2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-18)
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும் எழத் தொடங்கியிருந்தது.
ஒரு அரசில் இரண்டு கட்சிகள் சக வாழ்வு நடத்தும் அரசியலும் ஒரு பரிசோதனைக் களமாக அமைந்தது. பல அதிகாரங்களைக் கொண்ட சந்திரிகா ஜனாதிபதியாகவும், பாராளுமன்ற அதிகாரத்தினை ரணிலும் வைத்திருந்தார்கள்.
நோர்வேயின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உருப்படியாக எதையும் சாதிக்க முடியவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் மிகவும் பலவீனப்பட்டதாக இருந்தது.
புலிகள் தரப்பில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினைப் பலப்படுத்தவும், பேரம் பேசும் ஆற்றலை வலுப்படுத்தவும் சமாதான முயற்சிகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சமாதான முயற்சிகள் சாத்திமானால்தான் வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியம் என்பதால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த முயன்றார்கள்.
2004ம் ஆண்டு தேர்தல் நாட்கள் நெருங்க நெருங்க அரச தரப்பினர் பேச்சுவார்த்தைகளையே தமது தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக மாற்றி வந்தார்கள்.
இருப்பினும் கருணாவின் பிளவு புலிகளுடன் பேசுவதற்கான வாய்ப்புகளைத் துரிதப்படுத்தும் என எண்ணினார்கள்.
அரசாங்கம் புதிய நிபந்தனைகளைப் போடுமானால் தாம் போரை நோக்கித் திரும்ப நேரிடும் என தமிழ்ச்செல்வன் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.
அதே நிலை ராணுவத்திற்குள்ளும் பேச்சுவார்த்தைகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
போர்நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி புலிகள் போருக்கான தயாரிப்புகளை அதிகரிக்கலாம் எனவும், ராணுவம் பலவீனப்படும் அபாயம் உண்டு எனவும் எச்சரித்து வந்தனர்.
ஆனால் ரணில் போர்நிறுத்த வாய்ப்புகளை அரசியல் தீர்வாக மாற்றும் சந்தர்ப்பமாக மாற்றி சகல சமூகங்களும் அமைதியாக வாழும் எதிர்காலம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்து வந்தார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே வி பி என்பன கூட்டணி அமைத்த போதிலும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக முரண்பாடானான நிலைப்பாடுகளோடு செயற்பட்டனர்.
இப் பின்னணியில் விடுதலைப்புலிகள் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பகிரங்கமாக ஈடுபட்டனர்.
தமிழர் கூட்டமைப்பினை தமது அணியாக முன்வைத்து பிரச்சாரத்தை நடத்தினர்.
தனது கட்சியே சமாதானத்தை முன்னெடுக்கும் சக்தியாக உள்ளதாக ரணில் நடத்திய பிரச்சாரம் ஏப்ரல் 4ம் திகதிய முடிவில் தோல்வியாக அமைந்தது.
சந்திரிகா தலைமையிலான அரசு 225 ஆசனங்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களைக் கைப்பற்ற ஐ தே கட்சி 82 ஆசனங்களை மட்டுமே பெற்றது.
சந்திரிகா அரசு நாட்டின் பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமரை நியமிக்க எண்ணியிருந்த போதிலும் கட்சிக்குள் மகிந்தவிற்கு அதிகளவு ஆதரவு இருந்ததால் அவரே பிரதமரானார்.
ரணிலின் தோல்விக்குக் காரணம் சமாதான முயற்சிகளைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட சந்தேகங்களே தவிர சமாதானத்தில் மக்கள் அவ நம்பிக்கை கொள்ளவில்லை
என அரசியல் ஆய்வாளர்கள் எழுதினர். ரணிலின் முயற்சிகள் புலிகளைச் சாந்தப்படுத்துவதாக அமைந்தது எனவும் தெரிவித்தனர்.
இத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் தீவிரவாதப் போக்கினை அனுசரித்த ஜே வி பி, ஜாதிக கெல உறுமய போன்ற கட்சிகள் தமது ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளனர்.
ஜே வி பி இனர் 40 ஆசனங்களையும், இரண்டுமாத ஆயுளைக் கொண்ட ஜாதிக கெல உறுமய 9 ஆசனங்களையும் பெற்றனர்.
இதன் காரணமாக ஜே வி பி இனர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் மந்திரிப் பதவிகளையும் பெற்றனர். மறு பக்கத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவில் இயங்கிய கூட்டமைப்பு 22 ஆசனங்களையும் கைப்பற்றியது.
லக்ஸ்மன் கதிரகாமர்
தேர்தல் முடிவின் பின்னர் இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து எரிக் சொல்கெய்ம் தெரிவிக்கையில் லக்ஸ்மன் கதிரகாமர் பிரதமராக்கப்பட்டிருந்தால் அவர் எதிர்காலத்தில் ஏனையோருக்கு சவாலாக இருந்திருக்கமாட்டார்.
ஓரு தமிழரால் இலங்கை அரசில் வகிக்கக்கூடிய அதி உயர் பதவி வெளிநாட்டமைச்சு மட்டுமாகத்தான் இருந்திருக்க முடியும்.
ஜே வி பி, சுதந்திரக்கட்சிக் கூட்டு என்பது வசதிக்காக ஏற்படுத்திய திருமணமே ஆனால் அவ் இணைப்பு அரசாங்கத்தை சக்தி மிக்கதாக மாற்ற உதவலாம்.
ஜே வி பி எம்முடன் பேச விரும்பியதில்லை. சந்திரிகாவே தொடர்பாளராக செயற்பட்டார்.
மகிந்த எம்முடன் நட்புறவுடன் நடந்து கொண்டார். நாம் சம்பவங்களை அவ்வப்போது தெரிவித்து வந்தோம்.
அவர் எம்மிடன் கேள்விகளைக் கேட்பார். ஆனால் அவர் மனம் திறந்து பேசியதில்லை.
சமாதான முயற்சிகளை அவர் எதிர்ப்பதற்கான சமிக்ஞைகளை நாம் காணவில்லை. ஏதாவது அறிக்கைகள் அவரது அரசியலுக்கு உதவும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவை சரியானவை என்பதை இறுதி முடிவுகள் அவருக்கு உணர்த்தியிருக்கின்றன.
நோர்வே நாட்டிற்கான தூதுவர் இத் தேர்தல் முடிவுகள் பற்றித் தெரிவிக்கையில்ராஜபக்ஸ மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சி அடித்தளத்தைக் கட்டியிருந்தார்.
சந்திரிகாவிற்குப் பின்னர் தாமே அப் பதவிக்கு செல்ல முடியும் என உறுதியாக நம்பினார். ஜே வி பி உடன் சந்திரிகா கூட்டு அமைத்த போது அது சமாதான முயற்சிகளுக்கு இடராக இருக்கும் என நாம் எண்ணினோம்.
தனது கணவரைப் படுகொலை செய்த கட்சியுடன் அணிசேர அவர் சென்றமைக்குக் காரணம் ரணிலுக்கும் அவருக்குமிடையே காணப்பட்ட எதிர் உணர்வுகளே.
அரசியல் அமைப்பை மாற்றுவது குறித்து உட் கட்சிப் போராட்டம் நடைபெற்று வந்தது. சமாதான முயற்சிகள் என்பது ரணில் ஆரம்பிப்பதற்கு முன்னர் தன்னால் ஆரம்பிக்கப்பட்டவை என்பதால் அவற்றைத் தொடர்வதற்கு ராஜபக்ஸவை விட கதிர்காமர் பொருத்தமானவர் என்பதால் அவரை வைத்தே திட்டத்தை நிறைவேற்றலாம் என சந்திரிகா நம்பினார்.
அது போலவே நாம் பிரதமாரான ராஜபக்ஸவுடன் சமாதான முயற்சிகள் பற்றிப் பேசிய வேளைகளில் அவற்றை சந்திரிகாவுடன் பேசுமாறு அவர் தெரிவித்து வந்தார்.
நான் கதிர்காமருடன் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த போதே பேசியுள்ளேன். ஆனால் அவர் சிறந்த ராஜதந்திரி. திறமை மிக்கவர். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என விரும்பியவர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய சில நாட்களுக்குள்ளாகவே கருணா தரப்பினர் மீது கடும் தாக்குதல்களை புலிகள் தொடுத்தனர்.
இதன் காரணமாக கருணாவின் ஆட்கள் வெருகல் ஆற்றிற்கு அப்பால் பின்வாங்கினர்.
48 மணி நேரங்களில் கிழக்குப் பகுதி புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
2004ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த சகல முகாம்களும் அழிக்கப்பட்டதாக புலிகளின் செய்தி வெளியானது.
இக் காலகட்டத்தில் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான தொகைப் போராளிகள் வன்னியில் இருந்தனர். அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்கள் என பிரபாகரன் கருதியதால் அவர்களைப் பயன்படுத்தியே இவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
கருணாவின் தோல்வி குறித்து எரிக் சொல்கெய்ம் தெரிவிக்கையில்….
கருணாவின் இறுதிக்கால நடவடிக்கைகள் பரிதாபத்திற்குரியவை. அவருக்கு இடைநிலை அரசியலைத் தொடர வாய்ப்பிருக்கவில்லை. அதனால் அவர் அரசின் கைப்பொம்மையாக மாறினார்.
கருணாவிற்குப் பின்னர் அங்கு சுயமான அரசியல் ஒன்று இருக்கவில்லை. அதன் பின்னர் கருணா தரப்பினர் பல கொலைகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
எமக்கு அதில் சந்தேகம் இருக்கவில்லை. ஏனெனில் அவை அரசின் துணையோடு இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.
அரசு கருணாவின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் கருணாவை விரும்பிய நேரத்தில் பாவிக்கவும் கைவிடவும் ராணுவ உளவுப் பிரிவிற்கு வாய்ப்பு இருந்தது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இரண்டு பிரச்சனைகள் முன்னணியில் வாதிக்கப்பட்டன. அதாவது புதிய அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்துவது, சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது என்பதாகும்.
புதிய அரசியல் அமைப்பைக் கொண்ட வருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அகற்றுதல் என்ற விவாதங்கள் எடுக்கப்பட்டபோது அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் தேசிய அரசுப் பேரவையைக் கூட்டி சாதாரண பெரும்பான்மையடன் அதனை நிறைவேற்ற எண்ணினர்.
இம் முயற்சியானது சந்திரிகாவை மீண்டும் ஜனாதிபதி பதவியில் வைத்திருக்க மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சி என விவாதங்கள் எழுந்தன.
2005ம் ஆண்டு சந்திரிகாவின் பதவி முடிவடைவதால் ஜனாதிபதி பதவி இல்லாமல் போனதும் அவர் பிரதமராகலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில் பாராளுமன்ற சபாநாயகர் தெரிவில் ராஜபக்ஸவின் தெரிவு சாத்தியமாகவில்லை. பதிலாக எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட லொக்கு பண்டார மேலதிக ஒரு வாக்கினால் தெரிவானார்.
சமாதான முயற்சிகளில் புதிய அரசாங்கம் புதிய சவாலை எதிர்நோக்கியது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சகல தரப்பினரையும் ஒத்துழைக்குமாறு சந்திரிகா வேண்டினார்.
இத் தருணத்தில் கருணா தரப்பினரை எவ்வாறு கையாள்வது? என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும் நிலமை அவ்வாறு இருக்கவில்லை.
கருணா தரப்பினர் மீது கடும் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போதும் அவை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக யாரும் பேசவில்லை.
மகிந்த பதவியேற்ற சில நாட்களுக்குள் வெளிநாட்டு ராஜதந்திரி என்ற வகையில் இந்தியத் தூதுவரே ராஜபக்ஸவை முதன் முதலாக சந்தித்தார் .
அப்போது இப் பிரச்சனையில் இந்தியா ஈடுபடவேண்டுமென ராஜபக்ஸ கோரியபோது இந்தியத் தூதுவர் மிகவும் சாதுரியமாக நிராகரித்தார்.
புதிய தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளே அமையவேண்டுமெனத் தெரிவித்தனர்.
தேர்தலின் பின்னர் காணப்பட்ட முக்கிய அரசியல் மாற்றமாக சபாநாயகர் தெரிவில் இடம்பெற்ற தோல்விப் பிரச்சனைகள் எதிர்கால அரசியல் போக்கை உணர்த்துவதாக அமைந்தன.
மே 1ம் திகதி நோர்வே தரப்பினர் மீண்டும் சமாதான முயற்சிகளைத் தொடர இலங்கை வந்தனர்.
கிளிநொச்சி சென்ற எரிக் சோல்கெய்ம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் அமைய வேண்டுமெனவும், விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தினர்.
இதன் பிரகாரம் வேறு எவருக்கும் ராணுவ அல்லது வேறு வகையிலான உதவிகள் எதனையும் வழங்கக்கூடாது என வற்புறுத்தினார்கள்.
கருணா தரப்பினரை ஓரங்கட்டுவது, முஸ்லீம் பிரதிநிதிகளைத் தவிர்ப்பது என்பது அரசிற்குப் பெரும் சவாலாக அமைந்தது.
2002 இல் வாழைச்சேனையில் இடம்பெற்ற கலவரங்கள் சிங்கள ஆட்சியில் இணைந்து வாழ முடியாது என்ற முடிவிற்குக் கிழக்குத் தமிழரைத் தள்ளின. அதே போன்று தமிழரின் ஆதிக்கத்தில் தம்மால் சமாதானமாக வாழ முடியாது என முஸ்லீம் மக்கள் கருதினார்கள்.
இப் பின்னணியில் பேச்சுவார்த்தைக்கான புதிய நிபந்தனைகள் படிப்படியாக எழுந்தன. நிரந்தர தீர்வுக்கான பேச்சவார்த்தைகள் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளை விவாதிக்கும் சமகாலத்தில் தொடர வேண்டுமென்ற கோரிக்கையை நோர்வே தரப்பிடம் சந்தரிகா தெரிவித்திருந்தார்.
இச் செய்தியுடன் கிளிநொச்சி சென்ற நோர்வே தரப்பினருக்கு இறுதித் தீர்வு குறித்த செய்தி பற்றிய தமது அதிருப்தியை பாலசிங்கம் வெளியிட்டார்.
தாம் அரசியல் அமைப்பு மாற்றம் ஏற்படும் வரை நிரந்தர தீர்வு பற்றிப் பேச முடியாது எனத் தெரிவித்த பாலசிங்கம் இடைக்கால நிர்வாகம் பற்றியே பேசலாம் ஏனெனில் சிறுபான்மை அரசாங்கமாகவும், தொங்கு நிலையிலும் உள்ள அரசுடன் நிரந்தர தீர்வு பற்றிப் பேச முடியாது என பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.
வாசகர்களே,
இந் நூலில் தரப்பட்டுள்ள விபரங்களில் சில எமக்கு ஏற்கெனவே அறியப்பட்டதாக இருந்த போதிலும் நிகழ்வுகளின் போக்குகளை நாம் தொடர்ச்சியான சம்பவங்களின் மீது பார்வையைச் செலுத்தும்போதே அதன் போக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.
2002ம் ஆண்டு தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தைகளும் அரசியல் ரீதியாக ஒரு சிறிதளவும் நகராமல் இறுகிய நிலையில் இருந்தமைக்கான காரணத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
( மீண்டும் தொடரும்)
Average Rating