கொழும்பு குண்டு வெடிப்பு பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:- இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2 வாரங்களாக போர் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக இந்த சண்டை கடும் உக்கிரத்துடன் நடைபெற்று வருகிறது.நேற்று இலங்கை ராணுவ விமானம் குண்டு வீசி தாக்கியதில் 43 மாணவிகள் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் மீது குண்டு வீசித் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பதிலடி
இலங்கை ராணுவம் அப்பாவி பொது மக்களை கேடயமாகப் பயன்படுத்தி அவர்களை கொல்வதை நிறுத்தா விட்டால் நாங்களும் பதிலடி கொடுக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே மாளிகையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் பஷீர்வாலி முகமது சென்ற வாகனம் அந்த இடத்தைக் கடந்த போது இந்த குண்டு வெடிப்பு நடந்தது.
கண்ணி வெடி
விடுதலைப்புலிகள் பூமிக்கடியில் புதைத்து வைத்து இருந்த கண்ணி வெடியை வெடிக்கச் செய்ததாக இலங்கை ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது. இந்த சம்பவத்தில் தூதுக்குழுவினரின் பாதுகாப்புக்குச் சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் சிலரும் ஆக மொத்தம் 7 பேர் பலியானார்கள். மேலும் 17 பேர் இதில் படுகாயம் அடைந்தனர்.
மூன்று சக்கர வாகனத்துக்கு அடியில் விடுதலைப்புலிகள் அந்த கண்ணி வெடிகளை புதைத்து வைத்து இருந்ததாகவும், பாகிஸ்தான் தூதுக்குழுவை குறி வைத்தே இந்த தாக்குதல் நடந்து இருப்பதாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும் தூதுக்குழுவினர் சென்ற வாகனத்துக்கு பின்னால் அவர்களின் பாதுகாப்புக்கு சென்ற ஜீப் இதில் சேதமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தப்பினார்கள்
பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் கூறுகையில், தூதர் பஷீர்வாலி முகமது சுதந்திர தின விழா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு திரும்பியபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் தூதர் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது கார் சிறிது சேதம் அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குண்டு வெடிப்பில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் அலுவலக அறை ஜன்னல்கள் பலத்த சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சுற்றி வளைப்பு
சம்பவம் நடந்த இடம் மக்கள் நெருக்கம் மிகுந்த பரபரப்பான கடைகள் நிறைந்த பகுதி ஆகும். அந்த இடத்தில் குண்டு வெடித்த 3 சக்கர வாகனம் வெகு நேரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த வேறு சில வாகனங்களும் சேதம் அடைந்தன. சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் பொது மக்களிடையே அச்சம் நிலவியது. உடனடியாக அந்த இடத்தை போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் சுற்றி வளைத்தனர். ஆனால் யாரும் பிடிபட வில்லை.
கண்டனம்
இந்த குண்டு வெடிப்புக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “முதல் முறையாக வெளிநாட்டுத் தூதர் ஒருவரை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்று இலங்கை செய்தித் துறை அமைச்சர் அனுராயாபா தெரிவித்துள்ளார்.
ஆத்திரம்
இது பற்றி ராணுவ செய்தி தொடர்பாளரும், கொள்கைத்திட்ட மந்திரியுமான கெகேரியா ராம்புக் வெல்ஸி கூறியதாவது:- நிச்சயமாக இது விடுதலைப்புலிகளின் தாக்குதல் தான். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வரும் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால் விடுதலைப்புலிகள் இது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.