தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம்…!! கட்டுரை
முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
உலகின் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த அரசர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜ் கடந்தவாரம் மரணமடைந்தார். 70 ஆண்டுகளாகத் தாய்லாந்தின் மன்னராக இருந்த இவரின் ஆட்சிக்காலத்தில் அந்நாடு பாரிய மாற்றங்களைக் கண்டது. அம்மாற்றங்களின் விளைவால் தாய்லாந்து மக்களின் மிகவும் விருப்பத்துக்கும் மரியாதைக்கும் உரிய ஒருவராக மறைந்த தாய்லாந்து மன்னர் விளங்கினார். இவர் மன்னராகப் பதவியேற்கும் போது ஏராளமான நாடுகள் முடியாட்சிகளாக இருந்தன. இவர் இறக்கும் போது உலகில் 17 நாடுகள் மட்டுமே ஏதோ ஒருவகையான முடியாட்சியைக் கொண்டிருக்கின்றன.
தாய்லாந்தை அறிந்தவர்களை விட, அதன் தலைநகரான பாங்கொக்கை அறிந்தவர்கள் பலர். மிகவும் பிரபலமான, ஆசியாவின் சுற்றுலாத் தளமாக அறியப்பட்ட தாய்லாந்து, உலகின் சனத்தொகையை அதிகம் கொண்ட நாடுகளில் 20 ஆவது இடத்தை வகிக்கிறது. தாய்லாந்து தென்கிழக்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். அது கம்போடியா, லாவோஸ், மியன்மார், மலேசியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டது. 1932 ஆம் ஆண்டுவரை அரசரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் முழுமுடியாட்சியாகத் திகழ்ந்தது. முடியாட்சித் தத்துவம் தென்கிழக்காசியாவில் பௌத்த இராச்சியம் என்பதன் அடிப்படையில் பத்துத் தர்ம கட்டளைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆட்சியின் கோட்பாடும் இந்துமதத்தின் அடிப்படையில் அமைந்த கடவுளின் பிரதிநிதியாக அரசன் என்ற இரண்டு அடிப்படைகளினதும் கலவையாகப் பல ஆசிய சமூகங்களில் தோற்றம் பெற்று நிலைத்தது. இதன் அடிப்படைகளே தாய்லாந்தில் முழுமையான முடியாட்சிக்கு வழிவகுத்தன.
1932இல் இராணுவத்தினரும் அறிவுஜீவிகளும் ஒன்று சேர்ந்து முழுமையான அதிகாரங்களை உடைய முடியாட்சியைத் தூக்கியெறிந்து அரசியலமைப்பு ரீதியான கட்டுப்பாடுகளை உடைய முடியாட்சிக்கு வழிவகுத்தனர். இதனை அப்போதைய அரசராக இருந்த பிரஜோதிபொக் (தற்போது காலமான அரசரின் தந்தையார்) விரும்பாத போதும் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் அதை ஏற்றுக்கொண்டார். இருந்தபோதிலும் பின்னர், முழுமையாக முடியாட்சி ஒழிக்கப்பட்டு விடும் எனப் பயந்து நாட்டை விட்டுத் தப்பியோடினார். அதன் பின் அரசகுடும்பம் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரை நாடு திரும்பாமல் சுவிஸ்லாந்திலேயே தங்கியிருந்தனர்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் நாடு திரும்பிய அரசகுடும்பம், மன்னர் பிரஜோதிபொக்கின் மறைவையடுத்து மூத்த மகன் ஆனந்த மகிடோல் அரசரானார். 1946 இல் இன்றுவரை விளக்கப்படாத சம்பவமாக உள்ள மன்னர் மகிடோல் சுட்டுக்கொல்லப்பட்டதானது மகிடோலின் தம்பியான பூமிபோல் அடுல்யடேஜ் தனது 18 ஆவது வயதில் மன்னராக வழி செய்தது.
மன்னர் பூமிபோலின் 70 ஆண்டுகால முடியாட்சியில் 17 அரசியல் யாப்புக்களும் 19 க்கும் மேற்பட்ட ஆட்சிமாற்றப் புரட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற ஒரு நாட்டில், ஒரே தொடர்ச்சியான புள்ளியாக மன்னரின் அடையாளம் தாய்லாந்து மக்களின் முக்கிய சின்னமாகியது. பல இராணுவ ஆட்சிகளுடன் கைகோர்த்துத் தன் முடியாட்சியைக் காத்தது மட்டுமன்றி, இராணுவ ஆட்சிகளுக்கான சட்டரீதியான அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததும் மன்னரே. அவ்வகையில் தாய்லாந்து வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த பெருமை மன்னர் பூமிபோலையே சாரும்.
தாய்லாந்தின் சட்டமானது, அரசருக்கோ அரச குடும்பத்தினருக்கோ எதிரான கருத்துக்களோ செயற்பாடுகளோ மிகவும் மோசமான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. இதன்மூலம் அரசாட்சியின் புனிதத் தன்மையைத் தகவமைத்துக் கருத்துச் சுதந்திரத்துக்கான கதவுகளை இறுக்கி மூடுவதன் ஊடு, கடந்த பல தசாப்தங்களாக மன்னராட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தது. மன்னரின் மறைவு புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.
ஆனால், தாய்லாந்தில் ஜனநாயகம் மலர்வதற்கான போராட்டம் அம்மக்களிடமிருந்து உருவாக வேண்டும். அதற்கு மன்னராட்சியைத் தக்க வைப்பதன் ஊடு, இராணுவ – உயர்குடிக் கூட்டாளிகளின் தொடர்ச்சியான அதிகாரங்கள் வரலாற்றை முக்கியமான ஒரு பற்றுக்கோடாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். வரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் பின்வருமாறு சொல்கிறார்:
“கடந்த கால மோகம் என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கு எப்படியோ அதுபோலதான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். நான் எனது மனத்துக்குள் சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை உணர்ந்து கொள்வதில் தவறிவிட்டது என முடிவு செய்தால், அது என்னை எங்கு கொண்டுபோய் விடும்? இந்த மாதிரியான தவறான எண்ணங்கள், நான் எனது சகமனிதர்களுடன் சகஜமான உறவு வைத்துக் கொள்வதைப் பாதிப்பதோடு மட்டும் அல்லாமல் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனிப்பட்ட நபருக்கு நடப்பதுதான்; கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும் அது மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர்நரம்பைக் கத்தரித்து அவர்களுடைய முன்னேற்றத்துக்கான திறனையே அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது.”
வரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச்சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகாலனித்துவ உலக ஒழுங்கில் தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம்; ஆனால் எம் நினைவுகளை, பூர்வீக வீரப்பிரதாபங்களைச் சுமந்தபடிதான் பயணித்துக்கொண்டிருக்கிறோம்; வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ளமுடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். விடுதலைக்கான போராட்டங்களும் உரிமைகளுக்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறன.
தாய்லாந்தில் மன்னரின் மறைவையடுத்து அறிவிக்கப்பட்டுள்ள ஓராண்டுகால துக்க அனுஸ்டிப்பும் அதை மையப்படுத்திய மன்னரையும் அப்பதவியையும் புனிதப்படுத்தும் நிகழ்வுகளும் தாய்லாந்து மக்களை வரலாற்றின் கைதியாக வாழ வைக்க முனைகின்றன. இப்போது நடைபெறுவதை வரலாற்றில் முன்னர் நாம் கண்டிருக்கிறோம்.
எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் முதலாம் உலக யுத்தத்துக்குப் பிந்தைய காலம் வரையிலும் ஜனநாயகம் முழுமையடையவில்லை. முடியாட்சி என்பதே அன்றைய நாட்களின் சட்டமாக இருந்தது. ரஷ்யா, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் ஏகாதிபத்திய முடியாட்சிகள், பிரிட்டனில் அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சி, ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி அமைப்பைவிடத் தாழ்ந்த முடியாட்சி அமைப்புக்கள் என வேறுவேறு வகைப்பட்ட, ஆனால் முடியாட்சியை மையப்படுத்திய அரசுகளே இருந்தன.
முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சூழலில் ‘போல்ஷ்விக் புரட்சி’ ரஷ்ய முடியாட்சியை அகற்றியது. ஆனால், ஜேர்மனி, இத்தாலி ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பாரம்பரிய அரசுகள் நிலையான ஜனநாயக அமைப்புகளுக்கு வழிவிடாமல் அதற்குப் பதில் பாசிசத்துக்கும் இராணுவ சர்வாதிகாரத்துக்கும் வழிவகுத்தன. இதுதான் தாய்லாந்திலும் நடந்தது.
உயர்குடிகள் – இராணுவம் – மன்னராட்சி என்ற முக்கூட்டுச் சக்தி, உலகமயமாதலின் உதவியுடன் ‘அபிவிருத்தி’ என்பதன் பெயரால் உழைப்பைச் சுரண்டும், வழிவகைகள் கடந்த ஜந்து தசாப்தங்களாக அரங்கேற்றி வந்துள்ளன. தாய்லாந்தின் கேந்திர முக்கியத்துவமும் ஆசியாவின் மீதான அமெரிக்காவின் ஆவலுக்கான பாயும் சுருள்கம்பியாக அதன் பாகமும் மூலதனத்தின் நீட்சியை பொருளாதார நலன் சார்ந்ததாகவும் மாற்றியமைத்துள்ளது.
1990களின் வேகமான வளர்ச்சியடைந்த ஆசியாவின் பொருளாதார அற்புதங்களில் ஒன்றாக தாய்லாந்தும் இருந்தது. 1997இல் ஆசியாவைத் தாக்கிய பொருளாதார நெருக்கடியின் விளைவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட போது ‘ஆசியாவின் பொருளாதார அற்புதம்’ ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியதற்கும் அப்பால் எதையும் சாதிக்கவில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றியது.
சர்வதேச நாணய நிதியம் தாய்லாந்தைப் பிணையெடுக்க உலகமயமாக்கலும் திறந்த சந்தையும் உழைப்புச் சுரண்டலுக்கும் மலிவு விலையில் மனிதக்கூலிக்கான இடமாகத் தாய்லாந்து மாறியது. இதை எதிர்த்த தொழிற்சங்கவாதிகள், இடதுசாரிகள் மீது அரசாங்கம் வன்முறையை மோசமாக ஏவிவிட்டது. இதன் மூலம் சர்வதேச நிதிமூலதனத்தின் கோரப்பிடியில் சிக்கி சாதாரணமான தாய்லாந்து மக்கள் சீரழிகின்றனர். இவையனைத்தும் அரசரின் அங்கிகாரமும் அனுமதியும் ஆசீர்வாதத்துடனேயே இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து நவ தாராளவாதத்தின் முக்கியமான ஆசியப் பரீட்சைக்கூடமாக மெதுமெதுவாக மாற்றப்பட்டது. அரசியலில் ஈடுபடுவோரின் தரம் தாழ்ந்துள்ளது என்ற அனுபவ உண்மையைக் காட்டி, மக்களின் அரசியல் தெரிவுரிமை மறுக்கப்பட்டது. ‘தொழில் துறையின் தானைத் தலைவர்கள்’, ‘தொழில் முனைவோர்’ ஆகியோரே அபிவிருத்தியின் பிரதான தளக்கர்த்தாக்களாயினர். மேற்படித் தொழில் துறைத் தளபதிகளும் தொழில் முனைவோரும் இந்த நுட்பமான ஏற்பாட்டில், நவீன தாராளவாத மேம்பாட்டுத் திட்டங்களை உயர்த்திப் பிடிப்போராக, மேம்பாட்டுக்கு உறுதியளிப்போராக, அதனை உருவாக்குவோராக காட்டப்படுகிறார்கள். ‘அரசியல்வாதிகள்’ தரம் தாழ்ந்து விட்டார்கள் என்பதைப் பயன்படுத்தி ‘அபிவிருத்தி’ என்ற நவீன தாராளவாதக் கருத்தாக்கத்தைப் புனிதமாகத் தாக்குகிற முயற்சி நடந்தது. இதனால் அபிவிருத்தியின் பேரால் நவதாரளவாதமும் சுரண்டலும் தாய்லாந்தின் முக்கிய அம்சங்களாயின. அரசியல் பின்தள்ளப்பட்டது. மன்னர் இறந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய தாய்லாந்துப் பிரதமர், “‘இவ்வளவு துயரமான வேளையிலும் வர்த்தகமும் வியாபாரமும் பாதிக்க இடமளிக்க வேண்டாம். கடைகளை வியாபாரத் தளங்களை மூடிப் பொருளாதார மந்த நிலையை உருவாக்க வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டார். இவை ‘இலாபத்தில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளல்’ என்பதைச் சரியாகச் செய்ய வேண்டப்படுகிறது.
உலகின் பணக்காரர்களைப் பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜை உலகின் மிகவும் பணக்கார முடியாட்சியாக அடையாளப்படுத்தியுள்ளது. இவரது சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிதிமூலதனத்தின் முக்கிய பாதுகாவலனாகவும் சேவகனாகவும் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜ் இருந்தார். இதனால் அவரது மறைவு தாய்லாந்து உயர்குடிகளுக்கும் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் ஒரு சவாலாகியுள்ளது. தற்போதுள்ள நிலையைத் தக்கவைக்கப் பல்வேறு புதிய யுத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது. இப்பின்னணியே தாய்லாந்தின் முடியாட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
இது முடியாட்சிகளின் எதிர்காலம் குறித்த இன்னொரு விவாதத்தை நோக்கி நகர்த்துகிறது. பெயருக்காகவும் ஒரு தோற்றப் பொலிவுக்காகவுமானதாக மாறியுள்ளதை மக்கள் அவதானிக்கிறார்கள். நேபாளத்தில் நடந்த புரட்சி, அரசர் தலைமையிலான ஆட்சியை இல்லாதொழித்து மன்னரை வீட்டுக்கு அனுப்பியது. பிரித்தானியாவின் பொருளாதா நெருக்கடி பிரித்தானிய மகாராணியின் எதிர்கால இருப்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
காலமாற்றம் வித்தைகளைச் செய்யவல்லது. அவ்வகையில் முடியாட்சிகள் என்ற உறுதியற்ற அடித்தளத்தில் பாரம்பரியம், இறைவனுக்கு அடிபணிதல் போன்ற பண்பாட்டுக் கருவிகளை ஏவுவதன் ஊடு தனது தப்பிப்பிழைத்தலுக்கான வாய்ப்புகளைத் தேடுகிறது. மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்பட்டு உரிமைகளுக்காகப் போராட உந்தப்படுகிறார்கள். இது முடியாட்சிகளின் முடிவை அறிவிக்கக்கூடும். ஏனெனில் இருக்கின்ற முடியாட்சிகள் நீரோ மன்னனுக்கு நிகரானவர்கள்.
Average Rating