தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? கட்டுரை
ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்? இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? போன்ற ‘மயிர் பிளக்கும்’ வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் திட்டமிட்ட காலக்கணிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்; எதிர்த்துக் களமாட வேண்டும் என்று ஆளுக்காள் ‘கொம்பு சீவும்’ அறிக்கைகளும் ஊடகங்களை நிரப்பிய வண்ணமுள்ளன. தங்களது எதிர்ப்புகளை நேரடியாக முன்வைப்பதிலும் பார்க்க, மக்களின் ஊடாக அதனை முடுக்கிவிடவேண்டும் என்பதில் பல்வேறு தரப்புக்களும் ஆர்வமாக உள்ளன.
சரி! இப்போது கேள்வி என்னவென்றால்?
சிவசேனா அமைப்பு எதிர்க்கப்பட வேண்டியதுதானா? ஆம், என்றால் அதனை எந்த அடிப்படையில் ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்? இது தொடர்பாகத்தான் இந்தப் பத்தி ஆராயவிருக்கிறது.
இந்தியாவின் அகன்ற பாரதக்கொள்கையின் ஒரு படிமுறை நிகழ்ச்சியாக இந்துத்துவ கொள்கையில்த் தோய்ந்து எழும்பிய மதவாத அமைப்புகள் இந்தியாவின் உள்ளும் புறமும் பிரத்தியேக நிகழ்ச்சி நிரலின் ஊடாகத் தங்களது சிலந்தி வலைகளைப் பின்னி வருகின்றன. சீனா எவ்வாறு தனது ‘முத்துமாலை’த் திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறதோ அதுபோன்ற உபாயத்தை இந்தியா தனது அயல் தேசங்களில் மிகச்சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது.
ஈழத்தமிழர்களின் தாயகத்தில் ஊடுருவுகின்ற இவ்வாறான அமைப்புக்களினால் ஏற்படப்போகும் தாக்கங்களும் அதன் விளைவுகளும் மிகப்பாரதூரமானவை என்பதில் எந்த ஐயப்பாடும் இருக்கமுடியாது.
உண்மையிலேயே மத ரீதியான, தூய சிந்தனையுடன் இப்படியான அமைப்பு வடக்கில் தொடங்கப்படவேண்டுமானால், அந்த நோக்கத்தை இந்த அமைப்பை ஆரம்பிப்பதன் ஊடாகத்தான் மேற்கொள்ளவேண்டும் என்றில்லை. தமிழர் தாயகத்தில் ஏற்கெனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏதாவது ஓர் அமைப்பின் ஊடாகவோ, இல்லை ஏதாவது அரசியல் கட்சியின் ஊடாகக்கூட அந்தச் செயல்திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். வடக்கிலுள்ள குறிப்பிட்ட சமய அமைப்புக்களுடன் கலந்துரையாடியிருக்கலாம். ஆனால், அப்படியான தெரிவுகளையெல்லாம் புறக்கணித்துவிட்டுத் தானே நேரடியாகக் களத்தில் இறங்கியிருப்பதன் மூலம் இந்த அமைப்பின் – கட்சியின் – எதிர்கால நிகழ்ச்சி நிரல் என்ன என்பது வெளிப்படையாக துலங்கியிருக்கிறது.
மறைமுகமாகச் செய்யவேண்டிய காரியங்களைக்கூட வெளிப்படையாக மேடைபோட்டுச் செய்யுமளவுக்கு ஈழத்தமிழர்களது அரசியல் களம் அவ்வளவு ஜனநாயகச் செழுமையடைந்துவிட்டதா என்ற ஆராய்ச்சிகளுக்குள் போவதற்கு முன்னால் இந்தப் பத்தியின் மிகமுக்கியமான விடயத்துக்கு வருவோம்.
இப்போது ஈழத்தமிழர்களின் முன்னிருக்கும் தெரிவுகள் என்ன?
இந்துத்துவத்தை எதிர்ப்பதா? அல்லது
இந்துத்துவமே இந்தியா என்று கொண்டு, வருகின்ற இந்தியாவை எதிர்ப்பதா? அல்லது
இணையத்தில் எல்லோராலும் குதறி எடுக்கப்படும் சிவசேனாவின் ஈழப்பொறுப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தத்தை எதிர்ப்பதா? அல்லது, இவை மூன்றையும் ஒருங்கே எதிர்த்துத் தனித்துப் போரிடுவதா?
இந்த வினாக்களின் ஊடாகத்தான் தமிழர்களின் தாயகத்தில் கால்பதித்திருக்கும் சிவசேனாவின் வருகை குறித்து விவாதிக்க முடியும்; அல்லது உருப்படியான விடைகளைக் காணமுடியும்.
சிவசேனாவின் ஈழப்பொறுப்பாளரான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் – இலக்கியப் பரப்பில் பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக ஆற்றிவரும் பணிகள் கணக்கிடமுடியாதவை. ஆனால், இந்தப் பணியின் முன்பாக அவர் விலை போய்விட்டார் என்றும் கொள்கைளில் தவறிவிட்டார் என்றும் மேற்கொள்ளப்படும் வாதங்கள் வெறுமனே செல்லாக்குரல்களே அன்றி வேறொன்றுமில்லை. அப்படியே விலைபோய்விட்டார் என்று அவரைக் கைக்கூலியாக முத்திரை குத்திவிட்டாலும் இந்தியாவின் இந்தத் திட்டத்துக்கு நாளை வேறொருவர் கிடைத்திருப்பார். அவ்வளவுதான்! மற்றும்படி, சிவசேனாவின் வருகை என்பது திசை மாறியிருக்க வாய்ப்பில்லை.
அப்படியென்றால், மிகுதி இரண்டு கேள்விகளும்தான் ஈழத்தமிழர்களின் முன்பாக வியாபித்திருக்கப் போகின்றன.
அதாவது, தங்களது நலன்களுக்குப் பங்கம் தரக்கூடிய இந்துத்துவத்தையும் இந்தியாவையும் முற்றாகப் புறக்கணிக்கவும் அவற்றின் நடவடிக்கைகளை நிராகரிக்கவும் ஈழத்தமிழ் சமூகம் இன்றைய காலகட்டத்தில் முழுமையான சக்தியை கொண்டிருக்கிறதா? தங்களது இனமானம் சார்ந்த ஓர்மத்தினை அல்லது அந்த வீச்சு மிக்க சக்தியை தமிழர்களின் தற்போதைய தலைமை தனது மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறதா?
ஈழத்தமிழர்களின் தீர்வெனப்படுவது பாரதத்தின் அரவணைப்பில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதுபோன்ற வாதங்கள், அரசியல் கொள்கைப் பிரகடனங்கள் எல்லாம் ஒருபுறமிருக்கச் சமரசம் செய்யப்பட முடியாத ஈழத்தமிழர்களின் நலன்களின் மீது ஆழமான தாக்கங்களைச் செலுத்தும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதனை எதிர்க்கும் சக்தியை இன்று ஈழத்தமிழர்கள் முழுமையாக பெற்றிருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், இந்தியா என்று வந்துவிட்டால் அதன் சார்பில் மேற்கொள்ளப்படும் எதனையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இன்றைய ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு கையறுநிலையில் கிடக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஈழத்தமிழர்களின் மொத்த அடையாளத்தையும் இந்தியா, மெல்ல மெல்லத் தனது காலாசாரப் பொருளாதார மேலாதிக்கத்தினால் விழுங்கி வருகின்றது. போன தலைமுறையிலும் பார்க்க, இந்தத் தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் தங்களை அறியாமலேயே இந்த மாய வலையில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கிலுள்ள முஸ்லிகளின் செறிவு காரணமாகவும் அங்கு அவர்கள் வியூகப்படுத்தியுள்ள அரசியல் காரணமாகவும் அப்பிரதேசத்தில் ஆழமாகக் காலூன்ற முடியாத இந்தியா, வடக்கை முழுமையாக வசதிப்பட வைத்திருக்கும் இந்தத் திட்டமொன்றும் யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல; இதற்காக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் தூதரகம் ஆற்றிவரும் இரவுபகல் பாராத பணியும் எவருக்கும் புரியாதது அல்ல.
இனி, இரண்டாவது விடயத்தைப் பார்த்தால், இந்து மதம் சார்பானது.
தமிழர்களது போராட்டம் எனப்படுவது மதங்களைக் கடந்தது என்று எத்தனை வருடங்களுக்குத் தமிழர்கள் பெருமையாக மார் தட்டிக்கொண்டாலும் மதமும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள போலிக்கோட்பாடுகளும் சாதியைப்போல தமிழினத்தில் ஆழமாக வேரூன்றிக் கிடப்பவை ஆகும். இந்த யதார்த்தத்தை விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில்கூட தமிழர் தாயகத்தில் காணக்கூடியதாக இருந்தது. இப்போதும் அதன் பிற்போக்கான வளர்ச்சியைக் காணக்கூடியதாகத்தான் உள்ளது.
விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு கட்டத்திலும் அவர்களால் கைவைத்து தீர்க்கமுடியாமல்போன விடயங்களில் ஒன்றுதான் கட்டுக்கடங்காத மதவாதமும் அதன் போலி கோட்பாடுகளினால் ஏற்பட்ட சிக்கல்களும் ஆகும். இது ஈழத்தமிழர்கள் மத்தியில் பல முனைகளில் கூராக வெளித்தள்ளிக்கிடந்த ஒன்றாகும். சமய வழிபாடுகள் என்ற கலாசாரக் கட்டுமானத்துக்கு அப்பால், மதத்தின் பெயரால் இடம்பெற்ற எத்தனையோ சிக்கல்கள், பிடுங்குப்பாடுகள், தான்தோன்றித்தனங்கள் போன்ற சமுதாய பிறழ்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் காலத்தில் இயன்றளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, அவை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட முடியாத பெரும்பிரச்சினைகளாகவே காணப்பட்டன.
அப்பொழுதே அப்படியென்றால் இப்போது எம்மாத்திரம்? இந்தக் கேள்விக்கு அண்மையில் பார்த்த ஓர் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் இங்கு மிகப்பொருத்தமான பதிலாகச்
சுட்டிக்காட்டப்படக் கூடியதாகும்.
அதாவது, ‘புங்குடுதீவு ஒரு சிதைவுறும் நிலம்’ என்ற ஆவணப்படத்தில் புங்குடுதீவு பிரதேசவாசி ஒருவர் கூறுகையில், புங்குடுதீவுப் பிரதேசத்தில் ஆலயங்கள் கட்டுவதற்கு ஒரு வருடத்துக்கு மாத்திரம் வெளிநாட்டிலிருந்து 20 கோடி ரூபா அனுப்பப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு காரணம், அந்தச் சிறுதீவில் சாதியின் பெயரால் சிதைந்து கிடக்கும் சமூகங்களாகும். தங்களது கோயில்களாகப் பிரகடனப்படுத்தியுள்ள வணக்கத்தலங்களுக்குள் வேறு சாதிக்காரரை அனுமதிப்பதில்லை என்றும் இதனால் ஒவ்வொரு சாதி அமைப்புக்களும் தமக்குத் தமக்கென்று கோயில்களை கட்டிக் கடவுளை சொந்தம் கொண்டாடுவதில் முண்டியடிக்கிறார்கள் என்றும் அவர் விவரிக்கிறார்.
இப்படியாக மதமும் சாதியும் ஒன்றுக்கொன்று பிணைந்து, அதற்கு அப்பாலும் பிற காரணிகளால் ஏற்கெனவே உழன்றுகொண்டிருக்கும் சமூகக்கட்டமைப்பில் சிவசேனாவும் இந்தியாவும் இப்போது வந்து புதிதாக என்ன பிரளயத்தை ஏற்படுத்தி விடப்போகிறது?
மொழியிலும் கலாசாரத்திலும் பண்பாட்டிலும் முற்றுமுழுதாக இந்தியாவின் இன்னொரு மாநிலமாக உருவெடுத்துவரும் வடபுலத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம் புதிதாக என்ன கலவரத்தை ஏற்படுத்திவிடப்போகிறார்?
வாக்கு அரசியலுக்கு அப்பால் சமூக முன்னேற்றத்திற்காகவும் மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் பிற்போக்குத் தனங்களைக் களைந்து கொள்வதற்காகவும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அரசியல்வாதிகள் என்று தம்மைக் கூறுபவர்களும் சமூக பிரதிநிதிகளும் என்ன செயல்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்?
தமிழர்களின் ‘தந்தை நாடு’ என்பதற்காக ஈழத்தமிழர்கள் தங்களது முழுமையான நலன்களை அடகுவைத்துவிட்டுத்தான் அந்தத் தந்தையின் அரவணைப்பையும் பாசத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது என்ன தலையெழுத்தா?
தமிழினதும் இன்று ஆழமாகச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய களங்கள் தொடர்ந்தும் துவாரங்கள் நிறைந்தவையாகவே காணப்படுகின்றன. இந்தத் துவாரங்கள் நிறைந்த தளங்களில் இருப்பவற்றையே தேக்கிவைப்பதற்கு வலுவில்லாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிவசேனாவின் வருகையில் சீறி சினப்பவர்களும் வெஞ்சினத்தால் வெருண்டு திமிறுபவர்களும் முதலில் அந்த மக்கள் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். அந்த மாற்றங்களின் பாதையில் இனத்தின் நலன்சார்ந்த யதார்த்த அரசியல் கோட்பாடுகளைக் கட்டமைக்க வேண்டும். அதற்கு பின்னர், இந்த எதிர்ப்பு, புறக்கணிப்பு போன்றவற்றை பற்றி பேசலாமே!
Average Rating