தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள்
இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூட்டமைப்பின் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்கிற தகுதி மாத்திரமே அவருக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தது. அதுவே, தமிழ்த் தேசிய அரசியலில் அவர் இன்று அடைந்திருக்கின்ற அடைவின் ஆரம்பமும் தொடர்ச்சியும்! இது முன்கதைச் சுருக்கம்.
இப்போது, விக்னேஸ்வரனை முன்னிறுத்திய இரண்டு கேள்விகளுக்குப் பதில் தேட விளைவோம். இந்தக் கேள்விகளில் ஒன்று தமிழ்த் தேசிய அரசியல் ஒரு தரப்பினரால் தொடர்ந்தும் முன்வைக்கப்படுவது. அதாவது, ‘விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலில் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் நீட்சியா’ என்பது? இன்னொன்று, இந்தப் பத்தியாளர் தன்னுடைய நண்பர்கள் சிலரோடு உரையாடும் போது சட்டத்துறையாளர் ஒருவர் எழுப்பியது. அதாவது, ‘மஹிந்தவுக்கு எதிராக மைத்திரி என்கிற கருவி வெற்றிகரமாகக் கையாளப்பட்டது போல, சம்பந்தன்- சுமந்திரன் என்கிற அதிகார பீடத்துக்கு எதிராக விக்னேஸ்வரன் வெற்றிகரமான கருவியாகக் கையாளப்படுவாரா என்பது?
தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தீர்மானத்தினை மேற்கொள்ளும் தரப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது. தேர்தல்களில் அதற்கான ஏக அங்கிகாரத்தினை மக்கள் வழங்கி வந்திருக்கின்றார்கள். ஆனாலும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியொன்றைக் கட்டமைத்துப் பலப்படுத்த வேண்டுமென்பதில் சில தரப்புக்களுக்கு அதீத ஆர்வமுண்டு. அப்படியான தருணத்தில், சம்பந்தனோடு முரண்பட்டுக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். அன்றிலிருந்து தமிழ்த் தேசிய அரசியலின் மாற்று அணியின் தலைமையாகக் கஜேந்திரகுமார் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரும் அப்படித்தான் கடந்த பொதுத் தேர்தல் வரையில் நினைத்தார். ஆனாலும், பொதுத் தேர்தல்த் தோல்வி அவரை மாற்றுத் தலைமை என்கிற நிலையிலிருந்து கீழிறக்கியது. அல்லது, புதிய தலைமையொன்றைத் தேட வேண்டிய அவசியத்தை மாற்று அணிக்கு ஏற்படுத்தியது.
இன்னொரு பக்கத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார பீடத்துக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் பெரியளவில் ஆரம்பித்தன. அதாவது, தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து சம்பந்தன் விலகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தீர்மானம் மேற்கொண்டபோது, தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தினை விக்னேஸ்வரன் குறிவைத்தார். அதற்கான விருப்பத்தினை அதிகார பீடத்திடம் விடுத்துமிருந்தார். ஆனாலும், ஏற்கெனவே வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை விட்டுக் கொடுத்திருந்த மாவை சேனாதிராஜா, கட்சித் தலைமைத்துவத்தினை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கவில்லை.
அதன் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டு ஏப்ரலில் கனேடியச் சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை விக்னேஸ்வரன் பெரியளவில் விமர்சித்திருந்தார். குறித்த செவ்வி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், மாவை சேனாதிராஜா பற்றிப் பேசும் போது, “இவர்கள் யாரும் யாழ்ப்பாணத்திலோ – வடக்கிலோ வசிப்பதில்லை. குடும்பங்களை வெளிநாட்டில் வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றார்கள். இவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் விளங்கவில்லை.” என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் குறிப்பிட்டிருந்தார். அந்தச் செவ்வி மே மாதமளவில் வெளியான போதும், அது பொதுத் தேர்தல்க் காலத்திலேயே கூட்டமைப்புக்கு எதிரான அணியினால் பயன்படுத்தப்பட்டதன் மூலம் பெரியளவில் கவனம் பெற்றது.
ஆக, கூட்டமைப்பின் அதிகார பீடத்துக்குள் இருக்க விரும்பிய விக்னேஸ்வரனுக்கு அதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டபோது, அவர் புதிய வழிகளைத் தேடுவது பற்றிச் சிந்தித்தார். அப்போது அவரோடு இருந்த சிலர் அளித்த நம்பிக்கைகளுக்குப் பின்னர், அவர் கூட்டமைப்புக்கு எதிராகப் பொதுத் தேர்தல் காலத்தில் நடந்து கொண்டார். ஆனாலும், அவர் விரும்பிய செய்தியைத் தமிழ் மக்கள் வழங்காத புள்ளியில் தவித்து நின்றார். அது, கூட்டமைப்போடு ஒட்டவும் முடியாத விலகவும் முடியாத நிலை.
இந்தப் புள்ளியைப் பிடித்துக் கொண்ட கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி, கஜேந்திரகுமாரை விட்டுவிட்டு விக்னேஸ்வரனைத் தமது தலைமையாக முன்னிறுத்த ஆரம்பித்தது. இதன் பின்னர்தான், ‘பிரபாகரனுக்குப் பின்னர் விக்னேஸ்வரனே’ என்கிற உரையாடலை புலம்பெயர் தேசங்களிலிருந்த சிலரும், ஊடகங்களும் முன்னெடுக்க ஆரம்பித்தன. ஆரம்பத்திலிருந்து தமிழ் மக்களில் அநேகரினால் இந்த ஒப்பீடு இரசிக்கப்படவில்லை. அதனால், அந்த ஒப்பீடு மெல்ல மெல்லக் காணாமற்போயிருந்தது. இப்போது, ‘எழுக தமிழ்’ பேரணிக்குப் பின்னர் அந்த ஒப்பீட்டினைப் புலம்பெயர் தளத்தின் ஒரு பகுதியும் மாற்று அணியின் முக்கியஸ்தர்கள், கொள்கை வகுப்பாளர்களும் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தவறான அரசியல்த் தீர்மானத்தின் விளைவே தந்தை செல்வாவின் ஆளுமை எழுச்சியும் தமிழரசுக் கட்சியின் தோற்றமும் ஆகும்.
ஜி.ஜி.பொன்னம்பலம், ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து இணக்க அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்த தருணமும் அப்போது அவர் மேற்கொண்ட தவறான தீர்மானங்களும் தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தப் புள்ளியைப் பிடித்துக் கொண்ட தந்தை செல்வா, அதனை உணர்ச்சிகரமான புள்ளியாக மாற்றிக் கொண்டு தமிழரசுக் கட்சியின் எழுச்சியைத் தீர்மானித்தார். அவர் அந்தப் புள்ளியைத் தவற விட்டிருந்தால், தமிழ்த் தேசிய அரசியலின் தந்தையாக வளர்ந்திருக்க முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சியும் கோலோச்சுகையும் விடாப்பிடியான தீர்மானங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்களினால் உருவானது. தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் கைகளில் சென்ற ஆரம்பப் புள்ளியில் விடுதலைப் புலிகள் இயக்கம் மூன்றாம் நான்காம் நிலையிலேயே இருந்தது. ஆனால், குறுகிய காலத்துக்குள்ளேயே தங்களின் மூர்க்கமான போர்க்குணம் மற்றும் கொள்கைகளுக்காக யாருமே செய்யத் தயங்கும் தியாகங்களை மிக இலகுவாகச் செய்ய ஆரம்பித்ததுமே புலிகளை முதலிடத்தில் கொண்டு சேர்ந்தது. அது, மக்களை ஒட்டுமொத்தமாகப் புலிகளின் பின்னால், அதாவது, தலைவர் பிரபாகரன் பின்னால் செல்ல வைத்தது.
கூட்டமைப்பு அரசியல்த் தீர்மானங்களில் தவறிழைக்கின்றது என்று தீர்க்கமாகக் கூறி, புதிய தலைமையொன்றை ஏற்பதற்குரிய திடமோ அல்லது, தலைவர் பிரபாகரன் பின்னால் மக்களைத் திரளச் செய்த மூர்க்கமான போர்க்குணமோ விக்னேஸ்வரனிடம் இல்லை. அப்படியான தருணத்தில் எந்த எண்ணப்பாட்டின் பிரகாரம் விக்னேஸ்வரனைத் தந்தை செல்வா மற்றும் தலைவர் பிரபாகரனின் தொடர்ச்சியாகக் கொள்வது?
அடுத்து, விக்னேஸ்வரனை ஏன் மைத்திரி போன்று வெற்றிகரமான கருவியாகக் கையாள முடியாது என்கிற விடயம் வருகின்றது. மஹிந்த என்கிற அதிகாரப் பீடத்துக்கு எதிராக ரணில் என்கிற சாணக்கியம் மிக்க தலைமைத்துவமே மைத்திரி என்கிற கருவியை வெற்றிகரமாகக் கையாண்டது. அதுவும், மைத்திரி என்கிற கருவியைக் களமிறக்குவதற்கு முதல், சரத் பொன்சேகா என்கிற போர் வெற்றி நாயகர்களில் ஒருவரைப் பலிக்கடாவாக்கி, மஹிந்தவின் மீதான அதிருப்தியை தெற்கில் ரணில் வடிவமைத்தார். குறிப்பாக, பொன்சேகாவைக் கைது செய்து மஹிந்த அலைக்கழித்த விடயம், பௌத்த அதிகார பீடங்கள் வரையில் எரிச்சலூட்டியது. பொன்சேகாவுக்காக வீதியில் இறங்குவது வரையில் பௌத்த பீடங்கள் முயன்றன. ஆனால், அதனைத் தன்னுடைய அதிகாரத்தினால் அடக்கிப் பௌத்த பீடங்களின் அதிருப்தி உள்ளிட்ட வெறுப்பினை மஹிந்த சம்பாதித்தார். இவ்வளவையும் திட்டமிட்ட பின்னர்தான், மேற்கு சக்திகளின் ஒத்துழைப்போடு மைத்திரி என்கிற கருவியை ரணில் களமிறக்கினார். ஆனால், சம்பந்தன்- சுமந்திரன் என்கிற அதிகாரப் பீடத்துக்கு எதிராக விக்னேஸ்வரனை யார் களமிறக்குவது? இங்கு மிகுந்த பொறுமையும் சாணக்கியமும் மிக்க ரணில் போன்ற ஆளுமையாக யார் செயற்படக் போகின்றார்கள்?
ஆக, எஞ்சியுள்ள இரண்டு வருட முதலமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின்னர், விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஓய்வுபெற்ற கௌரவமான உறுப்பினரமாக மாறிவிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. மாறாக, அவர் தலைமையேற்பதற்குரிய காட்சிகளைக் காண முடியவில்லை.
Average Rating