கெங்கவல்லி அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது…!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் ஏரிக்காடு பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.
இவரது மனைவி தீபா (வயது 28). இவர்களுக்கு அபினேஷ்(9), தினேஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன்-இந்திராகாந்தி தம்பதியின் மகன் ராஜீவ்காந்தி (27). இவர், வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற தீபாவை, ராஜீவ்காந்தி கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த தீபா, தனது கணவரிடம் நடந்த விவரத்தை தெரிவித்து கதறி அழுதார்.
இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ராஜீவ்காந்தியின் வீட்டிற்கு வந்து விசாரித்து விட்டு சென்றனர். ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.
இதற்கிடையே ராஜீவ் காந்தியின் தந்தை மாதேஸ்வரன், தாய் இந்திராகாந்தி ஆகியோர் நேற்று முன்தினம் சின்னதுரை வீட்டிற்கு சென்று அவரிடம் எதற்காக போலீசில் புகார் அளித்தாய்? என கேட்டு மிரட்டினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக சின்னதுரை மீண்டும் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதேசமயம் பாலியல் தொந்தரவு காரணமாக மனஉளைச்சலில் இருந்த தீபா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தீபாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபாவின் உடலை கைப்பற்ற முயற்சி செய்தனர். ஆனால் தீபாவின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், தீபாவின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, தீபாவின் உறவினர்கள் கூறுகையில், புகார் அளித்தவுடன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வெறும் விசாரணை மட்டும் செய்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்யவில்லை. இதனால் அவமானம் தாங்க முடியாமல் தீபா தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என உறவினர்கள் கதறினர்.
எனவே, தீபாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை உடனே கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை எடுக்க விடுவோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நீண்ட நேரத்திற்கு பின் தீபாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், நேற்று காலையில் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அறை முன்பு தீபாவின் உறவினர்கள் திரண்டனர். அப்போது, ஒத்தல்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், காரில் வந்தார்.
இதைப் பார்த்த தீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரில் வந்த உதவி கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் செல்வன் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை ராஜீவ்காந்தி பாலியல் தொந்தரவு செய்ததாக அவரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், தற்போது தீபாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதற்கிடையே ஆத்திரம் அடைந்த ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டிருந்த தீபாவின் பெற்றோர், உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ்காந்தியையும், அவரது பெற்றோரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனிடையே தற்கொலைக்கு தூண்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்பட 3 பிரிவுகளில் ராஜீவ்காந்தி, அவரது தாய் இந்திராகாந்தி, தந்தை மாதேஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜீவ்காந்தியை கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating