ரகசிய உறவு: திரை மறைவில் நடக்கும் துரோக நாடகம்…!!
கணவன்– மனைவி இடையே பல பிரச்சினைகள் வந்து போகும். ஆனால் துரோக எண்ணம் மட்டும் வந்துவிடக் கூடாது. கணவரால் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் எல்லா பெண்களையும் வதைத்துவிடும்.
அழகான வாழ்க்கை அமையப்பெற்றவர்கள்கூட மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் வாழ்கிறார்கள். அந்த துரோகத்தால் தனது மண வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது தெரிந்தும், அந்த ரகசிய வாழ்க்கையை விட்டு விலகாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த விஷயம் மனைவிக்கு தெரியவரும்போது, கணவன்– மனைவி இடையே இருந்த அன்பு காணாமல் போய், அது இருள் சூழ்ந்த இல்லறமாகிவிடுகிறது.
துரோகத்தை சகித்துக்கொண்டு பெரும்பாலான பெண்களால் வாழ முடியாது. அவர்களுக்கு வாழ்க்கை கசந்துவிடுகிறது. தன் எதிர்காலமும், குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்போது பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது.
தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை தர வேண்டிய கணவன், திரை மறைவில் துரோக நாடகத்தை நடத்துவது, மனைவியை எந்த அளவுக்கு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதை, அந்த உறவில் ஈடுபடும் ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. கணவரின் ரகசிய உறவு, திருமணம் என்பது பாதுகாப்பானது என்று நினைத்து வாழும் பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறது.
திருமணத்தை மதிப்பது கணவன், மனைவி இருவரின் கடமை. ஆனால் சில ஆண்கள், ‘மனைவி மட்டும் திருமண எல்லைக்குள் வாழவேண்டும். தனக்கு நல்ல வாரிசுகளை உருவாக்கி தரவேண்டும். அவள் தனது சமூக அந்தஸ்து குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தான் மட்டும் எல்லைகளை மீறி எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை நடத்துவேன்’ என்ற கருத்தோடு செயல்படுகிறார்கள்.
இந்த எண்ணத்தோடு வாழும் ஆண்கள் அனைவருமே ஆழம் தெரியாமல் காலைவிட்டுவிட்டு அவஸ்தைப்படுகிறார்கள். நிம்மதியை இழந்து, ரகசியத்தை பாதுகாக்க படாதபாடுபடுகிறார்கள். தெரியாமல் மாட்டிக்கொண்டோமே என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
மனைவிக்கு தெரியாது என்று ரகசிய உறவை தொடர்கிறவர் களில் பெரும்பாலானவர்களின் மர்ம வாழ்க்கை, மனைவிகளுக்கு தெரியத்தான் செய்கின்றன. சிலர் தெரிந்தும், வேறுவழி இல்லாமல் திருமண வாழ்க்கையை விட்டு வெளியே வர இயலாமல் தவிக் கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற விரக்தியுடன் நாட்களை நகர்த்துகிறார்கள். வீட்டுக்கு வெளியே சிரித்துக் கொண்டு, உள்ளே அழுதுகொண்டிருக்கிறார்கள்.
‘பெண்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழவேண்டும்’ என்று போதிக்கப்பட்டிருக்கிறது. ‘ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்று ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. ‘கற்பு என்பது இருவருக்கும் பொதுவான விஷயம்’ என்று அழுத்தமாக போதிக்கப்படவில்லை.
‘கணவன் துரோகம் செய்கிறான்’ என்பதை அறியும்போது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?
‘அவனை ஒதுக்கித்தள்ளிவிட்டு பிரிந்து போய்விடலாம்’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அப்படி பிரிந்துசெல்லும் பெண்ணை தனிமை வாட்டும். பாதுகாப்பின்மை தோன்றும். பொருளாதார பிரச்சினைகள் வாட்டும். குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக் குறியாகும்.
‘அப்படியானால் அந்த துரோகத்தை சகித்துக்கொண்டு வாழவேண்டுமா?’ என்ற அடுத்த கேள்வி அழுத்தமாக எழும்.
துரோகத்தை சகித்துக்கொண்டு யாராலும் வாழ முடியாது. தன்மானமும், சுயமரியாதையும் அதற்கு இடம் தராது. துரோக கணவனை ஒருபோதும் பெண்களின் மனம் ஏற்றுக்கொள்ளாது.
‘அப்படியானால் என்னதான் செய்வது என்கிறீர்களா?’
இங்கே தான் பெண்கள் தங்கள் அறிவையும், பொறுமையையும் பயன்படுத்தி நல்ல தீர்வை காணவேண்டும். மனைவிக்கு தெரியாமல் ரகசிய உறவு வைத்துக்கொள்ளும் கணவன் எப்போதும் மனதளவில் பலகீனமாகவே இருப்பார். ரகசிய உறவும் ஒரு பலகீனம்தான். பலகீனமான மனிதர் மேலும் பலகீனமாகி அந்த உறவில் விழுந்து கிடப்பார். அவரது பலகீனத்தை சுட்டிக்காட்டி அதில் இருந்து மீளவைக்க பெண்கள் முயற்சிக்கலாம். ஆற்றில் மூழ்கி தத்தளிக்கும் பலகீனமான மனிதரை ஓரத்தில் நிற்கும் பலசாலி காப்பாற்றுவதுபோல! இதற்கு ஒரு பெரும் மனப்பக்குவம் தேவைதான்!
ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு மனைவிக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் ஆண்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். அதனால் வரப்போகும் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி இனி இது தொடராமல் இருக்க உத்தரவாதம் பெற்றுக்கொண்டு வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளலாம். பெரும்பாலான ஆண்களை இந்த வழிக்கு கொண்டுவந்து சரி செய்து விடலாம்.
ஒரு சிலர் வேண்டுமென்றே மனைவியை பழிவாங்க நினைத்து இப்படிப்பட்ட துரோக செயல்களில் ஈடுபடலாம். அப்படிப்பட்ட ஆண்களை திருத்துவது கஷ்டம்தான். மனைவி தனக்கு கட்டுப்பட்டவள், தான் செய்யும் தவறுகளை தட்டி கேட்கும் உரிமை மனைவிக்கு இல்லை என்று நினைக்கும் ஆண்கள் பலர் வெளிப்படையாகவே மனைவிக்கு துரோகம் இழைப்பார்கள். அவர்களை குடும்ப பெரியவர்கள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் சட்டப்படி விலகிவிடுவதை தவிர வேறு வழி இல்லை.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது கண்முன்னே நிற்பது குழந்தைகள் நலன்தான். பெற்றோரின் பிரிவு குழந்தைகள் மனதை வெகுவாக பாதிக்கும். முதிர்ச்சி பெறாத வயதில் குழந்தைகள் குழம்பிப் போய்விடுவார்கள். அவர்களை அமைதிப்படுத்தி, கவலையை போக்கவேண்டும். ‘நாங்கள் பிரிந்தாலும் உங்கள் எதிர் காலம் பாதிக்காது’ என்பதை வார்த்தை அளவில் மட்டுமின்றி செயலளவிலும் காட்டவேண்டும். இது ஒரு சவாலான விஷயம்தான். ஆனாலும் நம்பிக்கையோடு பெண்கள் இதில் ஈடுபடவேண்டும்.
எல்லா ஆண்களும் துரோகம் இழைப்பவர்கள் என்று பெண்கள் நம்பிவிடக்கூடாது. அப்படிப்பட்ட (மூட) நம்பிக்கை ஏற்பட்டால், கணவரின் ஒவ்வொரு அசைவுகளையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டியதாகி விடும். அரண்டவன் கண்களுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்பதுபோல் அது ஆகிவிடும். அதனால் மண வாழ்க்கையை நம்பிக்கையோடுதான் தொடங்க வேண்டும். நம்பிக்கையோடுதான் வாழவேண்டும்.
மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குற்ற உணர்ச்சியோடு செயல்படுவார்கள். நிம்மதியை தொலைத்ததுபோல் காணப்படுவார்கள். எப்போதும் பரபரப்பு பதற்றத்துடன் இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் மீது மனைவி கோபத்தையும், வெறுப்பையும் கொட்டக்கூடாது. கணவரின் செயல்களால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துரைக்கவேண்டும். குடும்பத்தில் மரியாதை குறைவது, சமூகத்தில் கேலிக்குரியவராக மாறுவது, குற்ற உணர்ச்சியால் நிம்மதியை இழப்பது, மனதும்– உடலும் கெட்டுப்போவது போன்றவைகளை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும். அதைப் பற்றி சிந்திக்கவும் அவர்களுக்கு நேரம் கொடுக்கவேண்டும். மனைவியின் ஒவ்வொரு பேச்சும், செயலும் துரோக கணவரை சிந்திக்கத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating