கருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன?.. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்..!!
இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு தனது பொறுப்பில் தரப்படவேண்டும் என்பது ரணிலின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அரசியல் அமைப்பு அதற்கு இடமளிக்காது என்பது சந்திரிகாவின் வாதமாக இருந்தது.
இப் பின்னணியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் ஜே வி பி உடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுத்து வந்தனர்.
இவர்கள் அவ் வேளையில் பலமான சக்தியாக காணப்பட்டதால் தேர்தல் ஏற்படின் ஐ தே கட்சியைத் தோற்கடிப்பதற்கு அவ்வாறான கூட்டணி அவசியம் எனக் கருதினர்.
எவ்வாறாயினும் ஆட்சியில் இருப்பதற்காக பல்வேறு தந்திரங்களைக் கையாள தயாராக காணப்பட்டனர்.
உதாரணமாக ஜே வி பி உடனான கூட்டணி முயற்சிகள் சாத்தியப்படாவிடின் ஐ தே கட்சியுடன் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைக்கவும் தயாராக இருந்தனர்.
2003ம் ஆண்டின் பிற்பகுதி இவ்வாறான சிக்கல்களுடன் காணப்பட்ட நிலையில் 2004ம் ஆண்டு புலிகள் தரப்பில் நிலையான அரசு அமையவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
வன்னியில் தமிழ்ச்செல்வன், லண்டனில் பாலசிங்கம், எரிக் சோல்கெய்ம் ஆகியோர் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்தனர்.
ஜனவரி 20ம் திகதி சிறீலங்கா சுதந்திரக்கட்சி – ஜே வி பி இணைப்பு உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும் இவ் இணைப்புக் குறித்து புலிகள் தரப்பில் பெரும் திருப்தி காணப்படவில்லை. பதிலாக இது மீண்டும் உக்கிரமான போரைத் தொடர்வதற்கான கூட்டணி என பாலசிங்கம் கருதினார்.
சிங்கள பெரும்பான்மைச் சக்திகளிடையே காணப்பட்ட இவ் இணக்கம் சிங்கள பெரும்பான்மையின் எண்ணத்தைத் தொடர்வதற்கான கூட்டணியே என அரசியல் அவதானிகளும் கருதினர்.
இக் காலப் பகுதியில் இலங்கை- இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிய முயற்சிகள் இடம்பெற்று வந்தது.
இவ் ஒப்பந்தம் சாத்தியமானால் ராணுவச் சமநிலையில் குழப்பம் ஏற்படும். அத்துடன் சிங்கள தேசியவாத சக்திகள் மேலும் உற்சாகமடைந்து போரை நோக்கிச் செல்லுமானால் சமாதானத்திற்கான வாய்ப்புக் குறையும் எனக் கருதி அவ்வாறான ஒப்பந்தம் குறித்த தமது கவலையை நோர்வே மூலமாக பாலசிங்கம் இந்தியாவிற்கு வெளிப்படுத்தியிருந்தார்.
பலரும் எதிர்பார்த்தது போலவே சந்திரிகா திடீரென தேர்தலை வைக்கப்போவதாக பெப்ரவரி 7ம் திகதி அறிவித்து தேர்தலுக்கான நாளாக ஏப்ரல் 2ம் திகதியை நிர்ணயித்தார்.
அரசாங்கத்தில் காணப்பட்ட நிலையற்ற தன்மையினால் நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் நான்கு வருட காலத்தில் நடத்தப்படும் மூன்றாவது தேர்தலாகவும் அது அமைந்தது.
இவ் அறிவித்தல் ரணில் அரசிற்கு பெரும் சவாலாக அமைந்தது. தம்மால் மேற்கொள்ளப்ட்ட சமாதான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
அதே போன்று புலிகள் தரப்பினரும் இத் தேர்தல் அறிவிப்பு சமாதான முயற்சிகளில் பெரும் பின்னடைவு எனக் கூறிய போதிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடந்தும் அமுலில் இருக்கும் எனவும், இத் தேர்தல் சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சக வாழ்வு, சமாதானத்தை நோக்கிச் செல்வதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு என அறிவித்தனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ஜ இனது நேர்காணல் நோர்வே தொலைக் காட்சியில் பெப்ரவரி 17ம் திகதி வெளியானது.
ஐ தே கட்சி சமாதானத்தை தமது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப்படுத்துவதாகவும், இதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முனைவதாகவும், தற்போதைய முயற்சிகளில் எதிர்க்கட்சியோடு கலந்துரையாடத் தவறியது பெரும் தவறு எனவும், தாம் பதவிக்கு வந்தால் பரந்த அளவிலான சமாதான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இப் பேட்டி வெளியான அதே தினத்தில் தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையும் வெளியானது. இத் தேர்தலில் சிங்கள சக்திகள் தமிழ்ப் பகுதிகளில் வேருன்ற தமிழ் மக்கள் இடமளிக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இத் தேர்தல் பிரச்சாரங்களின்போது அங்கிருந்த எரிக் சோல்கெய்ம் அத் தேர்தலில் ஐ தே கட்சி தோல்வி அடையும் என்பதை தாம் உணர்ந்திருந்ததாக தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம் ரணில், மிலிந்த மொறகொட, ஜி எல் பீரிஸ் போன்றோரைச் சந்தித்தாகவும், அவர்கள் பிரதான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும், பிரச்சாரத்திற்காக தொலைக்காட்சி, வானொலி என்பவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும், பதிலாக ஒலி பெருக்கிகளையே அதிகளவில் பயன்படுத்தினார்கள் என்கிறார்.
தமது அரசியல் நோக்கங்கள் என்ன? அதனை எவ்வாறு எடுத்துச் சொல்வது? என்பது பற்றி எவ்வித திட்டங்களும் இருக்கவில்லை. அவர்களின் தோல்வி எதிர்பார்த்ததுதான் என்கிறார் சோல்கெய்ம்.
தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தை அடைந்த வேளையில் கிழக்கு மாகாண புலிகளின் தலைமையில் உடைவு ஏற்பட்டது.
கருணா கிழக்கு மாகாண புலிகளின் ராணுவத் தலைமையைப் பொறுப்பேற்றதோடு தம்முடன் தனியான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசையும், நோர்வேயையும் கோரினார்.
கருணாவின் அறிவிப்பு 2004ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி வெளியானபோது பலருக்கு ஆச்சரியம் அளித்தது.
இவ் விலகல் தொடர்பாக கருணா சார்பில் பேசிய வரதன் என்பவர் தெரிவிக்கையில் புலிகளின் வன்னித் தலைமை 1000 போராளிகளை வன்னிக்கு அனுப்புமாறு கோரியதாகவும், தாம் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும், கிழக்கில் இருவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அவர்களில் ஒருவர் ஐ தே கட்சியின் சார்பில் போட்டியிட இருந்தவர் எனவும், தம்மைச் சுட்டது புலிகளே என மரணமடைந்தவர் தெரிவித்தததாகவும் வரதன் தெரிவித்தார்.
இவை உடனடிக் காரணங்களாக காணப்பட்ட போதிலும் மேலும் பல குற்றச்சாட்டுகள் வரதனால் முன்வைக்கப்பட்டன.
புலிகளின் வடக்குத் தலைமை கிழக்கு மாகாண புனர்வாழ்வு, புனரமைப்பு போன்றவற்றிற்குப் போதமான வளங்களை ஒதுக்கீடு செய்யவில்லை எனவும், புலிகளின் உயர் நிர்வாகக் கட்டுமானங்களில் கிழக்கு மாகாணத்தவருக்கு போதிய இடங்கள் வழங்கப்படவில்லை எனவும், அது மட்டுமல்லாமல் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன் மொழிவுகளில் கூறப்பட்ட 30 உறுப்பினர்களில் மட்டக்களப்பு, அம்பாறையைச் சார்ந்த எவருக்கும் இடமளிக்கப்படவில்லை எனவும்,
வெளி நாடுகளில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினால் சேகரிக்கப்பட்ட பணத்தில் மிகக் குறைந்த தொகையே வழங்கியதாகவும், வடக்குத் தலைமை சுகபோகத்தில் வாழ, கிழக்கு மாகாண போராளிகள் பாதுகாப்பு அரண்களில் காவலிற்கு நிறுத்தப்பட்டதாகவும், ராணுவத்துடனான போரில் அவர்களே அதிகளவில் உயிரிழந்தார்கள்.
நாம் இளைஞர்களைத் திரட்டியபோது போராட்ட களங்களுக்கு புதியவர்களை அனுப்புவதில்லை எனப் பெற்றோரிடம் கூறியதாக தெரிவித்தனர்.
சமாதான காலத்தில் இவ்வளவு பெரும் தொகையானவர்களை வன்னிக்கு அனுப்புவதாயின் பெற்றோருக்கு என்ன பதிலைக் கூறுவது? என வரதன் கேள்வி எழுப்பினார்.
பிரிந்த சில தினங்களில் பி பி சி வானொலியின் செவ்வியின் போது இவ்வளவு பெருந் தொகையான போராளிகளை கோரியமைக்குக் காரணம் அவர்கள் மீண்டும் போரிற்குத் தயாராவதாக தான் சந்தேகம் கொண்டதாக கருணா தெரிவித்திருந்தார்.
ஆனால் புலிகளின் தலைமை இப் பிரச்சனை குறித்து தெரிவிக்கையில்..,
கருணாவை கிழக்கு மாகாண ராணுவப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பதாகவும் பதிலாக அவரது உதவியாளரான ரமேஷ் விசேட ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கருணாவின் விலகல் ராணுவ விடயங்களில் பெரும் பாதிப்பைத் தரவில்லை எனவும், சமாதானத்தில் தாக்கம் எதுவும் இல்லை எனவும் தமிழச்செல்வன் தெரிவித்திருந்தார்.
இரு தரப்பினரும் பலமான ஆயுதங்களை தமக்குள் குவித்துள்ள அதே வேளை குற்றச் சாட்டுகளையும் மாறி மாறிக் குவித்தனர்.
கருணா நிதி மோசடியில் ஈடுபட்டதோடு, தனிப்பட்ட பிரச்சனைகளும் அவருக்கு இருந்ததாக புலிகளின் தலைமை கூறியது.
பதிலுக்கு கருணா தரப்பினர் பொட்டு அம்மான், நடேசன், தமிழேந்தி ஆகியோரை விலக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக பொட்டு அம்மானை பயங்கரவாதி எனக் கறிப்பிட்ட அவர்கள் எனைய இருவரும் புலிகள் அமைப்பில் இருக்கத் தகுதி அற்றவர்கள் எனவும், ஏனெனில் அவர்கள் இந்திய ராணுவம் இங்கிருந்து வேளை சரணடைந்தவர்கள் எனக் குற்றம் சாட்டினர்.
பதிலுக்கு புலிகள் தரப்பினர் அம் மூவருமே இவ் விசாரணைகளை மேற்கொண்டார்கள் என்பதால் அவர்களை கருணா குறி வைப்பதாக விளக்கம் அளித்தனர்.
கருணாவைப் படுகொலை செய்ய பொட்டு அம்மான் தலைமையிலான குழு கிழக்கிற்கு வந்திருப்பதாக மார்ச் 9ம் திகதி வரதன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் இரத்தக் களரியைத் தவிர்க்கும் பொருட்டு பிரச்சனைகளைப் பேசித் தீர்க்குமாறு புலிகளின் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை தம்முடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு நோர்வே தரப்பிரை கருணா கோரினார்.
நிலமைகள் மிக மோசமாகிச் சென்றதைக் கவனத்தில் கொண்ட அரசியல் ஆய்வாளர்கள் புலிகளுக்கு உள்ள மாற்று வழிகள் என்ன? என ஆருடம் கூறத் தொடங்கினர்.
அதாவது தமது வழமையான பாணியில் கருணாவைப் படுகொலை செய்வது அல்லது, கிழக்கு மாகாண ராணுவத் தலைமையை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வது அல்லது பேசித் தீர்ப்பது.
இப் பிரச்சனையில் தாம் தலையிடுவதில்லை எனத் தெரிவித்த எரிக் சொல்கெய்ம், கருணா மீது தாக்குதல் மேற்கொண்டால் அது சமாதான முயற்சிகளைப் பாதிக்கும். அத்துடன் போர்நிறுத்த ஒப்பந்த மீறலாகும் எனத் தெரிவித்தனர்.
கருணாவின் விலகல் உள்ளார்ந்த அடிப்படையில் பாரிய பிரச்சனைகளை கொண்டுள்ளது.
ஒரு புறத்தில் பிரதேச பாகுபாடு காட்டப்பட்ட அதே வேளையில் கருணா – பொட்டு என்ற அம்மான்களிடையே காணப்பட்ட அதிகாரப் போட்டியாகவும் காணப்பட்டது.
இதன் விளைவு பல நூறு உயிர்களைக் காவு கொண்டுள்ளது.
( இவ் விபரங்கள் அடுத்த வாரம்)
Average Rating