புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -91) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட பிரபாகரன்
ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின.
இரண்டும் MI-17 -17 ரக ஹெலிகொப்டர்கள். பிரபாவை வழியனுப்பி வைத்தார் புலிகள் இயக்க பிரதித்தலைவர் மாத்தையா.
இக்கால கட்டத்தில் கிட்டு சென்னையில் இருந்தார். சென்னையில் இருந்த புலிகள் இயக்க அலுவலகத்தின் வேலைகள் கிட்டுவின் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன.
தனது காலுக்கு சிகிச்சை செய்யவே கிட்டு தமிழகம் சென்றார் என்று புலிகள் இயக்கத்தினரால் கூறப்பட்டது.
சிகிச்சைக்காக மட்டும் அவர் செல்லவில்லை. யாழ்ப்பாணத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் கிட்டு. யாழ்ப்பாணத்தில் மாத்தையாவின் ஆதிக்கம் ஏற்பட்டுவிட்ட பின்னர் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க விரும்பவில்லை.
கிட்டு தமிழ்நாட்டுக்கு சென்றதும் அங்கு அவருக்கு மரியாதை கிடைத்தது. கிட்டுவைப் பற்றி பத்திரிகைகள் வாயிலாக தமிழக மக்கள் முன்னரே அறிந்திருந்தனர்.
கிட்டு ஒரு அசாத்தியமான வீரர். இலங்கைப் படைகளுக்கு தண்ணிகாட்டி வருபவர். பயங்கரமான பேர்வழி என்றெல்லாம் என்றெல்லாம் தமிழக மக்களும், தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்களான முக்கியஸ்தர்களும் தங்கள் மனதில் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.
குள்ளமான உருவத்துடனும், சாந்தமான முகத்துடனும் மூக்குக் கண்ணாடியுடனும் கிட்டுவைக் கண்டவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
“பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் மனிதரா இலங்கைப்படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்?” என்று வியந்தனர்.
முக்கிய பிரமுகர்களும், தமிழகப் பத்திரிகையாளர்களும் சென்னையில் உள்ள புலிகள் இயக்க அலுவலகத்தில் கிட்டுவை தினமும் சந்தித்தனர்.
தமிழக வார இதழான ‘தேவி’ என்னும் சஞ்சிகை கிட்டுவிடம் அவரது அனுபவங்களை எழுதுமாறு கேட்டு வாராவாரம் தொடராக வெளியிட்டது.
கிட்டு எங்கு சென்றாலும் அங்கு பிரபலமாகிவிடுவார். தமிழ்நாட்டில் புலிகள் இயக்க வேலைகள் பேபி சுப்பிரமணியமே முன்னின்று செய்து வந்தார். ஆனாலும் கிட்டுதான் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானவர்.
கிட்டுவை ‘றோ’ அதிகாரிகளும் தினமும் சந்தித்துக் கொண்டிருந்தனர்.
இலங்கை அரசை ஒரு தீர்வுக்கு நிர்ப்பந்திக்கும் காரியங்கள் நடைபெற்று வருகின்றன என்ற தகவலும் கிட்டுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
எம்.ஜி. ஆருக்கு தகவல்
இதற்கிடையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தகவல் அனுப்பிவிட்டார்.
இலங்கை அரசோடு ஏற்படப்போகும் உடன்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையானது. திருப்திகரமானது என்பதை எம்.ஜி.ஆருக்கு முதலில் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தார் ராஜீவ்.
எம்.ஜி.ஆருக்கு புரியவைத்து அவரும் அதனை ஏற்றுக்கொண்டால்தான் தமிழக மக்களிடம் தப்பான அபிப்பிராயங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனிடம் எம்.ஜி.ஆருக்கு நெருக்கம் இருப்பதும் ராஜீவுக்கும் தெரியும். அதனை பயன்படுத்தி எம்.ஜி.ஆர் மூலம் பிரபாகனை இந்தியாவின் முயற்சிக்கு உடன்படவைக்கலாம் என்பதும் ராஜீவ்காந்தியின் திட்டம்.
அதனால் எம்.ஜி.ஆரையும் புதுடில்லிக்கு அழைப்பித்தார் ராஜிவ்காந்தி. பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அப்போது தமிழ் நாட்டில் மின்சார அமைச்சர்.
எம்.ஜி.ஆரின் மொழிபெயர்ப்பாளரும் அவர்தான். இலங்கை விவகாரத்திலும் பண்ருட்டியாருக்கு பரிச்சயம் இருந்தது.
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் எம்.ஜி.ஆர் டில்லிக்குச் சென்றார்.
யாழ்ப்பாணத்தில், இருந்து பிரபாகரனை இந்தியாவுக்கு அழைக்கும்போது ‘விடுதலைப் புலிகள் மட்டும் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பிரபாகரன் கூறியிருந்தார் அல்லவா.
அதற்கு உடன்படுவது போலவே இந்திய தரப்பு நடந்துகொண்டு பிரபாகனை இந்தியாவுக்குக் கூட்டிச் சென்றது. ஆனால், இந்தியாவில் நடந்ததோ வேறு கதை.
தமிழ்நாட்டில் இருந்த ஏனைய இயக்கத் தலைவர்களையும் தமது தீர்வு முயற்சியில் இணைத்துக்கொள்ள நினைத்தது இந்திய அரசு.
தமிழக இயக்கங்களிடையே நிலவிய முரண்பாடுகளைப் பயன்படுத்தி தமது முடிவுக்கு அந்த இயக்கங்களை உடன்படவைக்கலாம் என்று திட்டமிட்டது ‘றோ’.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முன்னர் இந்திய அரசும், அதன் உளவுப்பிரிவுகளும், குறிப்பாக றோவும் கையாண்ட அணுகுமுறைகள் ஒரு சுவாரசியமான நாடகம் போலவே இருந்தது.
சாம, பேத, தான, தண்டம் என்று சகல வழிமுறைகளையும் இந்தியத்தரப்பு பயன்படுத்தியது.
அந்த நேரத்தில் இலங்கைத் தமிழ் அமைப்புக்களுக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை முதலில் சொல்லவேண்டும். அப்போதுதான் அதனை இந்திய தரப்பு எப்படி பயன்படுத்தியது என்பது தெரியும்.
முரண்பாடுகள்
முதலாவது முரண்பாடு புலிகள் இயக்கத்தினருக்கும், ஏனைய தமிழ் அமைப்புக்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடு.
இரண்டாவது முரண்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், போராளி அமைப்புக்களுக்கும் இடையே நிலவிய முரண்பாடு.
மூன்றாவது முரண்பாடு, புலிகள் இயக்கத்துடன் இணைந்து நின்ற ஈரோஸ் இயக்கத்துக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலானது.
நான்காவது ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட் ஆகிய அமைப்புக்களுக்கு எதிரான போக்குடைய ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்துக்கும், குறிப்பிட்ட இரண்டு இயக்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு.
ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அணியினர் தாம் சொல்வதை கேட்கமாட்டார்கள் என்று ‘றோ’ தீர்மானித்தது.
எனவே ஈ.என்.டி.எல்.எஃப் அமைப்புக்குள் ‘றோ’ ஒரு முரண்பாட்டை தோற்றுவித்தது.
பரந்தன் ராஜனை மட்டுமே டக்ளஸ் தேவானந்தா அணியினருக்குத் தெரியாமல் தனியாக அழைத்துப் பேசியது ‘றோ’.
தமது முடிவுக்கு உடன்பட்டால் பரந்தன் ராஜனுக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாகவும் ஆசை காட்டியது ‘றோ’. வலையில் விழுந்தார் பரந்தன் ராஜன்.
தமது துடிவை மறுபேச்சிலலாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இயக்கம் ‘றோ’வுக்குத் தேவைப்பட்டது.
அப்படியான ஒரு இயக்கம் இருந்தால்தான் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களை வழிக்குக் கொண்டுவரலாம் என்பது ‘றோ’வின் தந்திரம்.
பரந்தன் ராஜன் அணியினருக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைத்துவிடுமோ என்று புளொட் நினைக்கும். எனவே புளொட்டும் முன்வரும்.
புளொட் முன்வந்தால் ஏனைய இயக்கங்கள் தாம் தனிமைப்பட்டு விடுவோமோ, இந்திய நட்பை இழந்து விடுவோமோ என்று நினைத்து தாமும் உடன்பாடு தெரிவிக்க வேண்டி இருக்கும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரை இந்தியாவின் முடிவுக்கு மறுபேச்சு பேசாது.
ஆனால் ஆயுதமேந்திய இயக்கங்கள் அதனை மிரட்டிவிடலாம். ஆனாலும், மீண்டும் தனக்கு ஒரு அரசியல் வாய்ப்புக் கிடைக்கும் என்றால் கூட்டணி இயக்கங்களை எதிர்த்து நிற்கத் துணியலாம்.
தமிழர் விடுதலைக் கூட்டணியை தனியாக விட்டால் இந்தியாவின் உதவியுடன் கூட்டணி மீண்டும் வளர்ந்துவிடுமோ என்ற நினைப்பில் ஏனைய இயக்கங்களும் இந்தியாவின் முடிவுக்கு ஒத்துழைக்க முன்வரலாம்.
இதெல்லாம் தமிழ் அமைப்புக்களின் பலம், பலவீனங்களை நன்கு தெரிந்துவைத்திருந்த ‘றோ’ உளவுப்பிரிவு போட்ட கணக்குகள்.
கணக்குப்போடப்பட்டுவிட்டதல்லவா. அடுத்த கட்டம் காய் நகர்த்தல்தானே.
சந்திப்பில் தந்திரம்
இந்திய வெளிவிவகார செயலாளர் கே.பி.எஸ்.மேனனும், இலங்கைக்கான இந்தியத்தூதர் திக் ஷித்தும் சென்னை சென்றனர். தமிழக அரசின் விருந்தினர் விடுதியில் ஜுலை 26ம் திகதி ஒரு சந்திப்பு நடைபெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ, புளொட், ஈ.என்.டி.எல்.எஃப், ஈரோஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை சந்தித்தார் மேனன். திக்ஷித்தும் கலந்து கொண்டார். புலிகள் இயக்கத்தினர் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
தாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று தலைவர்கள் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. மேனன் என்ன சொல்லப்போகிறார் என்று அறிவதில் ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.
மேனன் அழகான ஆங்கிலத்தில் அவர்களுக்குச் சொன்னார்: “வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு தீர்வு வரப்போகிறது. விரைவில் இலங்கையுடன் அத்தகைய தீர்வை உள்ளடக்கிய ஒப்பந்த்தில் நாம் கையொப்பமிடக்கூடும்.
வடக்கு-கிழக்கு இணைப்புடன் கூடிய தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு பொருத்தமான ஒரு தீர்வைத்தான் இந்தியா பெற்றுத்தரும்” என்றார் மேனன்.
இந்தியா பயன்படுத்திய முரண்பாடுகள்
அங்கு அழகான் பொய் ஒன்றையும் மேனன் சொல்லத்தவறவில்லை. அது இதுதான்.
“புலிகள் இயக்கத்தினரும் இத்தகைய தீர்வுக்கு உடன்பாடு தெரிவித்துவிட்டனர்” என்றார் மேனன்.
புலிகள் இயக்கத்தினருக்கும். ஏனைய இயக்கங்களுக்கும் இடையே உள்ள கடும்பகையை மேனன் அறிவார்.
புலிகள் உடன்பட்டுவிட்டார்கள் என்றால் புலிகளைவிட இந்தியாவிடம் நல்ல பெயர் எடுக்கும் அவசரத்தில் ஏனைய இயக்கங்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவருவார்கள் என்று நினைத்தார் மேனன்.
ஜுலை 26 மாலையில் ஏனைய இயக்கத்தலைவர்கள் புறப்பட்டு புதுடில்லிக்கு வருமாறு கூறப்பட்டது.
அப்போது தமிழ்நாட்டில் ‘றோ’ உளவுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் மாலூகா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.
“இலங்கை அரசோடு பேச்சு நடத்தப்போகிறோம். அந்த சந்தர்ப்பத்தில் நீங்களும் இருக்கவேண்டும். எனவே புதுடில்லிக்குப் புறப்படுங்கள்” என்றார்.
ஈ.என்.டி.எல்.எஃப் அமைப்பில் பரந்தன் ராஜன் மட்டுமே கனகராஜா என்பவரை மொழிபெயர்ப்பாளராக அழைத்துக்கொண்டு புதுடில்லிக்கு உடனே சென்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ரெலோ போன்ற அமைப்புக்களின் தலைவர்கள் தாம் நேரில் செல்லாமல் தமது பிரதிநிதிகளையே புதுடில்லிக்கு அனுப்பிவைத்தனர்.
தாம் நேரில் கலந்துகொண்டால் உடனே முடிவுகள் சொல்லவேண்டி இருக்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டால் தலைவர்களிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும் என்று சாட்டுச் சொல்லித் தப்பிக்கலாம் என்பதுதான் காரணம்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாக கேதீஸ்வரன், வரதராஜப்பெருமாள், புளொட் சார்பாக த. சித்தார்த்தன், இரா. வாசுதேவா, ரெலோ சார்பாக ஸ்ரீகாந்தா, ஈரோஸ் சார்பாக பாலகுமார், சங்கர் ராஜி, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஈ.என்.டி.எல்.எஃப் சார்பாக பரந்தன் ராஜன், கனகராஜா ஆகியோர் புதுடில்லி சென்றனர்.
விமான டிக்கெற், ஹோட்டல் செலவுகள் யாவும் இந்திய அரசின் பொறுப்பு.
புதுடில்லியில் பிதமர் ராஜீவ்காந்தியின் இல்லத்துக்கு அருகில் இருந்த சாம்ராட் ஹோட்டலில் அவர்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர்.
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மட்டும் அங்கு இருக்கவில்லை.
திக் ஷித் சந்திப்பு
புதுடில்லியில் உள்ள ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறை ஒன்றில் பிரபாகரன் உட்பட புலிகள் இயக்க தூதுக்குழுவினர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பிட்ட அறையில் சகல வசதிகளும் இருந்தது. அறையின் முன்பாக கறுப்புப் பூனைகள் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
பிரபாகரனோ வேறு எவருமோ அறையை விட்டு வெளியே செல்ல முடியாது. அவர்களது பாதுகாப்புக்காக அத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் கிட்டத்தட்ட தாம் காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என்பதை பிரபாகன் தெரிந்து கொண்டார்.
அசோக் ஹோட்டலுக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தார் திக்ஷித்.
“இலங்கை அரசுடன் இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்போகிறது.” என்ற தகவலை அப்போதுதான் முதல் தடவையாக பிரபாகரனிடம் தெரிவித்தார்.
‘இந்தியா தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டது’ என்ற வெறுப்பும், கோபமும் பிரபாகரன் மனதில் தோன்றுவதற்கான ‘விதை’ போடப்பட்டதும் அப்போதுதான்.
இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே செய்யப்படவுள்ள ஒப்பந்த நகலையும் பிரபாகரனிடம் கொடுத்தார் திக் ஷித்.
தம்முடன் கலந்துபேசாமல், கருத்தும் கேட்காமல் இதுதான் ஒப்பந்தம், இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கையாண்ட அணுகுமுறை பிரபாகரனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
‘எமது மக்கள் சார்பாக, எம்முடன் கலந்து பேசாமல் நீங்கள் மட்டுமே ஒரு முடிவுக்கு எப்படி வரமுடியும்?’ என்று கேட்டார் பிரபாகரன்.
திக் ஷித் அதிகாரத் தோரணையில் உறுதியான குரலில் ‘இதுதான் இந்திய அரசின் முடிவு. நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.’ என்பதுபோலப் பதிலளித்தார்.
திக் ஷித் அன்று நடந்துகொண்ட முறை பிரபாகரனுக்கு மறக்கமுடியாத அனுபவம்.
அதனை மனதில் வைத்திருந்துதான் பிரபாகரன் பின்னர் திக் ஷித்துக்கு யாழ்ப்பாணத்தில் பாடம் புகட்டினார். அது பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன்.
தற்காலிக இணைப்பு
ஒப்பந்த நகலில் வடக்கு-கிழக்க இணைப்பு தற்காலிகம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பது தற்காலிக ஏற்பாடகவே இருக்கும். 1988 டிசம்பர் 31ல் அல்லது அதற்கு முன்பாக கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வடக்கு மாகாணத்துடன் இணைந்திருப்பதா அல்லது கிழக்கு மாகாணம் தனியான நிர்வாக அலகாகி, தனிமாகாண சபையாகி தனியான ஒரு கவர்னர், தனியான முதலமைச்சர் மற்றும் ஒரு மந்திரி சபையினை ஏற்படுத்துவதா என்பதை கிழக்கு மாகாண மககள் தீர்மானிப்பர்.
அதேவேளை ஒப்பந்தத்தில் இன்னொரு விடயமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் கருத்துவாக்கெடுப்பைத் தள்ளிவைக்க ஜனாதிபதி விரும்பினால் அவ்வாறு செய்யலாம்.
“வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் தாயகம். அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை.” என்று புலிகள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
அதற்கும் இந்திய தூதரிடம் பதில் தயாராக இருந்தது.
“வடக்கு-கிழக்கு எப்போதும் இணைந்துதான் இருக்கும். சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே தற்காலிக இணைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்போவதில்லை. வடக்கு-கிழக்கு தொடர்ந்து ஒரே நிர்வாக அலகாக இருக்கும் என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனே உறுதியளித்துள்ளார். ராஜீவ் காந்தி அந்த உத்தரவாதத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியாவை நம்பி நீங்களே இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஜே.ஆர். தனது வாக்குறுதியை மீறி நடந்தால் இந்தியா அவரைக் கவனித்துக் கொள்ளும்.” என்று திக் ஷித் சொன்னார்.
பிரபாகரன் அசைந்து கொடுக்கவில்லை.
“நீங்கள் சொல்லும் விடயத்தை எழுத்தில் தரமுடியுமா?” என்று கேட்டார் பிரபா.
திக் ஷித் அதற்கு உடன்படவில்லை.
திக் ஷித்த்துக்கும், பிரபாகரனுக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
ஒரு கட்டத்தில் திக் ஷித் பிரபாகரனைப்பார்த்து “நான்கு தடவை நீர் எம்மை ஏமாற்றிவிட்டீர்!” என்றார்.
அதற்கு பிரபாகரன் சொன்ன பதில் இது:
“நான்கு தடவை நான் என் மக்களின் நலனைக் காப்பாற்றி விட்டேன்”
இதே நேரம் இந்திய வெளியுறவு அமைச்சில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
(தொடர்ந்து வரும்)
Average Rating