ஒருதலைக் காதல் : தப்பிக்க வழி சொல்லும் ஆய்வு…!!
இளமையில் இனிமை தருவது காதல். இளம் பெண்களுக்கு எமனாய் அமைந்துவிடுவது ஒருதலைக் காதல். நிஜத்தில் காதலை ஏற்பதைவிட, காதலை மறுக்கத்தான் நிறைய துணிச்சல் தேவைப்படுகிறது. துணிச்சலுடன் சாதுரியமும், சாமர்த்தியமும் கலந்து செயல்படுவது அவசியம். அப்படி இல்லாமல், ‘அவன் நம் பின்னால் வரவே கூடாது’ என்று கண்மூடித்தனமாக பேசும் வார்த்தைகளை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
ஆணின், ‘ஈகோ’வைத் தூண்டும் வகையில் கடுமையாகப் பேசுவது, ‘உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்’ என்று சவால் விடுவது, தெரிந்த தோழன் அல்லது பெற்றோர் துணை கொண்டு மிரட்டுவது என்று செயல்படுவது காதல் மறுக்கப்பட்டவரின் கோபத்தை தூண்டுகிறது. பெண் புறக் கணிக்கும்போதும், மிரட்டும்போதும் ‘எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்ற கொடூர எண்ணம் ஒரு சில ஆண்களிடம் தலைதூக்குகிறது.
எனவே காதலை மறுக்க துணிவுடன், கனிவு தேவை. சாதகமான சூழல் வரும்வரை கனிவுடன் காத்திருக்க வேண்டும். ‘உங்கள் அன்பை புரிந்து கொள்கிறேன், ஆனால் சூழல் ஒத்துழைக்குமா என தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என ஒத்திப் போடலாம். மாறாக, ‘ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்ட’, ‘உன் தகுதி என்ன? என் தகுதி என்ன?’ ‘உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது’, ‘உன் மூஞ்சிக்கெல்லாம் லவ் கேட்குதா?’ என்பதுபோன்ற கடுஞ்சொற்களை வீசக்கூடாது.
ஆய்வு ஒன்றில், 26 சதவீதம் பெண்கள், ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி காதலை முறித்துக் கொண்டதாக கூறி உள்ளார்கள். இப்படிச் செய்வது ஒரு சில ஆண்களை கோபமடைய வைக்கிறது என்றும் ஆய்வு சொல்கிறது. உடனே தொடர்ந்து போன் அழைப்பு செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். பெண்கள் எதற்கும் சட்டை செய்யாமல் முற்றிலுமாக ஒதுக்கும்போது ஆணின் மனதில் பழிவாங்கும் எண்ணம் மேலிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே எடுத்த எடுப்பிலேயே ஒருவரை முற்றிலும் புறக் கணிப்பதைவிட மெல்ல மெல்ல அவரை விட்டு விலகுவதே சரியான முடிவு.
இதற்காக ஆணிடம் பேசும்போது, ‘என்மீது யாரும் இவ்வளவு அன்பைப் பொழிந்ததில்லை. காலம் கனிந்தால் உங்கள் அன்பை ஏற்கிறேன். இல்லையென்றால் நாம் என்றும் நட்புடனே இருக்கலாம். இதற்குமேல் என்னை வற்புறுத்த வேண்டாம்’ என நாசூக்காக மறுக்கலாம்.
பின்னர் அவரை புறக்கணிப்பது தெரியாமலே மெல்ல பேச்சு வழக்கை குறைக்க வேண்டும். சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணங்கள் அவர் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்குவதை உணர்ந்து உங்கள் மீது வெறுப்பும், வெறித்தனமும் காட்டக்கூடும்.
‘வீட்டில் உங்களுடன் பழகுவது தெரிந்ததால் அதிகம் கட்டுப்பாடு விதிக்கிறார்கள், எனவே பழகுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்வோம். பேச வாய்ப்பு கிடைத்தால் நானே அழைக்கிறேன்’ என்று மெல்ல விலக முயற்சிக்கலாம்.
காதலை தள்ளிப்போடுவதும், பக்குவமாக பேசிப் பயணிப்பதும் கல்யாணம் வரை சாத்தியமாகலாம். திருமணம் முடிவாகும் சமயத்தில், ‘எனக்கொரு முடிவு சொல்’ என்று ஆண் தீவிரமாகலாம். அப்போது அவரிடம் பேசிப் புரிய வைக்க முடியுமா? எனப் பாருங்கள். ‘தன்னைவிட சிறந்த துணை உங்களுக்கு கிடைப்பாள்’ என நம்பிக்கையூட்டும் விதமாக பேசுங்கள். ஆண் அதற்கு மசிபவராக இல்லாவிட்டால் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியை நாடி, அவரிடம் இருந்து விலக முயற்சிக்க வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறையின் உதவியையும் நாடலாம்.
ஆணின் தீவிரத்தை நீங்கள் மனதால் எளிதில் எடை போட்டுவிட்டால், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். பெற்றோரிடம் சொல்லி வைப்பது, தோழியுடன் பாதுகாப்பாக சென்றுவருவது, தற்காப்பு நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பது என எச்சரிக்கையாய் செயல்படலாம்.
ஆக மொத்தத்தில் ஒருதலைக் காதலில் இருந்து ஆபத்தில்லாமல் தப்புவது உங்கள் சாமர்த்தியத்தில்தான் உள்ளது. அஜாக்கிரதையாய் இருந்தால் ஆபத்துதான்!
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating