இருண்ட யுகத்தை மறந்து விடலாகாது..!!

Read Time:8 Minute, 23 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் 61 வது வருட நிறைவையொட்டி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை சில ஊடகங்களுக்கு கசப்பாக அமைந்திருந்த போதிலும் அதுதான் உண்மை, யதார்த்தம் என்பது மறுக்கப்பட முடியாததாகும்.

அந்த சில ஊடகங்கள் ஊடக தர்மத்தை துச்சமாக மதித்து முழு ஊடகத்துறைக்கும் இழுக்கைத் தேடித் தருவதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் அதாவது 2015 ஜனவரி 8ம் திகதிக்கு முன்னரான காலப் பகுதியில் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை சுட்டிக்காட்டிப் பேசிய ஜனாதிபதி, இன்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் முழு அளவிலான ஊடகத் சுதந்திரத்தை மேற்படி ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்த முனைவது தொடர்பில் கடும் விசனத்தை இங்கு வெளிப்படுத்தினார்.

தர்மத்தை மீறுவது எத்தகைய பாவகாரியம் என்பதை அந்த ஊடகங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நான் பதவிக்கு வந்த நாள் முதல் சில ஊடகங்கள் என்மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. அடிக்கு மேல் அடிக்கின்றன. கீழே விழும் வரை அடிக்கின்றன.

தம்மிடமுள்ள ஊடக ஆயுதத்தை கூரிய வாளாகப் பயன்படுத்தி தாக்கிய வண்ணமே இருக்கின்றன எனத் தெரிவித்த ஜனாதிபதி, இது குறித்து தான் வருத்தப்படவில்லை எனவும் அந்தச் சுதந்திரத்தை அடக்க ஒருபோதும் முற்படப் போவதில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

எந்தவித அச்சுறுத்தல், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் தாம் ஆத்திரப்பட்டு செயற்படப் போவதில்லை எனவும் இங்கு தெரிவித்திருக்கிறார்.

2015 ஜனவரி 8 க்கு முன்னரான காலப் பகுதியை ஊடகத்துறையினர் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

எத்தனை ஊடகவியலாளர்களை நாம் இழந்துள்ளோம்? எத்தனை பேர் கடத்தப்பட்டனர்? வெள்ளைவான் கடத்தல் எத்தனை? காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்று வரை ஏதாவது தகவல்கள் வெளிவந்தனவா? இல்லையே!

அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை ஊடகங்கள் இது தொடர்பில் குரல் எழுப்பின? அன்றைய ஆட்சித் தலைமையை ஒருவார்த்தை யாராவது கேட்டீர்களா? கேட்டால் இல்லையென்று தான் பதில் வரும்.

உங்களிடம் அன்று முதுகெலும்பு உறுதியானதாக இருக்கவில்லை. பேச முடியாது வாய் பொத்திக் காணப்பட்டார்கள். மூச்சு விட்டால் அந்த மூச்சு அடங்கிப் போய் விடும் என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.

நாட்டில் அன்று காணப்பட்ட அராஜகத்துக்கு எதிராக எவராவது குரல் எழுப்பினார்களா? அதுவும் ஒருவிதமான சர்வாதிகாரமாகவே காணப்பட்டது. அந்தச் சர்வாதிகாரத்துக்கு எதிராக எவராலும் மூச்சு விட முடியாது போயிற்று.

2015 ஜனவரி 8ல் ஆரம்பித்த நல்லாட்சியின் மூலம் ஊடகங்கள் மீது போடப்பட்டிருந்த விலங்குகள் உடைத்தெறியப்பட்டன.

ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் முழு அளவிலான சுதந்திரம் வழங்கப்பட்டது. இன்று எந்தவொரு ஊடகவியலாளரும் அச்சுறுத்தப்படவில்லை. கடத்தப்படவில்லை. கொல்லப்படவுமில்லை.

ஊடகங்களால் தாராளமாக எழுத முடிகிறது. பேச முடிகிறது. யாருக்கும் பயப்படவேண்டிய நிலை இன்று கிடையாது.

அப்படி வழங்கப்பட்ட ஊடக சுதந்திரத்தை சில ஊடகங்கள் தமக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தி எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற மனப்பாங்கில் அடாவடித்தனமாக செயற்படத் தொடங்கியுள்ளன.

ஊடக தர்மத்தை முற்று முழுதாக மீறிச் செயற்பட்டு வருகின்றனர். ஏன் இப்படி எனக் கேட்டால் போதும் ஊடக சுதந்திரத்தை மறுப்பதாகக் கூறி கூச்சல் போடுகின்றனர்.

ஊடகத் தர்மம் பற்றி கொஞ்சம் கூட தெளிவில்லாத விதத்தில் குறுகிய நோக்கில் அடிப்பதற்கும், சேறு பூசுவதற்கும், பழிவாங்குவதற்குமே தமது ஊடகங்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இன்று சில ஊடகங்களை அருவருப்பானதாகவே மக்கள் நோக்குகின்றனர். பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மக்களுக்கு பயன்படக் கூடியதாக அமையவில்லை.

சுயநலனும், பணம் சேர்ப்பதுமே இவற்றின் இலட்சியமாகும். ஜனநாயகத்தின் மற்றொரு தூணாக விளங்கும் ஊடகம் முற்றுமுழுதாக அதற்கு எதிர்மாறானதாகவே இயங்குவதைக் காணலாம்.

மக்களை துண்டி விடுவது; மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுமே இவற்றின் பணியாகத் தெரிகிறது.

ஜனநாயக மரபுக்கமைய, ஊடக தர்மத்துக்கு இசைவானதாக செயற்பட வேண்டிய ஊடகங்களில் சில நடந்து கொள்ளும் நேர்மையற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த ஊடகத்துறையையும் குற்றவுணர்வோடு பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டிய ஊடகங்கள் அண்மைக் காலமாக தேசத்தை சீரழிப்பதில்தான் பங்களிப்பைச் செய்து வருகின்றன.

ஜனாதிபதி சுட்டிக்காட்டி இருக்கும் குறைபாடுகள், யதார்த்தமானவையாகும். அன்று பேச முடியாதிருந்தவர்கள் இன்று தங்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்ற தொனியில் இயங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இவ்வாறான ஊடகங்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும். இத்தகைய ஊடகங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அவர்கள் திருந்த மறுத்தால் மக்கள் திருத்த முனைய வேண்டும்.

ஜனநாயக முறைக்கேற்ப சரியான ஆயுதத்தை மக்கள் கையிலெடுக்க வேண்டும். போனால் போகட்டும் என விட்டுவிட்டால் நாட்டை அழிவுக்குள் தள்ளி விடும் ஊடக தர்மத்தை மீறுவோருக்கு நாம் உதவியதாகவே அமைந்து விடும்.

ஜனாதிபதியின் ஊடகங்கள் தொடர்பான விசனம் ஒட்டுமொத்த ஊடகத்துறையினரும் வேதனைப்படக் கூடியதாக அமைந்துள்ளது.

பொறுப்புணர்வுடன் ஊடக தர்மத்தை பாதுகாப்பதற்கு அனைத்து ஊடகங்களும் உறுதி பூண வேண்டியது மிக அவசியமானதென்பதை இங்கு வலியுறுத்தி வைக்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மென்மையான உதடுகள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…!!
Next post பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா…!!