உப்பு கூடினாலும் பிரச்னை… குறைந்தாலும் பிரச்னை… உப்பு நல்லதா?

Read Time:8 Minute, 49 Second

salt_001-w245“உப்பிட்டவரை உள்ளளவும் நினை…’ ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே…’

இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு.

கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னை போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வியர்வையும், அதன் மூலம் வெளியேறும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால், அந்த அளவு உப்பு தேவைப்படுகிறது. அதுவே குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது.

உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால் பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.

கூடினாலும் பிரச்னை… குறைந்தாலும் பிரச்னை…
உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

யாருக்கு எவ்வளவு உப்பு?
சாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்…
ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்… இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில் சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.

அயோடைஸ்ட் உப்பு நல்லதா?
கல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின் என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற நம்மைப் போன்ற மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும்.

அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.

எந்த உணவில் எவ்வளவு உப்பு?
(ஒவ்வொரு 100 கிராமிலும்)

தானியங்கள் – 4 முதல் 18 மி.கி.

பருப்பு வகைகள் – 20 முதல் 95 மி.கி.

உப்பு சேர்த்த வேர்க்கடலை – 16 முதல் 41 மி.கி.

பால் மற்றும் பால் பொருள்கள் – 50 மி.கி.

(பசும்பாலில் உப்பு சற்று அதிகம். உப்பு சேர்த்த வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால் அவற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.)
அசைவ உணவுகளில் முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றில் உப்பு உண்டு.பன்றிக்கறியிலும், கருவாட்டிலும் அதிகளவில் இருப்பதால், உப்பின் தேவை அதிகமிருப்போருக்கு மட்டுமே இவற்றைக் கொடுக்க வேண்டும்.

காய்கறிகள் – 4 முதல் 71 மி.கி.

பழங்கள் – 1 முதல் 3 மி.கி.

காய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவுதான். ஆனாலும், காய்கறி மற்றும் கீரைகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகம்.

இளநீரிலும் பொட்டாசியம் அதிகமுண்டு. அதனால்தான் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கச் சொல்கிறார்கள்.

இளநீர் குடித்ததும், அவர்கள் புத்துணர்வாகி, எழுந்து உட்கார்வதைப் பார்க்கலாம். அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம் தான்… உப்பு!

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்?.. யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!
Next post கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம குகை! பல தகவல்கள் அம்பலம்…!!