும்பவில்லை.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை அதற்கு இடையூறு இல்லாத வகையில் தமிழ் அமைப்புக்களது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் போதும். அதுதான் இந்தியாவின் இராஜதந்திரம்.

சந்திப்பு முடிந்து பிதிநிதிகளிடம் விடைபெறும் முன்னர் என்ன நடந்தது தெரியுமா?

பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட்ட ஒப்பந்தப்பத்திர நகல்களை திருப்பித்தருமாறு கேட்கப்பட்டது. மறுக்கவா முடியும்? ஒப்படைத்தார்கள்.

“ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை ஒப்பந்த ஷரத்துக்கள் அந்தரங்கமாக வைக்கப்படவேண்டும்” என்று நகல்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டமைக்கு காரணம் கூறப்பட்டது.

மகஜர்கள் கையளிப்பு

இயக்கப் பிரதிநிதிகள் ஹோட்டலுக்கு திரும்பினார்கள். ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈ.என்.டி.எல்.எஃப், ரொலோ ஆகிய இயக்கப்பிரதிநிதிகள் ஹோட்டலில் கூடிப்பேசினார்கள்.

ஈரோஸ், புலிகள் இயக்கத்திற்கு சார்பானது என்பதால் தங்கள் கலந்துரையாடலுக்கு ஈரோசை அழைக்கவில்லை.

கிடைத்திப்பதை வைத்துக்கொண்டு இந்தியாவின் அனுசரணையோடு தம்மையும் மீண்டும் மறுசீரமைத்துக் கொள்ளவே கூட்டணி விரும்பியது.

புலிகளோ, ஏனைய இயக்கங்களோ கூட்டணி மீண்டும் இலங்கையில் தலையெடுப்பதை விரும்பவில்லை.

எனவே இந்தியா நேரடியாகத் தலையிடும் இந்த சந்தர்ப்பத்தைவிட்டால் தம்மை இலங்கையில் மீண்டும் தூக்கிநிறுத்த வேறு சந்தர்ப்பம் கிடையாது என்பதுதான் கூட்டணியின் நிலை.

அது மட்டுமல்லாமல் இந்தியா ஒரு முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் அதற்கு குறுக்கே நிற்பதைவிட, அனுசரித்துப்போய் இந்தியாவின் நட்பை பாதுகாத்துக்கொள்வதே சரியானது என்றும் அமிர்தலிங்கம் நினைத்தார்.

அதனால் ஒப்பந்தம் தொடர்பான தமது கருத்துக்களை தனியான ஒரு மகஜராக இந்திய அரசிடம் கொடுத்தது கூட்டணி.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரொலோ, ஈ.என்.டி.எல்.எஃப், புளொட் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக ஒரு மகஜரைக் கொடுத்தன.

அந்த இயக்கங்களும் ‘இந்தியா தலையிடும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் காலூன்றிவிடுவோம்.

முரண்பட்டுநின்றால் இலங்கைக்கு சென்று வடக்கு-கிழக்கில் நிலை கொள்ள வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. புலிகள் விடமாட்டார்கள்’ என்ற நிலையில் தான் இருந்தன.

இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்தது, ஒப்பந்த நகலை அவசர அவசரமா படித்தறிந்து, பின்னர் மகஜர் தயாரித்தது. இவை யாவும் ஒரே நாளில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள்.

பிரபாவும்-எம்.ஜி.ஆரும்

இதேவேளை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், திலீபன், யோகி ஆகியோர் புதுடில்லி அசோகா ஹோட்டலில் 518ம் அறையில் கடும் காவலுடன் தங்கியிருந்தனர்.

வெளியே கரும் பூனைகள் காவல் இருக்க உள்ளே பிரபாகரன் இருப்புக்கொள்ளாத நிலையில் இருந்தார்.

கூட்டணி உட்பட ஏனைய தமிழ் அமைப்புக்களைப் பற்றி இந்திய இரசு கவலைப்படவில்லை. புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை அதன் தலைவர் பிரபாகரனின் பிடிவாதம்தான் இந்தியாவுக்கு தலையிடியாக இருந்தது.

பிரபாகரனை சமாதானப்படுத்தி ஒப்பந்தத்துக்கு இணங்கவைப்பதற்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியை நாடியது இந்திய அரசு.

எம்.ஜி.ஆரையும் அழைத்துக் கொண்டு பிரபாகரனது அறைக்குச் சென்றார் திக்ஷித்.

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு எம்.ஜி.ஆர் முன்பாக வலியுறுத்தினார் திக்ஷத். பிரபாகரனோ பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தார்.

பிரபாகரனுக்கும், திக் ஷித்துக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது.

இருவரையும் தனது கறுப்புக்கண்ணாடி வழியாக கவனித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். சொன்னார்: “நான் பிரபாகரனோடு சில நிமிடங்கள் தனியாகப் பேச வேண்டும்!”

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை எம்.ஜி.ஆரிடம் தனியாக எடுத்துக்கூறினார் பிரபாகரன்.

எல்லாவற்றையும் கவனமாக செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் இறுதியாக பிரபாகரனிடம் சொன்னது இது:

“நீ என்ன முடிவு செய்கிறாயோ அதனை நான் ஆதரிப்பேன்!” சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர்.

தமிழ் நாட்டில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான பிமுகர்கள் பலர் பிரபாகரனோடு தொடர்பு கொள்ளவும், அவரது நிலையை அறியவும் முயன்றனர்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.

பிரபாகரனாலும் அசோகா ஹோட்டலில் இருந்து வெளியே தொடர்புகொள்ள முடியவில்லை. 518ம் இலக்க அறைக்கான தொலைபேசித் தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.

பிரபாகரன் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பரவத்தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தினருக்கும் அந்தச் செய்தி எட்டியது.

ராஜீவ் சந்திப்பு

ஜுலை 28ம் திகதி,

தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய இயக்கப் பிரதிநிதிகளை ராஜீவ் காந்தியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர் .

அனைவரையும் தனது வழக்கமான புன்னகையுடன் வரவேற்றார் ராஜீவ்காந்தி. பிரதிநிதிகளை குல்தீப் சஹ்தேவ் அறிமுகம் செய்து வைத்தார்.

ராஜீவ் காந்தியின் மேசையில் இரண்டு ஃபைல்கள் இருந்தன.

ஒரு ஃபைல் ஒப்பந்த ஷரத்துக்கள் அடங்கியது. இன்னொரு ஃபைலில் ஒப்பந்தம் தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் இருந்தன.

மாற்றுக்கருத்துக்கள் அடங்கிய மகஜர்கள் இருந்த ஃபைலைத் திறந்தார் ராஜீவ் காந்தி.

அதில் கூறப்பட்டிருந்த ஆட்சேபனைகளை சுட்டிக்காட்டிய ராஜீவ். “இவற்றை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்” என்று தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கு இணைப்புக்கு கிழக்கில் கருத்துக்கணிப்பு நடத்துவது தொடர்பான ஒப்பந்த ஷரத்துத்தான் இயக்கப் பிரதிநிதிகளால் கொடுக்கப்பட்ட மகஜரில் கடும் ஆட்சேபனைக்கு உள்ளாகியிருந்தது.

அந்த விடயத்துக்கு வந்தார் ராஜீவ்காந்தி. அவர் இயக்கப்பிரதிநிதிகளிடம் பின்வருமாறு கூறினார்.

“கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒரு போதும் நடக்கப்போவதில்லை. ஒப்பந்தத்துக்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே

அந்த ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜே.ஆர். இந்த விடயத்தில் உத்தரவாதம் தந்திருக்கிறார். எனவே இதனையிட்டு நீங்கள் கவலை கொள்ளத்தேவையில்லை.

சந்திப்பை முடித்துக்கொண்டு பிரதிநிதிகளோடு கை குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் ராஜீவ்காந்தி.

இயக்கப்பிரதிநிதிகளும் ராஜீவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு விடைபெற்றனர்.

அவர்கள் விடைபெறும்போது ராஜீவ்காந்தி கூறினார். “நான் இப்போது மிஸ்டர் பிரபாகரனை சந்திக்க செல்லுகிறேன்;.”

பிரபாவோடு ராஜீவ்

ஹோட்டல் அசோக்கில் பிரபாகரனைத் தேடிச் சென்று சந்தித்தார் ராஜீவ்.

ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியான பண்ருட்டி ராமச்சந்திரன், இந்திய மத்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே. நாராயணன் ஆகியோர் மட்டுமே உடன் இருந்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சை சேர்ந்தவர்களைக்கூட ராஜீவ் அழைத்துச் செல்லவில்லை.

“சிங்கள அரசுகளை நம்பி பலமுறை ஏமாந்துவிட்டோம். தமிழீழக் கோரிக்கையை கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது” என்று ராஜீவ் காந்தியிடம் கூறினார் பிரபாகரன்.

“ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். இலங்கை அரசு ஒப்பந்தத்துக்கு மாறாக நடந்துகொள்ளாமல் இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்று பிரபாகரனின் மனதை மாற்றுவதற்கு முயன்றார் ராஜீவ்.

ராஜீவ் ஒரு வழியால் சென்றால் பிரபா மறு வழியால் நழுவிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தி பொறுமையிழந்து சற்றுக் கடுமையாகவே வார்த்தைகளைப் பிரயோகித்தார்.

ஒரு கட்டத்தில் பிரபாகரன் கூறினார். “ஆயுதங்களை ஒப்படைத்தால் பாதுகாப்புப் பிரச்சினை இருக்கிறது. அதுமட்டுமல்ல இயக்கத்தை நம்பி வந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பராமரிப்பதும் பிரச்சினையாகிவிடும்.”

“சொந்தப் பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளலாம். இயக்க உறுப்பினர்களைப் பராமரிக்க இந்தியா நிதி உதவி செய்யும். மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.” என்றார் ராஜீவ்காந்தி.

மாதம் தோறும் இரண்டு இலட்சம் ஸடேர்லிங் பவுணை புலிகள் இயக்கத்துக்கு வழங்குவதாக இந்தியா உத்தரவாதம் கொடுத்தது. அதன் நம்நாட்டுப் பெறுமதி அப்போதைய மதிப்பில் 50 இலட்சம்.

வடக்கு-கிழக்கில் புணரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கும் இந்தியா உதவும்.

மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும். அதில் புலிகள் இயக்கத்தினர் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம். கூட்டணியினருக்கும் இடம் வழங்கவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார் ராஜீவ்காந்தி.

“ஈரோஸ் இயக்கத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார் பிரபாகரன்.

இறுதியில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக உறுதிகூறும் ஆவணமொன்றில் பிரபாவை கைச்சாத்திட வேண்டும் என்று கேட்டார் ராஜீவ்காந்தி. பிரபாகரன் உடனே உஷராகிவிட்டார்.

“தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக எதுவும் நடைபெறாது என்ற நிபந்தனையுடன் கையொப்பமிடுவேன்” என்றார். சம்மதித்தார் ராஜீவ். கையொப்பமிட்டார் பிரபாகரன்.

வேறு எந்த இயக்கத்திடமும் ஒப்பந்தத்தை ஆதரித்து இந்தியா கையொப்பம் வாங்கவில்லை.

புலிகள் இயக்கத்தினர் பலமான அமைப்பாக இருந்ததும் மட்டும் அதற்கு காரணமல்ல: பிரபாகரன் ஒருபோதும் தமிழீழப் போராட்டத்தைக் கைவிடமாட்டார்.

புதுடில்லியில் வைத்து ஒப்பந்தத்துக்கு சம்மதித்துவிட்டு, யாழ்ப்பாணம் சென்று மாறாக நடந்துகொண்டுவிடுவார் என்று இந்தியா நினைத்ததும் ஒரு காரணமாகும்.

புலிகள் இயக்கத்துக்கு மாதம்தோறும் 50 இலட்சம் நிதியுதவி கொடுப்பது, புலிகள் இயக்க தலைமைப்பீட பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிப்பது என்று பிரபாவோடு ராஜீவ் ஒப்புக்கொண்ட விடயம் மிக இரகசியமாக வைக்கப்பட்டது.

பிரபாவின் நிலை

பிரபாகரனிடம் இருந்து ராஜீவ்காந்தி விடைபெறும் போது அதிகாலையாகிவிட்டது.

பிரபாகரனை சம்மதிக்க வைத்துவிட்ட திருப்தியில் தூக்கம் இல்லாத அறிகுறியே தெரியாதளவுக்கு உற்சாகமாகக் காணப்பட்டார் ராஜீவ் காந்தி.

ஆனால் பிரபாகரனின் மன நிலையோ நேர்மாறானதாக இருந்தது.

நிர்ப்பந்தமும், சூழ்நிலை காரணமாகவும் வேறு வழியின்றி விட்டுப்பிடிக்கவே நினைத்தார் பிரபாகரன். இந்தியாவின் போக்கு பிரபாகரனுக்கு பிடிக்கவேயில்லை.

ராஜீவ்-பிரபா சந்திப்பின் பின்னர் பிரபாகரன் தொலைபேசியில் பேச முடிந்தது.

அன்று தி.மு.க.வின் முக்கிய பிரமுகராக இருந்த பிபாகரனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

வை. கோபாலசாமியிடம் பிரபாகரன் என்ன கூறினார்?

அதனை வை. கோபாலசாமியே பின்னர் ஒரு முறை இப்படி நினைவு கூர்ந்தார். “அவருடைய குரல் இப்பபோதும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது.

பிரபாகரன் என்னிடம் சொன்னார்: ‘நாங்கள் இந்திய அரசாங்கத்தாலும், பிரதமர் ராஜீவ் காந்தியாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.

எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் குப்பி கழுத்தில் தொங்குகிறது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன்.

ஆனால் அது என்னால் முடியாது. பல்லாயிரக்கணக்கான என் சகோதர சகோதரிகள் உள்ளனர். அதனால் அம்முடிவை என்னால் எடுக்க முடியவில்லை!”

இதே நேரம் ராஜீவ் காந்தியை தீர்த்துக்கட்ட ஒரு சதித்திட்டம் கொழும்பில் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளை வெளியிடும் விஜய் ஆண்டனி…!!
Next post இந்த தாத்தாவின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா? வீடியோ